17- சிக்கனத்தின் சிறப்பு

“தாத்தா… தாத்தா இங்கே பாருங்க தாத்தா…” என ஓடி வந்தாள் பூமா.

“என்ன? பூமா” என, அன்புடன் அழைத்து அருகில் அமர வைத்துக் கொண்டு கேட்டார் அப்பளக்குடுமி தாத்தா.

“எங்க அம்மா சந்தையில் ஒரு உண்டியல் வாங்கி தந்தார்கள். அதில் காசு போட்டு சேர்த்து வருகிறேன்” தாத்தா என்றாள்.

இன்று எங்க அண்ணன் ஐம்பது பைசா தந்தார்கள். 25 காசுக்கு வாங்கி சாப்பிட்டோம் தாத்தா”என மூச்சு வாங்கிக் கொண்டாள் பூமா.

இந்த 25 காசுக்கும் வாங்கி சாப்பிடச் சொல்கிறாள் ஜெயா. நான் இதை உண்டியலில் போட வைத்திருக்கிறேன். என்றாள் பூமா.

அதனால் என்ன? என்றார் தாத்தா.

  25 காசை பறிக்க வருகிறாள் என்றாள் பூமா.

ஜெயா இங்கே வா! என அழைத்தார் தாத்தா.

உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன். பிறகு இது பற்றி பேசுவோம் என்றார் தாத்தா.

ஒரு கிராமத்தில் மணிமேகலையும் அவள் கணவன் கோபுவும் வசித்து வந்தார்கள்.

கோபு விவசாயம் செய்து வந்தான். மணியும் சும்மா இருக்காமல் ஒரு பசு மாடு வாங்கி பால் வியாபாரம் செய்தாள்.

அதில் வரும் வருமானத்தை சேமித்து வைத்தாள்.

எந்த குறையும் இல்லாமல் நிறைவான குடும்பம் நடத்தினாள்.

மணி வீட்டின் எதிர் வீட்டில் விசாலமும் அவள் கணவன் கோதண்டமும் வசித்து வந்தார்கள்.

கோதண்டனும் ஒரு விவசாயி தான். விசலாம் இருபது கறவை மாடுகள் வைத்திருந்தாள்.

பால், தயிர், நெய் என வியாபாரம் செய்து வந்தாள்.

பணம் சம்பாதிப்பதே குறிக்கோளாக இருந்ததால் தங்களுக்கு என்று பால் எதுவும் வைத்துக் கொள்வதில்லை. பால், நெய் அனைத்தையும் விற்று விடுவாள்.

  சம்பாதிக்கும் பணத்தையும் திட்டம் போட்டு செலவு செய்ய மாட்டாள். ஊதாரித் தனமாக செலவு செய்து விடுவாள். வீட்டிற்கு வரும் திடீர் உறவினர்களுக்கு காப்பி போடக் கூட பால் இல்லாமல் போகும் சமயங்களில் எதிர்த்த வீட்டு மணியிடம் சென்று பால் வாங்கி வருவாள்.

மணி பணம் கேட்டால் பிறகு தருகிறேன் என்பாள்.

இப்படியாக விசாலம் வாங்கிய பால் கணக்கு 500 ரூபாய் ஆகிவிட்டது.

விசாலத்திடம் கேட்டு…. கேட்டுப் பார்த்தும் பணம் வாங்க முடியவில்லை.

எனவே, எப்படி பணத்தை வாங்குவது என மணி யோசனை செய்தாள்.

ஒரு முடிவுக்கு வந்தவளாக மணி அன்று இரவு நிம்மதியாக தூங்கினாள்.

காலையில் உதயத்திற்கு முன் எழுந்த மணி மாட்டு வேலை, வீட்டு வேலை எல்லாம் முடித்தாள்.

தனது கணவனை வயல் காட்டுக்கு அனுப்பி விட்டு அந்த ஊர் நாட்டாமை வீட்டை நோக்கி நடந்தாள்.

  நாட்டாமை  ரங்கராஜன் என்றால் சுற்றுப்பட்டி எட்டு கிராமத்திற்கும் ஒரு மரியாதை உண்டு.

அவர் ஒரு தீர்ப்பை சொன்னால் அது மிக நேர்மையாகவும் யாரையும் பாதிக்காத வகையிலும் சொல்வார்.

அவர் இந்த மண்ணையும், மக்களையும் மதிக்கும் பண்புகள் தான் எட்டுப் பட்டியே தலை வணங்கியது.

நாட்டாமை தன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து இருந்தார்.

அவரைக் கண்ட மணி “கும்புடுறேன் ஐயா!”  என்றாள்.

என்ன மணி இம்புட்டு தூரம். என்ன… உன் புருஷன் வயக்காட்டுக்கு போயிட்டானா? என்றார் நாட்டாமை.

“ ஐயா… புண்ணியத்தில் எல்லாம் நல்லா நடக்குதுங்க ஐயா!”

ஆனால், என நிறுத்தினாள் மணி.

“ஆனா… என்ன? ஏம்புள்ள நிறுத்திட்டே சொல்லு” என்றார் நாட்டாமை.

விசாலம் பால் வாங்கியதில் இருந்து இப்ப கொடுக்க மறுப்பது வரை சொன்னாள் மணி.

“அப்படியா…. என யோசித்த நாட்டாமை… அடே… முனியாண்டி அந்த விசாலத்தை கூட்டி வா?” என்றார்.

நாட்டாமை கூப்பிடுகிறார் என்றதும் என்னவோ… ஏதோ… என அரக்கப் பறக்க ஓடி வந்தாள் விசாலம்.

மணி நிற்பதைக் கண்டு ஓரளவு நிலைமையை யோசித்துக் கொண்டாள் விசாலம்.

“என்னங்கய்யா…. வரச் சொன்னீர்களாமே” என்றாள் அடக்கத்துடன் விசாலம்.

“என்ன விசாலம் இந்த மணிக்கு ஏதோ பால் பணம் கொடுக்க
வேண்டுமாமே?” என்றார்.

“ஐயா என்னையா!  சொன்னீங்க…. என்கிட்ட கறவை மாடா 20 மாடு இருக்குங்கய்யா!”

“நான் எதற்கு இந்த மணி கிட்டே போய் பால் வாங்கணும் நீங்களே சொல்லுங்கய்யா!” எனக் கூறினாள் விசாலம்.

“அப்படியா… என்ற நாட்டாமை சரி இரண்டு பேரும் வீட்டுக்கு போய்விட்டு நாளை இந்த நேரத்திற்கு இங்கு வாங்க என்றார்.” நாட்டாமை.

“சரிங்கய்யா” என இருவரும் அவரவர் வீட்டிற்குச் சென்றார்கள்.

“முனியாண்டி” இங்கே வா என்றார் நாட்டாமை.

என்னங்கையா? என அருகில் வந்த முனியாண்டியிடம். “நம்ம வீட்டிற்கு முன் செம்மண்ணைக் கொட்டி தண்ணீரை அதிகமாக ஊற்றி தேங்கி நிற்பது போல் செய்து விடு” என்றார் நாட்டாமை.

“அப்படியே செய்கிறேன் ஐயா” என்ற முனியாண்டி கூடையும், மண்வெட்டியும் எடுக்க உள்ளே சென்றான்.

மடியில் இருந்த துண்டை தோளில் போட்டுக் கொண்டு நாட்டாமையும் வீட்டிற்குள் சென்றார்.

மறுநாள்! நாட்டாமை வீட்டின் வராண்டாவில் உட்கார்ந்து கொண்டார்.

மணியும், விசாலமும் வந்தார்கள்.

வீட்டிற்கு முன்
செம்மண்ணுடன் தேங்கி நிற்கும் தண்ணீரைக் கண்டு தயங்கினார்கள்.

கவிஞர் ச. மல்லிகா எழுதும் கதை தொடரும்.

Share.

Leave A Reply