ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாள் என்பதால் ராமு குடும்பத்துடன் கொடிவெறிக்குச் சென்றார்கள்.
தங்கள் உடமைகளை ஓரிடத்தில் வைத்துவிட்டு. ராமு, அவன் மனைவி ராதா, மகள் மலர், மகன் ரவி எல்லோரும் கொட்டும் நீரில் குளித்து உடல் சிலிர்த்து, குதூகலம் அடைந்தவர்கள்.
மீண்டும்.. மீண்டும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு குளித்து குளித்து மகிழ்ந்தனர். பின் உடை மாற்றிக் கொண்டு வந்தார்கள்.
தாங்கள் எடுத்து வந்த புளியோதரை, தயிர் சாப்பாட்டை இலையில் வைத்து எல்லோருக்கும் அம்மா கொடுத்துக் கொண்டு இருக்கும் போது…
ஒரு வயதான மூதாட்டி அருகில் அமர்ந்து இருப்பதைப் பார்த்த அம்மா! ஒரு இலையில் சாப்பாடு, காய்கறி இவற்றை வைத்து அந்த வயதான அம்மாவிடம் கொடுத்து சாப்பிடச் சொன்னார்கள்.
அந்த வயதான பாட்டியும் முகம் மலர நல்லா இருமா என்று சொன்னபடி சாப்பாட்டை வாங்கி சாப்பிட்டார்கள்.
அம்மா அந்தப் பாட்டி சாப்பிடவில்லை என்பதை எப்படி அம்மா தெரிந்து கொண்டீர்கள் என்று கேட்டான் ரவி.
அவர்கள் பசியுடன் இருப்பதை அவர்கள் சோர்ந்து போன முகமே காட்டியது என்றாள் அம்மா.
குளித்த குளிர்ச்சியை விட அம்மா பிறருக்கு கொடுக்கும் மனம் மிகுந்த குளிர்ச்சியை தந்தது ரவிக்கு.
அவன் படித்த ஆத்திசூடி வரிகள் நினைவுக்கு வந்தது. “தானமது விரும்பு” ஔவையார் எழுதியது. அம்மாவைப் பார்த்தான் ரவி. புன்னகைத்தபடி அம்மா மேல் சாய்ந்து கொண்டான் பாசத்துடன்.