தனது மனைவி நீலாவுடன் சில நாட்கள் தங்கி அங்கு உள்ள அனைவரையும் சந்தோசப் படுத்திவிட்டு தனது நாட்டிற்கு பயணப்பட்டான். மன்னரும் மனமகிழ்வுடன் இளவரசியுடன் பொன்னும், பொருளும் கொடுத்து அனுப்பி வைத்தார்.
எல்லோரும் மரகத நாட்டிற்கு வந்தார்கள். அங்கு மங்காவை சந்தித்தார்கள். தம்பி முகுந்தனையும், அவன் நண்பர்களையும் நல்ல முறையில் கவனித்ததற்கு நன்றி கூறிய சங்குராஜா விடை பெற்றான்.
மங்காவும் இனி இவ்வாறு தவறு செய்யமாட்டேன். என உறுதி கூறி வழி அனுப்பி வைத்தாள்.
பல நாட்கள் பயணப்பட்டதால் எல்லோரும் களைத்து விட்டனர். எனவே, சிறிது நேரம் தங்கி மீண்டும் பயணப்படுவோம் என சங்குராஜா கூறினான்.
அருகில் ஒரு சத்திரம் இருப்பது கண்டு அங்கு எல்லோரும் தங்கினார்கள்.
வந்த களைப்பு மிகுதியால் இரவு அங்கே தங்கிவிடலாம் என தங்கிவிட்டனர்.
இரவு நல்ல தூக்கத்தில் இருந்தனர் எல்லோரும். நடு இரவில் கண் விழித்த முகுந்தன். தனது தந்தையிடம் அவமானப் பட விரும்பவில்லை.
எனவே, என்ன செய்யலாம் என யோசித்தான்.
மந்திரக்கோலை எடுத்துக்கொண்டு செல்வது என முடிவு செய்தான்.
மறுக்கணமே செயலாக்க ஆரம்பித்தான். மிக மெதுவாக எழுந்து பூனை போல் நடந்து சங்குராஜா தூங்கிக் கொண்டு இருந்த இடத்திற்கு வந்தான்.
எல்லா இடங்களிலும் தேடினான் மந்திரக் கோலை காணவில்லை. தலையணையை மெதுவாக தூக்கிப் பார்த்தான். கோல் இருந்தது.
மெதுவாக உருவினான். மந்திரக்கோல் முகுந்தன் கைக்கு வந்துவிட்டது.
சங்குராஜா அயர்வில் திரும்பி படுத்தான். பல நாட்கள் ஓய்வின்றி கடமையே கருத்தாக இருந்ததால் தூக்கம் மறந்து இருந்தான். இன்று படுக்கவும் களைப்பில் நன்கு தூங்கிவிட்டான்
சங்குராஜா.
மந்திரக்கோலை எடுத்துக்கொண்ட முகுந்தன். அன்று இரவே பயணப்பட்டான் தனது நாட்டிற்கு.
விடிந்த பின் எழுந்த நண்பர்கள் முகுந்தன் இல்லாதது கண்டு நாலாபுறமும் தேடினார்கள்.
சங்குராஜா தலையணைக்கு அடிகள் வைத்திருந்த மந்திரக்கோல் காணாமல் போனது கண்டு கலங்கினான்.
எல்லா பக்கமும் தேடிக் கொண்டிருந்தான்
சங்குராஜா. அப்போது அங்கு வந்த காவலாளி முகுந்தன் காணாமல் போன தகவலை கூறினான்.
சட்டென யூகித்துக் கொண்டான் சங்குராஜா. உடனே, நாடு செல்ல ஆயத்தமாக கட்டளையிட்டான். எல்லாரும் ஏதும் புரியாமல் அவசரமாக கிளம்பினார்கள்.
தனது நாட்டிற்கு வந்த சங்குராஜா தங்கள் வீட்டிற்குச் சென்று அம்மாவை வணங்கினான். நடந்த வற்றை சுருக்கமாக கூறினான்.
காவலாளிகள் எல்லோரையும் அங்கே இருக்கும்படி கூறிவிட்டு, தனது தாய், மனைவி, இளவரசி பத்மாவுடன் அரண்மனைக்கு புறப்பட்டான் சங்குராஜா.
மகாராணியை கண்ட காவலாளிகள் வழி விட்டனர். எல்லோரும் மன்னர் தங்கி இருக்கும் இருப்பிடம் சென்றனர்.
இதற்கு முன்பே வந்திருந்த முகுந்தன், தந்தையிடம் தான் கொண்டு வந்த மந்திரக்கோலை கொடுத்தான்.
“நீங்கள் கேட்ட ‘அரகரா’ என்ற மீனும் ‘சிவசிவா’ என்ற கொக்கும் இக்கோலில் வரும்” எனக் கூறினான் முகுந்தன்.
எங்கே வரவை பார்க்கலாம் எனக்கூறிய தந்தையையும்,
மந்திரியையும் மாறி.. மாறி பார்த்துக் கொண்டு இருந்தானே ஒழிய எப்படி வரவழைப்பது என தெரியவில்லை முகுந்தனுக்கு..
அந்த சமயம் அங்கு வந்த மகாராணி காவேரியையும், மற்றவர்களையும் கண்ட மன்னர் ராஜேந்திரனுக்கு ஒன்றும் புரியவில்லை.
மகாராணி காவேரி பேச ஆரம்பித்தார். “தான் மாங்கொட்டையை சாப்பிட்டது அதன் மூலம் ‘சங்கு’ குழந்தை பிறந்தது என ஆரம்பித்து…. இப்போது இங்கு வந்தது வரை சொல்லி முடித்தாள் மகாராணி காவேரி.
“அப்படி என்றால் இந்த மந்திர கோல் முகுந்தன் முயற்சியால் கொண்டு வரவில்லையா?” என்றார் மன்னர்.
எனது முயற்சியால் தான் கொண்டு வந்தேன் என்பதை உங்கள் எல்லோருக்கும் நிரூபித்துக் காட்டுகிறேன் என்றான் சங்கராஜா.
மன்னரிடம் இருந்து அந்த மந்திரக்கோலை வாங்கினான். பின் தண்ணீர் தொட்டி கொண்டு வரச் சொன்னான். சிவனையும், பார்வதியையும் மனதில் வணங்கினான்.
நீர் உள்ள தொட்டியில் மந்திரக்கோலை வைத்து அடித்துக்கொண்டே ‘அரகரா’ என்கிற மீன் வரவேண்டும் என்றான் சங்குராஜா.
அடுத்த கணம் ‘அரகரா’ என சொல்லிக்கொண்டே மீன் தொட்டிக்குள் நீந்தியது. பின் தரையில் கோலை அடித்துக் கொண்டே ‘சிவசிவா’ என்கின்ற கொக்கு வரவேண்டும் என்றான் சங்குராஜா.
அடுத்த நிமிடம் ‘சிவசிவா’ என சொல்லிக் கொண்டே ஒரு கொக்கு வந்து நின்றது.
இதைக் கண்ட மன்னர் எழுந்து ‘மகனே’ எனக்கட்டி கொண்டார். மகாராணி காவேரியின் கண்கள் கலங்கின இக்காட்சியைப் பார்த்து.
முகுந்தன் தந்தையின் பாதங்களில் விழுந்து தனது தவறுக்காக மன்னிப்பு கேட்டான்.
எழுந்திரு மகனே! என்ற மன்னர்.தவறை ஒருவன் எப்போது உணர்கிறானோ! அப்போதே அவன் நல்லவனாகி விடுவான். எனவே, நீ நல்ல முறையில் வாழ் என வாழ்த்தினார். மன்னிக்கும் மனம் படைத்த மாமன்னர் ராஜேந்திரன்.
மந்திரியை அழைத்து ரகசியமாக கூறினார். மன்னர்.
மந்திரியின் முகத்தில் மட்டற்ற மகிழ்ச்சி படர்ந்தது.அவை வெளியே தெரிந்த போது எல்லோர் முகமும் சூரியக்கதிர் போல் பிரகாசித்தது.
சங்குராஜாவின் முடி சூட்டு விழாவும் முகுந்தனின் திருமண நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டதுவே அந்த மலர்ச்சிக்குக் காரணம்.
நாடே விழாக்கோலம் பூண்டது. எல்லோரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
உங்களுக்கும் மகிழ்ச்சி தானே! என கதையை முடித்தார் தாத்தா.
“தாத்தா!நாங்களும் இறைவனிடம் எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டிக் கொள்வோம்” என்றனர்.
தாத்தா மகிழ்ச்சியுடன் வீட்டிற்குச் செல்ல எழுந்தார்.
கவிஞர் ச. மல்லிகா எழுதும் கதை தொடரும்.