“மன்னருக்கு உடல்நிலை சரியில்லை’ வைத்தியர் பரிசோதித்து விட்டு இதயம் மிகப் பலகீனமாக இருக்கிறது என்கிறார் இளவரசே!” என்றார் மந்திரி.

“ தந்தையே நீங்கள் ஓய்வு எடுத்துக் கொண்டு அமைதியாக இருங்கள்” என்றான் இளவரசன் முகுந்தன்.

“ஆம் மகனே! அவ்வாறுதான் இருக்க ஆசைப்படுகிறேன். அதற்காக நீ ஒரு உபயம் செய்ய வேண்டும்” என்றார் மன்னர்.

என்ன செய்ய வேண்டும் தந்தையே! என்றான் இளவரசன் முகுந்தன்.

“மகனே! ‘அரகரா என்ற மீனும் சிவசிவா’ என்கின்ற கொக்கும் இருக்கிறதாம். அதை நீ கொண்டு வந்தால் அந்த நாமத்தைக்  கேட்டுக் கொண்டே அமைதியாக இருப்பேன்” என்றார் மன்னர்.

“அவ்வாறே செய்கிறேன் தந்தையே” என்ற இளவரசன் தனது பயணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய கட்டளையிட்டான்.

முகுந்தன் பயணப்படுவதையும், தந்தைக்கு உடல்நலம் இல்லை என்பதையும் கேள்விப்பட்ட சங்குராஜா தனது அன்னையிடம் சென்று கூறினான்.

இதைக் கேள்விப்பட்ட ராணி காவேரி, மகனே சங்குராஜா உனது தந்தை நீதி நெறி தவறாதவர் அவருக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது.

“ஏதோ குழந்தை ஆசையால் என்னை புறக்கணித்தார். மற்றபடி மக்களுக்கு எந்தக் குறையும் வைக்காது நல்லாட்சி செய்தவர். எனவே, அவரை நீ காப்பாற்ற வேண்டும் அது உனது கடமை” என்றாள் காவேரி.

“தாயே! நானும் பயணப்படுகிறேன். என்னை வாழ்த்துங்கள்” என விடை பெற்றான் சங்குராஜா.

   மகனே! சங்கு இந்தா இந்த சங்கிலியை அணிந்து கொள். இது உன் தந்தை எனக்கு  பரிசாக கொடுத்தது. இதை நீ அணிந்து கொண்டால் தந்தைக்கு செய்ய வேண்டிய கடமை உத்வேகத்தைத் தரும் என அணிவித்தாள் ராணி காவேரி.

சங்கிலியை கழுத்தில் அணிந்து கொண்ட சங்கு “வருகிறேன் அன்னையே” என விடை பெற்றான்.

சங்குராஜா வருவதற்கு முன் சென்ற முகுந்தன் மரகத நாட்டிற்குச் சென்றான்.

இந்த நாட்டில் என்ன புதுமை இருக்கிறது, என விசாரித்தான்.

இங்கு ஒரு அழகிய மங்கா இருக்கிறாள். அவள் சூதாட்டத்தில் மிகச் சிறந்தவள். அவளை இதுவரை யாரும் வென்றதில்லை அடிமைப்பட்டு சிறைப் பட்டவர்கள் தான் அதிகம் என கூறினார்கள்.

அப்படியா? என்ற முகுந்தன், வாருங்கள் நண்பர்களே! என அழைத்துக் கொண்டு மங்காவின் மாளிகைக்குச் சென்றார்கள்.

அவளிடம் சூதாடிய முகுந்தன் தோற்று அடிமைப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.

சங்குராஜா மரகத நாட்டிற்கு வந்தான். இங்கு என்ன புதுமை என விசாரித்தான்.

எல்லா விபரமும் தெரிந்து கொண்ட சங்கு ராஜா சூதாட்டக்காரியின் மாளிகைக்கு வந்தான்.

தன்னிடம் பணம் எதுவும் இல்லை என்ற சங்கு ராஜா குலச் சங்கிலியை வைத்து சூதாடினான்.

ஒரு வட்ட மேசை மேல் அந்த சங்கிலியை வைக்கச் சொன்னாள் மங்கா.

“சூதாட்ட எண் என்ன?” எனக் கேட்டாள் மங்கா.

சங்குராஜாவும் ‘ஐந்து’ என்றான்.

பகடைக்காயை உருட்டி விட்டாள் மங்கா.

அதே சமயத்தில் தான் சங்குராஜாவிற்குப் பின்புறம் “ஜல்… ஜல்” என்ற சத்தத்துடன் நல்ல நறுமணம் மணக்க நடந்து வரும் ஓசை கேட்டது.

சங்குராஜா  திரும்பாமல் மங்கா உருட்டிய காயையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

உருட்டி  விழுந்த காய் மூன்றைக் காட்டியது. சங்குராஜா திரும்பாததால் காய் எண்ணை மாற்ற முடியாமல் திரு.. திரு என்று விழித்தாள் மங்கா.

இவ்வளவு நாளும் இப்படித்தான் எல்லாரையும் ஏமாற்றினாயா? எனக் கேட்டான் சங்குராஜா. மங்காவும் வெட்கித்  தலை குனிந்தாள்.

“நீ அடிமைப் படுத்தி  வைத்திருப்பவர்களை விடுதலை செய்” என உத்தரவிட்டான்.

“அப்படியே செய்கிறேன்” என்ற மங்கா காவலாளியை கூப்பிட்டு அனைவரையும் விடுதலை செய்யும்படி கூறினாள்.

சிறைப்பட்டு இருந்தவர்களில் முகுந்தனும், அவன் நண்பர்களும் விடுதலை ஆனார்கள்.

முகுந்தனையும், அவன் நண்பர்களையும் நல்ல முறையில் கவனிக்கப்பட வேண்டும். தான் திரும்பி வரும் போது அழைத்துச் செல்கிறேன். எனக்கூறி விடைபெற்றான் சங்கு ராஜா.

‘வெங்கி’நாட்டிற்கு வந்த சங்கராஜா, இங்கு என்ன அதிசயம் என விசாரித்தான்.

இந்த நாட்டில் ‘மதம்’ பிடித்த யானை ஒன்று உள்ளது. அந்த யானையை ஒருவராலும் அடக்க முடியவில்லை.

யானையை அடக்குபவர்களுக்கு இந்த நாட்டு இளவரசியை திருமணம் செய்து கொடுப்பதாக மன்னர் ஆணையிட்டு இருக்கிறார் என்றனர் ஊர் மக்கள்.

அன்று இரவு மதம் பிடித்த யானையின்  மேல் ஏறினான் 
சங்குராஜா.யானை கட்டுக்கடங்காமல் ஓடியது.

அதன் முதுகில் உட்கார்ந்திருந்த
சங்குராஜா, அதன் கழுத்தில் கிடந்த சங்கிலியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.

இங்கும், அங்கும் தறி கெட்டு ஓடிய யானை களைத்துப் போய் படுத்து விட்டது.

யானையின் மதம் அடங்கியதைக் கண்ட சங்குராஜா கீழே இறங்கி ஒரு சத்திரத்தில் போய் படுத்துக்கொண்டான்.

காலையில் எழுந்த ஊர் மக்கள் பரபரப்பாகப் பேசிக் கொண்டார்கள்.

வீதி எல்லாம் யானையின் தடமாக இருந்தது. யானை அமைதியாக படுத்திருந்தது.

யார் அடக்கியது? என்ற கேள்விக்கு விடை தெரியாமல் காவலாளிகள் அரண்மனைக்கு ஓடினார்கள்.

“அரசே… அரசே!” மதம் பிடித்த யானையை யாரோ அடக்கி விட்டார்கள். என மூச்சு விடாமல் பேசி முடித்தார்கள்.

இந்த செய்தியைக் கேட்ட அரசருக்கும், அரசிக்கும் ஆச்சரியம்.

நமது ஊரில் உள்ளவர்கள் யாரும் இந்தச் செயலை செய்திருக்க முடியாது.

“வெளியூரில் இருந்து வந்தவர் யாரோ தான் இச்செயலைச் செய்திருக்கிறார். உடனே, போய் தேடுங்கள்” என உத்தரவிட்டார் மன்னர்.

கவிஞர் ச. மல்லிகா எழுதும் கதை தொடரும்.

Share.

Leave A Reply