இதை கவனித்த நாட்டாமை, “வாங்க” என அழைத்தார்.

ஐயாவே கூப்பிட்ட பின் தயங்கினால் நன்றாக இருக்காதே என நினைத்த இருவரும். அதில் நடந்து வந்தார்கள்.

இரண்டு பேர் கால்களிலும் செம்மண் அப்பிக் கொண்டது.

“அடடா… கால் எல்லாம் சேறாகிவிட்டதே?” என்றார் நாட்டாமை.

“முனியாண்டி! இங்கே வா” என அழைத்தார்.

“என்னங்கையா!” என்றான் முனியாண்டி.

“செம்புல இவர்களுக்குத் தண்ணீர் கொண்டு வா! கால் கழுவ” என்றார் நாட்டாமை.

“ சரிங்க ஐயா!” என உள்ளே சென்ற முனியாண்டி ஒரே அளவுள்ள இரண்டு செம்புகளில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான்.

செம்பை வாங்கிய விசாலம் நின்றபடியே காலில் ஊற்றினாள். காலில் ஒட்டி இருந்த மண் போகவில்லை. திரும்பவும் ஒரு செம்பு தண்ணீர் வாங்கினாள். அப்போதும் போகவில்லை.

மூன்றாவதாக தண்ணீர் வாங்கி ஊற்றி கழுவிய பின் உள்ளே வந்தாள்.

மணி செம்பை வாங்கியவுடன் குனிந்து வலது கையில் பிடித்துக் கொண்டு இடது கையால் காலைத் தேய்த்து விட்டு சிறிது…. சிறிதாக நீரை ஊற்றி கழுவினாள்.

கால் கழுவிய பின்னர் ஒரு செம்பு தண்ணீரிலும் மீதி வைத்து விட்டாள்.

இவற்றை எல்லாம் நாட்டாமை கவனித்துக் கொண்டு இருந்தார்.

இருவரையும் உள்ளே வந்து உட்காரச் சொன்னார் நாட்டாமை.

“விசாலம் மணியிடம் நீதான் பால் கடனாக வாங்கி இருப்பாய். உண்மையை ஒத்துக் கொள்” என்றார் நாட்டாமை.

“ ஐயா! என்னையா இப்படி சொல்லிட்டீங்க” என பதறினாள் விசாலம்.

“ஆமா… உண்மையைத் தான் சொல்கிறேன். சற்றுமுன் இருவரும் இந்த செம்மண்ணில் நடந்து வந்தீர்கள். நீ மூன்று சொம்பு தண்ணீர் வாங்கி கழுவியும் உன் காலை விட்டு இன்னும் செம்மண் முழுமையாக போகவில்லை” என்றார் நாட்டாமை.

அப்போதுதான் வேகமாக காலை கவனித்தாள் விசாலம். காலில் சில இடங்களில் செம்மண் ஒட்டி இருந்தது.

மேலும் பேசினார் நாட்டாமை, மணி ஒரு செம்பு தண்ணீரில் காலும் சுத்தமாக கழுவியதுடன் மீதமும் வைத்திருக்கிறது கவனி என்றார் நாட்டாமை.

மணி கால்கள் மிகவும் சுத்தமாக இருந்தது. செம்பில் மீதம் தண்ணீரும் இருந்தது. இதை கவனித்த விசாலம்.
அதுக்கு என்னங்கய்யா? என்றாள்.

ஒரு சேற்றைப் போக்கவே மூன்று செம்பு தண்ணீர் செலவு செய்த நீ உன் குடும்பத்தை நடத்த நீர் போல் பணத்தை செலவு செய்ய மாட்டாய் என்பது என்ன நிச்சயம்.

“சுத்தமாக சேற்றையும் போக்கி மீதி தண்ணீர் வைத்த மணி நிச்சயம் குடும்பத்தில் சிக்கனமாகத்தான் செலவு செய்யும் என்பது புரிகிறது” என்றவர்.

உண்மையை ஒத்துக்கிட்டு மணிக்கு கொடுக்க வேண்டிய பணம் ரூபாய் 500, நீ பொய் சொன்னதுக்கும் சேர்த்து தண்டனையாக ஒரு பசுமாட்டை மணியிடம் கொடுக்க வேண்டும் என தீர்ப்பு கூறினார்.

இனியும் பொய் சொல்ல முடியாத விசாலம் சரி என்று சம்மதித்தாள்.

“நல்ல தீர்ப்பு சொல்லி எனது வயிற்றில் பால் வார்த்தீர்கள் ஐயா!” என நன்றியுடன் கும்பிட்டாள் மணி.

இருவரும் வீட்டிற்குச் சென்ற பின் “ஐயா! எனக்கு ஒரு சந்தேகம்” என்றான் முனியாண்டி.

என்ன? என்றார் நாட்டாமை.

எப்படி ஐயா தண்ணீரை செலவு செய்வதில் இருந்து கண்டு பிடித்தீர்கள் என்றான் முனியாண்டி.

முனியாண்டி, ஒரு பெண் தண்ணீரை எவ்வளவு சிக்கனமாக செலவு செய்கிறார்களோ அதுபோலவே குடும்பமும் நன்கு நடத்துவாள். இது அனுபவப்பட்ட உண்மை. என்றார் நாட்டாமை.

“அப்படியாங்க ஐயா அதனால் தான் தண்ணி போல் செலவு செய்கிறாள் என பெரியவர்கள் கூறுகிறார்களா ஐயா?” என்றான் முனியாண்டி.

ஆமாம்…. என்று எழுந்தார் நாட்டாமை.

இந்த கதை சேமிப்பையும், சிக்கனமாக இருப்பது பற்றியும் சொல்கிறது பார்த்தீர்களா? என்றார் தாத்தா.

தாத்தா இனி நானும் சேர்த்து வைப்பேன்! என்று ஜெயா ஓடினாள்.

தாத்தா மகிழ்ச்சியுடன் வீட்டிற்குக் கிளம்பினார்.

கவிஞர் ச. மல்லிகா எழுதும் கதை தொடரும்.

Share.

Leave A Reply