“சகோதரர்களே நமது காட்டுக்குள் மனிதன் நுழைந்து விட்டான்.  என் ஜோதிடம் கூறுகிறது” என்றது புலி.

நமது காட்டுக்குள்ளாவது மனிதன் வருவதாவது. என புலிகள் கோரஸ் பாடியது.

“ வந்துவிட்டான் சகோதரர்களே வந்துவிட்டான்” என்றது புலி.

ஐந்து கடல்களையும் தாண்டி நமது காட்டிற்குள் அது எப்படி முடியும்? இருந்தாலும் வாருங்கள் தேடிப் பார்ப்போம் என ஜோதிடப் புலி கூறியது.

உன் ஜோதிடம் என்றும் தவறியதில்லை. வாருங்கள் போய் பார்ப்போம். என
கடல்பகுதிக்கு எல்லா புலிகளும் வந்தன.

புலிகளுடன், புலி தங்கையும் வந்தாள்.

தூரத்தில் புலி வரும் சலசலப்பை கவனிக்க ஜெயக்குமார் மற்றொரு உருண்டையை கையில் எடுத்து நான் மரமாக வேண்டும் என நினைத்தான்.

அடுத்த நொடியில் பூத்துக் குலுங்கும்
மரமாகிவிட்டான் ஜெயக்குமார்.

மரத்தின் அருகில் வந்த ஜோதிடப் புலி.

மரத்தை முகர்ந்து…. முகர்ந்து சுற்றி… சுற்றி வந்தது.

இதை கவனித்த மற்ற புலிகள் உனக்கு எதைப் பார்த்தாலும் சந்தேகம்தான் என்றது ஒரு புலி.

“ நம் தங்கையின் மேல் உள்ள அன்பால் இவ்வாறு நடந்து கொள்கிறாய்” என்றது மற்றொரு புலி.

சரி,வா போகலாம் என எல்லோரும் முன்னே போக.

“ புலி தங்கை” மட்டும் பின்னே”ஆடி, அசைந்து செல்லும் தேர்” போல் மெதுவாகச் சென்றாள்.

இதுதான் நல்ல சந்தர்ப்பம் என நினைத்த ஜெயக்குமார்.

மனிதனாக மாறி புலி தங்கையின் கையைப் பிடித்தான்.

அவள் பயத்தால் கத்தப்போனாள்.

ஒரு கையால் வாயைப் பொத்தி “கண்ணால் சும்மா இரு” என சமிக்கை செய்தான்.

இதுவரை எந்த ஆடவரையும் பார்த்ததும் இல்லை, தொட்டதும் இல்லை.

அவன் மிக அருகில் நின்று கையைப் பிடித்து வாயை பொத்தி, கண்களால் பேசியது அவளை நாணச் செய்தது.

நான் இப்படி இதுவரை ஆனதில்லையே என திமிர நினைத்தாலும் அவளால் முடியவில்லை.

தூரத்தில் சென்ற புலிகள் எங்கே தங்கை என திரும்பிப் பார்த்துக் கூப்பிட…

உடனே மரமாகிவிட்டான் ஜெயக்குமார்.

இது என்ன விந்தை! என நினைத்தவள். இதோ என மெதுவாக நடக்க ஆரம்பித்தாள் புலி தங்கை.

“ விரைவில் வா” என்ற புலிகள் மேலும் மரபுதர்களுக்குள் சென்று விட்டன.

“ பெண்ணே உன் பெயர் என்ன” என்று கேட்டான் ஜெயக்குமார்.

திரும்பிப் பார்த்தால் ஜெயக்குமார் நின்று கொண்டிருந்தான்.

மரமானவர் எப்படி?என புரியாமல் பார்த்தாள்.

“பெண்ணே உனக்காக ஐந்து கடல்களைத் தாண்டி, உயிரையும் துச்சமாக நினைத்து உன்னை பார்க்காமலே காதல் கொண்டு பல இன்னல்களுக்கு இடையில் வந்திருக்கிறேன் பெண்ணே.

“என்னை விட்டுப் போகாதே என்னைத் திருமணம் செய்து கொள். எனது நாட்டிற்கு வா” என காதல் மயக்கத்தில் கூறினான் ஜெயக்குமார்.

பதில் பேச முடியாமல் தலை தாழ்த்தினாள்.

“பெண்ணே என்னைப் பார்” என தாடையைப் பிடித்து நிமிர்த்தினான் ஜெய்குமார்.

“ கண்ணும், கண்ணும் பேசியது. வாய் பேச வார்த்தைகள் இல்லை.”

இருவரும் காந்தர்வ திருமணம் செய்து கொண்டார்கள்.

ஜெயக்குமார் தன் விரலில் இருந்து அரச முத்திரை மோதிரத்தை அவள் கையில் அணிவித்தான்.

அவளுக்கு என்று சில நகைகளை தன்னுடன் எடுத்து வந்திருந்தான் ஜெயக்குமார்.

அதையும் அணிவித்து ‘குமுதா’ என பெயரும் சூட்டி அனைத்துக் கொண்டான்.

சில மணி நேரங்கள் இருவரும் தங்களையே மறந்திருந்தார்கள்.

அடர்ந்த காட்டிற்குள் சென்ற புலிகள். தங்கையை காணாமல் திரும்பி வந்தன.

இலைகளின் அசைவுகளினால் இருவரும் விழித்துக் கொண்டார்கள்.

அண்ணா… என அச்சத்துடன் கூறினாள் குமுதா.

“வா! என்னுடன் என இழுத்துக் கொண்டு ஓடினான்” ஜெயக்குமார்.

கடல் அருகில் வந்தவுடன் “முன் வற்றி பின் பெருக்குக” என கூறிக் கொண்டே ஓடினான்.

குமுதாவும் அவன் கைகளைப் பற்றிக் கொண்டு ஓடினாள்.

இவர்களைக் கண்ட புலிகள் கடலுக்குள் பாய்ந்து வந்தன. பெருகி வந்த கடல் நீரால் புலிகள் அடித்துச் செல்லப்பட்டது.

தங்கையே எங்களை இப்படி தவிக்க விட்டுச் செல்கிறாய்.. “ நீ முற்பகுதி காலம் மிகவும் கஷ்டப்படுவாய், பிற்பகுதி காலம் நன்கு வாழ்வாய்” என கூறிய ஜோதிடப் புலி கடல் பசிக்கு உணவாகியது.

ஜோதிட புலியை பின்தொடர்ந்து வந்த எல்லா புலிகளும் கடல் நீரில் சிக்கி உயிர் விட்டது.

இதைக் கண்ட குமுதா அழுது கொண்டே வந்தாள்.

ஐந்து கடல்களையும் தாண்டிய பின் பாட்டியின் குடிசையை வந்தடைந்தனர்.

அங்கு பாட்டி படுத்த படுக்கையாக இருந்தாள்.

ஜெயக்குமாரை கண்டவுடன் கண்கள் பிரகாசமானது. குமுதாவையும் பார்த்தவள் அருகில் வரச் சொன்னாள்.

“உங்களுக்காகத்தான் என் உயிர் ஊசலாடிக் கொண்டு இருக்கிறது. “ என்றவுடன்… மூச்சு நின்றது பாட்டிக்கு.

பாட்டிக்குச் செய்ய வேண்டிய ஈமச் சடங்குகளைச் செய்து விட்டு அரண்மனைக்குப் போக பயணப்பட்டார்கள்.

ஊர் எல்லைக்கு வந்து விட்டார்கள்.

அங்கு தான் விதி விளையாடப் போவது தெரியவில்லை  இருவருக்கும்.

ஜெயக்குமாருக்கு தன் மனைவியை சாதாரணமாக கூட்டிப் போக விருப்பமில்லை.

ராஜ மரியாதையுடன் அழைத்துச் செல்ல வேண்டும். அவள் அழகைக் கண்டு எல்லோருமே வியக்க வேண்டும். அண்ணிகளும், நண்பர்களும் பாராட்ட வேண்டும் என நினைத்தான்.

அருகில் ஒரு வீடு இருந்தது.அதில் உப்பு வியாபாரம் செய்யும் பழனி என்பவர் இருந்தார்.

அவரிடம் சென்று “என் மனைவி இங்கு சிறிது நேரம் இருக்கட்டும். வந்து அழைத்துச் செல்கிறேன்” என்ற ஜெயக்குமார் அரண்மனைக்குச் சென்றான்.

சிறிது நேரத்தில் வெளியில் சென்ற உப்பு வியாபாரியின் மனைவி கருப்பாயி வந்தாள்.

அவள் நிறத்தைப் பார்த்து தான் அவளுக்கு கருப்பாயி என பெயர் சூட்டினார்களோ என்னவோ அப்படி ஒரு கருப்பு.

அழகான பெண் தனது வீட்டில் இருப்பது கண்டு முகம் கோபத்தில் சிவந்தது.

“ எப்ப வெளியில் செல்வாள் என காத்திருந்து இப்படி செய்கிறாயே இது உனக்கே நியாயமா? “ என ஒப்பாரி வைக்க ஆரம்பித்துவிட்டாள்.

இதைக் கண்ட பழனி, அம்மா தாயே! இவள் இன்னொருவரின் மனைவி. சற்று நேரம் இருக்கட்டும் என கூறிச் சென்றுள்ளார் என்று கூறினார்.

யார்? என்ன? என்ற வியாபாரம் கூட எனக்குத் தெரியாது என்றான் பழனி.

“ கருப்பாயி அவளிடம் சென்று நீ எந்த ஊரு? எங்கிருந்து வருகிறாய்?” எனக் கேட்டாள்.

காட்டிலே வாழ்ந்தவள். எனவே, நகரம் அவளுக்குப் புதிது இவர்களைக் கண்டு அவளுக்குப் பயமாக இருந்தது. திரு…திரு..என விழித்தாள்.

“முழியைப் பாரு.. முழியை நீ யார் என சொல்?”  என அதட்டினாள் கருப்பாயி.

நடந்த விபரங்களை பயந்தபடி திக்கி…. திக்கி சொன்னாள் குமுதா.

“ஓ… அப்படியா?” என்றவள் ஒரு திட்டம் தீட்டினாள்.

“ நான் சொல்வது போல் செய்”என்றவள். அவள் அணிந்திருந்த உடை, நகைகளை எல்லாம் கழற்றித்தரச் செய்தாள். அதை தான் அணிந்து கொண்டு, இவள் உடுத்திய துணிகளை அவளுக்கு கொடுத்தாள்.

குமுதாவின் விழிகளைப் பிடுங்கி பானையில் போட்டு பரணியில் தொங்கவிட்டாள்.

குமுதவை அழைத்துச் சென்று ஒரு சிறிய கோயிலின் முன்பு விட்டு விட்டு வந்து விட்டாள்.

கருப்பாயி இது என்ன கொடுமை பாதுகாப்பாக வைத்திருக்கச் சொன்ன பெண்ணை இப்படி செய்தாயே எனக்கேட்ட பழனியை….

நீ சும்மா கிடய்யா! உன்னை கட்டி நான் என்ன சுகப்பட்டேன். இவளை வேறு யாருக்கும் தெரியாது. எனவே, நான் அரண்மனைக்குச் சென்று ஆனந்தமாக வாழப் போகிறேன். என்றவள் ஆசையின் உச்சத்தில் சிரித்தாள்.

யானை, சேனையுடன் பல்லாக்கில் வந்த ராஜகுமாரன் ஜெயக்குமார் தனது மனைவியை அழைக்கும் படி பழனியிடம் வந்து கேட்டான்.

பதில் பேச முடியாத பழனி மௌனமாக இருந்தான்.

உள்ளிருந்து வந்த கருப்பாயி இவன் தான் ராஜகுமாரன் என்பதை புரிந்து கொண்டு…

“இளவரசே… இளவரசே… நீங்கள் சென்ற பின் எனது உடல் அண்ணனின் சாபத்தால்” இவ்வாறு கருப்பாகி விட்டது எனக் கூறினாள்.

அவளைப் பார்த்த ஜெயக்குமாருக்கு தலை சுக்கு நூறாக வெடித்தது போல் ஆகிவிட்டது.

“எவ்வளவு முயன்று குமுதாவை கொண்டு வந்தேன்.”

அவள் அழகில் குளிர் காயலாம். அவள் அன்பின் என்னை மறக்கலாம். எங்களைப் பார்த்து இந்த நாடை வியக்கும் என நினைத்த நினைவெல்லாம்….

பசித்தவன் கையில் உணவு இருந்தும் அதில் காக்கை எச்சமிட்டுச் சென்றதால்… உண்ண முடியாமல் தூக்கி எறிய வேண்டிய நிர்ப்பந்த நிலை கூட பரவாயில்லை.

என் நிலை! உதறிச் செல்ல முடியாத நிலை!

“இறைவா எனக்கு ஏன்?இந்த தண்டனை?” என அவன் மனதினுள் ஆயிரம் போராட்டங்களுக்கு நடுவில் இறுதியாக அவளை பல்லக்கில் ஏறச் செய்து அரண்மனைக்கு வந்தடைந்தார்கள்.

ஆயிரம் புலி தங்கையைக் காண ஊரே விழாக் கோலம் பூண்டிருந்தது. அரண்மனை வாயிலில் கச்சேரி,
வாத்தியங்களுடன், ஆடல், பாடலும் நடந்து கொண்டிருந்தது.

பல்லக்கை கண்டவுடன் ராஜா, ராணி மாடத்தில் நின்ற அண்ணன், அண்ணிகள் எல்லோரும் வாயிலுக்கு வந்தார்கள்.

கவிஞர் ச. மல்லிகா எழுதும் கதை தொடரும்.

Share.

Leave A Reply