69-நீர் விளையாடேல்
பள்ளி விடுமுறை என்பதால் மாணவர்கள் ஒன்று கூடி பக்கத்தில் இருக்கும் ஊருக்குச் சுற்றுலா சென்றார்கள்.
கோடை வெயில் என்பதால் வேர்த்துக் கொட்டியது. போகும் வழியில் ஒரு பெரிய குளம் இருந்ததைப் பார்த்தவர்கள், குளித்து விட்டுப் போகலாம் என ஒருவன் ஆரம்பித்தான்.
உடனே, எல்லோரும் காரை நிறுத்தச் சொல்ல,
நிழல் இருந்த பக்கம் சென்று காரை நிறுத்தினார் ஓட்டுனர்.
கத்திக் கொண்டு ஓடிய மாணவர்கள் குளத்தில் தொப்…தொப் என விழுந்து குளித்தனர்.
குளிர்ந்த நீர் உடலில் பட்ட சந்தோசத்தில் ஆழமான பகுதிக்கு குதித்து… குதித்து, ஒருவன் சென்று விட்டான். அவனுக்கு நீச்சலும் தெரியாத சூழ்நிலையில் தண்ணீரில் மூழ்கினான்.
அதைப் பார்த்த மற்றவன் அவன் கையைப் பிடித்து இழுத்தான்.
அவனையும் உள்ளே இழுத்தவன், உள்ளே இருவரும் மூழ்கிப் போனார்கள்.
மற்றவர்கள் கண் முன்னே இருவரும் மூழ்கினார்கள்.
ஒன்றும் செய்ய முடியாமல் ஊர் மக்கள் உதவியுடன் இருவரையும் வெளியில் கொண்டு வந்தனர்.
சந்தோசமாகச் சுற்றுலா வந்தவர்கள். தெரியாத இடத்தில் குளிக்கப் போய் சோகத்தில் வருந்தினர்.
ஆழமான குளம், கிணறு, ஏரி, ஆறு இவற்றில் “நீர் விளையாடாதே” என்று ஔவையார் கூறி இருக்கிறார் என்றான் சோகத்துடன் ஒருவன்.