கீழே இறங்கிய கருப்பாயியை கண்ட மாத்திரத்தில்… முகத்தை சுழித்தார்கள்.

திருஷ்டி பொம்மை போல் இருக்கிறாளே… இவளுக்காகவா! இவ்வளவு நாள் காத்திருந்தான்.

“வானத்து தேவதை போல் இருப்பாள் என நினைத்தால்…”

“ நாமே பரவாயில்லை…. இப்படி…. ஆள்…ஆளுக்கு அவர்கள் சொன்ன வார்த்தைகள்” ஜெயக்குமார் செவியில் தாக்கி வாய் பேச முடியாமல் செய்துவிட்டது.

யாருடனும் பேசாமல் தனது அறைக்கு சென்றுவிட்டான் ஜெயக்குமார்.

கருப்பாயி தான் அவன் மனைவி என நினைத்த எல்லோரும் அவளுக்கு ஒரு அறையை காட்டினார்கள்.

அங்கு சென்ற கருப்பாயி பளிங்கு போன்ற தரையும், எங்கு பார்த்தாலும் கண்ணாடி பதித்த சுவர்கள் அழகிய திரைச்சீலைகள்.

கட்டில், மெத்தை, அழகிய துணிகள், நகைகள் என பார்க்க…. பார்க்க கண் இமைக்க மறந்து…. அப்படியே நின்றாள் கருப்பாயி.

நான் கருவுற்ற நேரம் நல்ல நேரம். அதுதான் இவ்வளவு அதிர்ஷ்டம் நம்மைத் தேடி வந்திருக்கிறது. என சந்தோச மழையில் நனைந்தாள் கருப்பாயி.

கோயில் முன் விடப்பட்ட குமுதா…எங்கு போவது என தெரியாமல் அழுது கொண்டிருந்தாள்.

“அழுகுரல் கேட்டு வந்த பூசாரி ஒரு பெண்ணைக் கண்டு, ஏன் அம்மா ஆழுகிறாய்? நீ யார்? எங்கிருந்து வருகிறாய்?”  எனக் கேட்டார்.

அவளும் நடந்தவற்றை கூறினாள். “இப்போது எனக்கு கண்ணும் தெரியாது” நான் எங்கு செல்வேன் என அழுதாள்.

“நீ! என்னுடன் வா.. எனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன்” என பூசாரி வீட்டிற்கு கூட்டிச் சென்றார்.

பூசாரியின் மனைவி கமலா இவளைப் பார்க்கவும், வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதாள்.

  “இப்படி அழகான பெண்ணைக் கூட்டி வந்திருக்கிறீர்களே! எனக்கு துரோகம் செய்ய எப்படி மனம் வந்தது?” என சொல்லி அழுதாள்.

கமலா! விபரத்தை அறியாமல் ஏன்? இப்படி அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறாய் என்றார் பூசாரி.

“இவளை தங்கை போல் பாவித்து கூட்டி வந்திருக்கிறேன்.” என சொல்லி நடந்த விபரங்களைக் கூறி முடித்தார் பூசாரி.

அப்படியா! என ஆச்சரியப்பட்ட கமலா.

உன் கணவரிடம் செல்லும் வரை இந்த வீட்டில் தங்கு என ஆறுதல் கூறினாள்.

இந்த நிலையில் குமுதா கர்ப்பமாக இருந்தாள்.

ஜெயக்குமார் கருப்பாயி இருக்கும் பக்கம் கூட பார்ப்பது இல்லை.

எப்போது பார்த்தாலும் வேட்டைக்குப் போகிறேன் என சென்று விடுவான். அரண்மனையில் தங்குவதை இல்லை.

தனது மனைவி குமுதா இவள் அல்ல… ஏதோ சூது நடந்து விட்டது போன்ற பிரம்மையால்… எங்காவது பார்க்க மாட்டோமா? என அலைந்து கொண்டு இருந்தான் ஜெயக்குமார்.

இந்த சூழ்நிலையில் நாட்கள் மாதங்களாக ஓடியது.

அரண்மனையில் கருப்பாயிக்கு அவளைப் போல் ஒரு கருப்பு ஆண் குழந்தை பிறந்தது.

பூசாரி வீட்டில் குமுதாவிற்கு அவளைப் போல் அழகான பையன் பிறந்தான்.

இரண்டு குழந்தைகளும் வளர ஆரம்பித்தார்கள்.

ஐந்து வயது ஆனவுடன் கருப்பாயி மகன் பாபுவை  பள்ளியில் சேர்த்தார்கள்.

அன்றே ‘பூசாரி’ குமுதாவின் மகன் முத்துவையும் பள்ளியில் சேர்த்தார்.

முத்து மிகவும் அடக்கமாகவும், படிப்பில் கெட்டிக்காரனாகவும் விளங்கினான்.

பாபு படிப்பைத் தவிர மற்ற குறும்புகள் அனைத்தும் செய்வான்.

‘முத்து’வையும் அவன் விட்டு வைப்பதில்லை.

முத்துவைப் பார்க்கும் போது எல்லாம் “அப்பா பெயர் தெரியாத பையன்” என்று கேலி செய்து கொண்டே இருப்பான் பாபு.

முத்துவிற்கு அவமானமாக இருக்கும்.

எல்லோருக்கும் ‘அப்பா’ இருக்கும் போது எனக்கு மட்டும் ஏன்? அப்பா இல்லை. அம்மாவிடம் கேட்க வேண்டும் என நினைப்பான்.

“அம்மா என்ன?” சொல்வார்களோ என தயக்கமாக இருக்கும்.

பாபு ‘கேலி’ செய்யும் போது கோபமாக வந்தது முத்துவிற்கு.

அன்று மாலை வீட்டுக்கு வந்து முத்து “அம்மா என்னுடைய அப்பா யார்? எங்கு இருக்கிறார்? நான் பார்க்க வேண்டும்” என்றான் முத்து.

மகனே!என கட்டி அணைத்துக் கொண்ட குமுதா.

முத்து… என் கண்ணே முத்து என முகத்தை வருடி உன்னைப் பார்க்க எனக்கு கண் வேண்டும் மகனே! என்றாள் குமுதா.

“எப்படி அம்மா உங்களுக்கு கண் தெரிய வைப்பது?” எனக் கேட்டான் முத்து.

“ என் கண்களை ஒரு உப்புக்காரி” தோண்டி எடுத்து விட்டாள். அவள் எங்கு இருக்கிறாள் என்பதை தெரிந்து என் கண்களை முதலில் வாங்கி வா! என்றாள்.

எப்படி? வாங்குவது? என முத்து கேட்டான்.

அப்போது அங்கு வந்த கமலா இந்த உரையாடல்களைக் கேட்டு வருந்தினாள்.

முத்துவை தன் அருகில் அமர்த்தி ஆறுதல் சொன்னாள்.

அப்போது குமுதாவின் முதுகில் ஏதோ விழுந்த மாதிரி இருக்கவே கமலாவைப் பார்க்கச் சொன்னாள் குமுதா.

“முதுகை தட்டி விட்டால்” கமலா.என்ன ஆச்சரியம் அவள் முதுகில் இருந்து விழும் அழுக்கு எல்லாம் கீழே விழும் போது முத்துக்களாக விழுந்தது.

கமலா அதை எடுத்து குமுதாவிடம் சொன்னாள். 

தொட்டுப் பார்த்த குமுதா, இனி எனக்கு நல்ல நேரம் வந்துவிட்டது. எனது அண்ணன்கள் சொன்ன கஷ்டம் முடியப் போகிறது. அதன் ஆரம்பம்தான் இந்த முத்துக்கள்.

“ என் முதுகை அழுத்தி தேயுங்கள். வேண்டிய அளவு முத்துக்களை எடுத்துக் கொள்ளுங்கள் என்றாள்.

இவற்றை ஒரு பையில் போட்டு “ஒரு பை முத்துக்கு கண் தருகிறீர்களா?” என கூவிக் கொண்டே போகச் சொல்லுங்கள். கண்டிப்பாக “அந்த பேராசை பிடித்தவள்” முத்தை வாங்கிக் கொண்டு என் கண்களைக் கொடுப்பாள் என்றாள் குமுதா.

அது போல் ஒரு பையில் முத்துக்களை எடுத்துக் கொண்ட பூசாரி, “ஒரு பை முத்துக்கு இரு கண் தாருங்கள்” என கூவிக் கொண்டே ஒவ்வொரு வீதியாகச் சென்றார்.

எல்லோரும் முத்தை வாங்க ஆசை. கண்ணுக்கு தான் முத்து என்றால் அவர்கள் எங்கு போவார்கள் கண்ணுக்கு!

அரண்மனைப் பக்கம் பூசாரி கூவிக்கொண்டே போனார்.

கவிஞர் ச. மல்லிகா எழுதும் கதை தொடரும்.

Share.

Leave A Reply