18-அன்றன்டா பட்சி
சிறுவர்கள் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தார்கள்.
அதில் சிலர் நீச்சல் அடித்து அக்கரைக்கு சென்று வந்தார்கள்.
அதில் ஒரு சிறுமி நீச்சல் தெரியாமல் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவள், தண்ணீரில் தள்ளி… தள்ளி ஓரத்தில் குளித்துக் கொண்டிருந்தாள்.
‘திடீர்’ என தண்ணீரில் மூழ்கி விட்டாள். அவள் உயரத்திற்கு மேல ஆழம் உள்ள இடத்திற்கு வந்ததன் விளைவு.
எதிர் பார்க்காமல் தண்ணீரில் மூழ்கியதால் அவளால் கத்தக் கூட முடியவில்லை.
கண்கள் தடுமாற தண்ணீரைக் குடித்து விட்ட சிறுமி மூங்கி மேலே வந்தாள்.
அதை கவனித்த முரளி நீந்தி வருவதற்குள் மறுமுறை மூழ்கி விட்டாள்.
எங்கே என பார்ப்பதற்குள் மேலே வந்தாள் சிறுமி. அவள் முடியை பிடித்துக் கொண்டான் முரளி.
அப்படியே கரைக்கு இழுத்து வந்தான் முரளி.
அதற்குள் பெரியவர்கள் எல்லாம் வந்து அவளை காப்பாற்றி விட்டார்கள்.
அன்று மாலை தாத்தாவிடம் கதை கேட்க வந்த சிறுவர்களிடையே இதே பேச்சு.
நல்ல வேலை முரளி மட்டும் பார்க்கவில்லை என்றால், அந்த சிறுமி நினைக்கவே பயமாக இருக்கிறது எனக் கூறிக் கொண்டார்கள்.
இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த தாத்தா பேச ஆரம்பித்தார்.
முரளியை கூப்பிட்டு முதுகில் தட்டிக் கொடுத்தார்.
“சிறுவர்களே! இன்று முரளிதான் நமக்கு கதாநாயகன்.”
அவன் ஒரு உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. அதனால் லாபம் கிடைக்குமா? என ஆராயவில்லை. இப்படிப்பட்ட உதவிதான் உண்மையிலேயே சிறந்தது என பாராட்டிய தாத்தா.
“இதுபோல் பிரதிபலன் கருதாமல் செய்த உதவியைப் பற்றி உங்களுக்கு கதை சொல்ல விரும்புகிறேன்” என்றார் தாத்தா.
“சொல்லுங்க தாத்தா” என எல்லோரும் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள்.
தாத்தா கதை சொல்ல ஆரம்பித்தார்
*****
ஒரு ஊரில் கணவனும், மனைவியும் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு எல்லா செல்வங்களையும் கொடுத்த இறைவன் கொஞ்சி விளையாட ஒரு குழந்தைச் செல்வத்தைக் கொடுக்க மறந்துவிட்டார்.
சுரேஷ் தனது மனைவி சுதாவிற்கு எவ்வளவு ஆதரவாக நடந்து கொண்டாலும் தனக்கு ஒரு குழந்தை இல்லையே என்ற ஏக்கத்தால் அவள் முகம் எப்போதும் வாடியே இருந்தது.
ஒருநாள் அவள் வீட்டின் முன் ஒரு சாமியார் வந்து “அம்மா தாயே அன்னம் கொடு அம்மா” என கேட்டார்.
சுதாவும் சாதத்தை எடுத்து வந்து அவருக்கு கொடுத்தாள்.
சாதத்தை வாங்கிய சாமியார் “அம்மா தாயே! மகாலட்சுமி போல் இருக்கும் நீ சோகமாய் இருப்பதன் காரணத்தை நான் அறியலாமா?”என கேட்டார்.
“அள்ளிப் போட அன்னம் இருக்கு கிள்ளிப் போட பிள்ளை இல்லை” என வருத்தமாக கூறினாள் சுதா.
“அம்மா!கவலைப்படாதே” நான் என் தவ வலிமையால் உனக்கு ஒரு கனி தருகிறேன். அந்த கனியை பூஜை அறையில் வைத்து சாமி கும்பிட்டு அந்த கனியை நீ சாப்பிட்டால் உனக்கு ஒரு மகன் பிறப்பான் என்றார்.
“ அப்படியா!” என முகமலர்ந்தாள் சுதா. எனக்கு அந்த கனியை தாருங்கள் சுவாமி எனக்கேட்டாள்.
நான் கனி தருகிறேன். ஆனால், எனது நிபந்தனையை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார் சாமியார்.
“என்ன? நிபந்தனை சுவாமி! எதுவாக இருந்தாலும் கூறுங்கள்” என்றாள் ஆர்வ மிகுதியால் சுதா.
உனக்குப் பிறக்கும் மகனை நீ ஆறு ஆண்டுகள் உன்னுடன் வைத்துக்கொள். ஏழாவது பிறந்த நாள் அன்று நான் அவனை அழைத்துக் கொண்டு போய் விடுவேன். உனக்கு சம்மதம் என்றால், கனியைப் பெற்றுக் கொள், என்றார் சாமியார்.
குழந்தையே இல்லாத தனக்கு குழந்தை பிறந்தால் போதும் என்ற மனநிலையில் ‘சரி’ என்ற சுதா கனியைப் பெற்றுக் கொண்டாள்.
சாமியார் விடைபெற்றுச் சென்றார்.
‘ கனியை’ பயபக்தியுடன் எடுத்துச் சென்று பூஜை அறையில் வைத்து வணங்கினாள் சுதா.
பின் கனியை சாப்பிட்டாள். தனக்கு குழந்தை பிறக்கும் என்ற சந்தோசத்தில், அன்று மலர்ந்த மலர் போல் மகிழ்ச்சியின் எல்லைக்கே போய்விட்டாள் சுதா.
வேலைக்குப் போயிருந்த சுரேஷ் வீட்டிற்கு வந்தான்.
சுதாவின் மலர்ந்த முகத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டு போனான். சுதா நீ என் சுதா தானா? என தன்னைக் கிள்ளிக் கொண்டான் சுரேஷ்.
“போங்க” என வெட்கப்பட்டாள் சுதா.
“இப்படிப் பார்த்து எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்று என்ன விசேஷம்?” என்று அவளை அருகில் அமர வைத்து கேட்டான் சுரேஷ்.
சுதாவும் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் சொன்னாள். கடேசியில் சொன்னவை சுரேஷைப் பாதித்தது. ஆறு ஆண்டுகள் வளர்ந்த மகனை சாமியாரிடம் கொடுப்பதா! என வருத்தப் பட்டாலும் மனைவியின் சந்தோசம் சில வருடங்களுக்காவது நிலைக்கட்டும் என்று ஒன்றும் சொல்ல வில்லை.
சுதாகவும் கர்ப்பம் அடைந்தாள். மாதங்கள் கடந்தன.பத்தாவது மாதம் அழகான ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தாள்.
குழந்தைக்கு சுதாகர் எனப் பெயர் இட்டு சீரும், சிறப்புடன் வளர்த்தார்கள்.
சுதாகரன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்ந்தான். ஐந்தாவது வயதில் அவனைப் பள்ளியில் சேர்த்து அகம் மகிழ்ந்தார்கள் அவன் வளர்ச்சி கண்டு.
வயதுக்கு மீறிய அறிவும், ஆற்றலும் அவனுக்கு இருந்தது. அதைக்கண்டு மகிழ முடியாமல் துக்கம் தொண்டையை அடைத்தது சுதாவிற்கு.
இன்னும் ஓர் ஆண்டுதான் நம் மகன் நம்முடன் இருப்பான். பின் பிரிவுதான் என நினைக்கும் போதே சுதாவின் கண்கள் குளமாகிவிடும்.
மகன் இருக்கும் போது எந்தவிதச் சலனமும் இல்லாமல் சந்தோஷமாக இருக்கும் சுதாவும், சுரேஷ்சும்…
சுதாகர் பள்ளி சென்ற பின் தங்கள் மகன் பிரிவை எப்படி தாங்கிக் கொள்வது என வருத்தப்பட்டார்கள்.
கவிஞர் ச. மல்லிகா எழுதும் கதை தொடரும்.