12-நிறைமதியன்

அப்பளக்குடுமி தாத்தா உள்பட சிறுவர், சிறுமியர்கள் கூடி இருந்தார்கள்.

தாத்தா கதை சொல்ல ஆரம்பித்தார். அப்போது….

கூட்டத்தில் “போடா நொண்டி” என்று குரல் கேட்டு தாத்தா திரும்பினார்.

“கால் ஊனம் என்பதற்காக கேலி பேசக்கூடாது. ஒருவர் உடல் ஊனமாக இருக்கலாம். ஆனால், மனம் வலுவாக இருக்கும்.”

அதற்கு ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள் என்றார்.

ஒரு ஊரில் ஏழு அண்ணன்களும், ஒரு தங்கையும் இருந்தார்கள். அதில் கடைசி அண்ணனுக்கு ஒரு கால் நொண்டி அவனது பெயர் நிறைமதியன்.

  தம்பியை அண்ணன்கள் அவ்வளவாக கவனிப்பதே கிடையாது. இருந்தாலும் கடைசி தம்பி தன்னம்பிக்கையையும், புத்தி கூர்மையும் உள்ளவனாக விளங்கினான்.

தங்கை கமலாவிடம் அண்ணன்களுக்கு மிகுந்த அன்பு. அவளை அவர்கள் கண்ணிமை போல் காத்து வந்தார்கள். தங்கை ‘எள்’ என்றால் இவர்கள் ‘எண்ணெயாக’ நின்றார்கள்.

எது கேட்டாலும் வாங்கிக் கொடுத்து அவளை சந்தோசமாக வளர்த்து வந்தார்கள்.

அவளும் பெரியவளாக வளர்ந்து விட்டாள் . தங்கப்பதுமை போல் காணப்பட்டாள். வளர்ந்து விட்டாளே ஒழிய குறும்புத்தனமும், சிறுபிள்ளைத் தனமும் இருந்து கொண்டே இருந்தது.

ஒரு நாள் அவள் தோழிகள் எல்லோரும் பக்கத்தில் இருக்கும் தோப்பிற்கு எலந்தப் பழம் பறிக்கச் சென்றார்கள்.

கமலாவையும் அழைத்தார்கள். அவளும் அண்ணனிடம்  சொல்லிவிட்டு தோழிகளுடன் சென்றாள்.

பெண்களாகச் சேர்த்தால் அரட்டைக்கு பஞ்சமா?
என்ன!

பேச்சும், சிரிப்பும், கேலியுமாக தோப்பிற்கு சென்று மரத்தில் ஏறி பழம் பறித்தார்கள்.

மரத்தின் உச்சியில் நல்ல பழமாக இருப்பதைக் கண்ட கமலா சற்றும் யோசிக்காமல் மளமள என்று ஏறிவிட்டாள்.

பழம் பறிக்கும் மும்மரத்தில் யாரையும் கவனிக்காது பறித்துக் கொண்டு இருந்தாள்.

தோழிகள் எல்லோரும் மரத்திலிருந்து கீழே இறங்கியதை கவனிக்கவே இல்லை கமலா.

தோழிகள் எல்லோரும் கமலா மரத்தின் உச்சியில் இருப்பதை கவனிக்காமல், அனைவரும் வீட்டிற்கு சென்று விட்டார்கள்.

சில மணி நேரம் கழித்து தான் நிலைமையை புரிந்து கொண்டாள் கமலா.

தன் தோழிகள் தன்னை கவனிக்காது போய்விட்டதை நினைத்து வருந்தினாள்.
அதற்குள் இருட்டத் தொடங்கிவிட்டது.

இனி எப்படி தனியாகப் போவது என பயந்து கீழே இறங்காமல் அப்படியே மரத்தில் உட்கார்ந்து விட்டாள் கமலா.

தோழிகள் எல்லோரும் பேசிக் கொண்டே வந்ததால் .  கமலாவை கவனிக்கவே இல்லை அவள் வீடு வரும் போது தான் அவள் எங்கே என பார்த்து திடுக்கிட்டனர்.

எல்லோருக்கும் பயம் வந்துவிட்டது. கமலா மீது அண்ணன்கள் வைத்திருக்கும் பாசம் எல்லோருக்கும் தெரியும்.எனவே, தயங்கியபடி கமலா வரவில்லை என்பதை திக்கி… திக்கி கூறி முடித்தார்கள்.

இவர்கள் மேல் வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு இருட்டிவிட்டது தங்கை தனியாக இருப்பாளே!

அந்தப் பகுதியில் புலி, சிங்கம் நடமாடுவதாக கூறுவார்கள். தங்கையின் நிலை என்னவோ!ஏதோ!என ஆறு அண்ணன்களும் புறப்பட்டார்கள்.

கடைசி அண்ணனும் வருவேன் என்று கூறவே வேண்டாம். நீ இங்கே இரு. நாங்கள் சீக்கிரம் திரும்பி விடுவோம் என்று கூறிவிட்டு தங்கையைத் தேடிப் புறப்பட்டார்கள்.

தனியாக இருந்த கமலாவிற்கு இருட்ட… இருட்ட பயத்துடன் நடுக்கமும் வந்துவிட்டது.

என்ன செய்வது என்று தெரியாமல் அழுது கொண்டே இருந்தாள்.

அப்போது அந்தப் பக்கமாக வந்த சிங்கம் அழும் குரல் கேட்டு மரத்தின் உச்சியைப் பார்த்தது.

அழகு தேவதை போல் ஒரு பெண் அமர்ந்திருப்பதைக் கண்டு ஆனந்தக் கூத்தாடியது.

இவ்வளவு அழகான பெண்ணை இதுவரை நான் பார்க்கவே இல்லை. இந்தப் பெண்ணை நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என எண்ணியது.

எப்படியும் நம் இருப்பிடம் கூட்டிக் கொண்டு போய் விட வேண்டும் என்று எண்ணிய சிங்கம்.

கமலாவைப் பார்த்து, “பெண்ணே! பெண்ணே” உன் கையால் ஒரு பழம் போடு என்று கேட்டது.

அவளும் சிங்கத்தைப் பார்த்து பயந்து, ஒரு பழம் போட்டாள்.

உன் தலையால் ஒரு பழம் போடு என்ற சிங்கம் மீண்டும் கேட்டது.

அவளும் தலைமேல் வைத்து ஒரு பழம் போட்டாள்.

உன் காலால் ஒரு பழம் போடு என்று சிங்கம் கூறியது. 

அவளும் கால் இடுக்கில் வைத்து ஒரு பழம் போட்டாள்.

உன் முடியால் ஒரு பழம் போடு என்றது சிங்கம். அவள் முடியில் கட்டி ஒரு பழத்தை கீழே போட்டாள். 

இதை எதிர் பார்த்த சிங்கம் அவள் முடியை பிடித்து அப்படியே இழுத்தது.

அவளும் கீழே விழுந்தாள் விழுந்ததும் பயத்தில் மயக்கமாகி விட்டாள்.

சிங்கம் தன் முதுகில் கமலாவை வைத்துக் கொண்டு தன் குகைக்குத் தூக்கிச் சென்றது.

அண்ணன்கள் ஆறு பேரும் வந்து கமலா… கமலா என்று தேடினார்கள். கமலாவை காணாமல் அழுது புலம்பினார்கள். கமலா இல்லாமலே வீடு திரும்பினார்கள்.

மீண்டும் தங்கையைத் தேடிப் போக  கட்டிச்சோறு செய்து கொண்டனர்.

“நொண்டிக்குத் தவிட்டுக் களியும், கொக்கு கறியும் கொடுத்து கிளம்ப ஆயத்தமானார்கள்.

இதைக் கவனித்த நிறைமதியனும் நானும் தங்கையைத் தேடி வருவேன் என அடம்பிடித்தான்.

இவனுடன் தொந்தரவாகப் போய் விட்டது, என்று அவனையும் வண்டியில் ஏற்றிக்கொண்டு கிளம்பினார்கள்.

ஊர் எல்லையைக் கடக்கும் வரைத் தேடியும் கமலா கிடைக்கவில்லை. காட்டுப் பகுதிக்கு வந்து விட்டார்கள்.

பசி தாங்கவில்லை சரி சாப்பிடலாம் என சாப்பாட்டை எடுத்தார்கள். ஆறு பேர் கொண்டு வந்த சாப்பாடும் ஊசி விட்டது.

நொண்டி கொண்டு வந்த களிமட்டும் அப்படியே இருந்தது.

ஊசிப் போன சாப்பாட்டை எப்படி சாப்பிடுவது, பசி வேறு கண்ணை இருட்டிக் கொண்டு வருகிறது. சாப்பிடவில்லை என்றால் தங்கையைத் தேடி போக முடியாமல் போய்விடும். வேறு வழி இல்லாமல் நொண்டித் தம்பியிடம் எங்களுக்கு கொஞ்சம் களி கொடு என்று கேட்டார்கள்.

கவிஞர் ச. மல்லிகா எழுதும்  கதை தொடரும்.

Share.

Leave A Reply