குளிர்ந்த நீர் கண்ணில் பட்டு கண்விழித்தான் சங்குராஜா.

தண்ணீர்…. தண்ணீர்  என முனங்கினான் சங்கர் ராஜா. குடிக்க தண்ணீர் கொடுத்தார்கள்.

தண்ணீர் குடித்தவுடன் தெளிவு பெற்றான்
சங்குராஜா.

என்ன நடந்தது என எல்லோரும் விசாரித்தார்கள். முதலையை கொன்றதை தெரிந்து கொள்ளும் ஆவலில்.

நடந்தவற்றை கூறினான் சங்குராஜா. இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட அரண்மனை காவலாளிகள் அங்கு வந்தார்கள்.

ராஜ மரியாதையுடன் அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர்.

சங்குராஜா மன்னரை வணங்கினான்.

சிம்மாசனத்தில் இருந்து எழுந்து வந்த மன்னர் சங்குராஜாவை கட்டி அணைத்துக் கொண்டார்.

இதை சங்குராஜா சிறிதும் எதிர் பார்க்கவில்லை.

மன்னர் வாழ்க! முதலையைக் கொன்ற வீரன் வாழ்க! என அரசவையில் இருந்த அனைவரும் வாழ்த்தினார்கள்.

“கண் முன் தண்ணீர் இருந்தும் எடுக்க முடியாமல் தண்ணீர் பஞ்சத்தால் வாடி இருந்தோம்”

மக்கள் குறை போக்கிய உனக்கு இந்த ராஜ்ஜியத்தையும் எனது மகள் பத்மாவையும் திருமணம் செய்து வைக்கிறேன் என்றார் மன்னர்.

“ மன்னிக்க வேண்டும் மன்னா! எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. வெங்கி நாட்டு  மன்னர் மகள் நீலா தான் எனது மனைவி. தாங்கள் விரும்பினால் எனக்கு ஒரு தம்பி இருக்கிறான் அவனுக்கு தங்கள் மகளை மணம் முடித்து தாருங்கள்” என்றான் சங்குராஜா.

சங்குராஜாவின் பணிவும் தயாள குணமும் மன்னரை சரியென சொல்ல வைத்தது.

மன்னா! உங்களிடம் ஒரு வேண்டுகோள் என்றான் சங்குராஜா.

என்ன என்றாலும் தயங்காமல் கேள் வீரனே! என்றார் மன்னர்.

“ நாள் எனது தந்தைக்காக ஒரு கடமையை செய்யப் புறப்பட்டு இருக்கிறேன். அதுவரை உங்கள் மகள் உங்கள் நாட்டிலேயே இருக்கட்டும். திரும்பி வரும் போது அழைத்துச் செல்கிறேன் என்றான் சங்குராஜா.

உங்களுக்கு என் உதவி தேவைப்பட்டால் செய்ய கடமைப்பட்டிருக்கிறேன் என்றார் மன்னர்.

நன்றி அரசே! இது எனது தனிப்பட்ட முயற்சி. நான் தனியாகவே செல்ல விரும்புகிறேன். என்ற சங்குராஜா புறப்பட ஆயத்தமானான்.

அவன் துணிச்சலையும், முயற்சியையும் பார்த்த மன்னர் சிறந்த வீரன் என பாராட்டியவர். போகும் காரியம் வெற்றி பெற வாழ்த்தினார்.

சங்குராஜா பல நாள் பல நாடுகளைக் கடந்து காட்டுப்பகுதிக்கு வந்தான். நடுக்காட்டில் உணவு உறக்கம் இன்றி சிவனையே நினைத்து கடும் தவம் இருந்தான்.

“ஓம் நமச்சிவாய” என்ற ஒலி  கைலாயத்தை எட்டி தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது.

“சுவாமி உங்கள் பக்தரை இன்னும் சோதிக்க வேண்டுமா?” என கேட்டாள் பார்வதி.

நிஷ்டையில் இருந்த சிவனுக்கும் சங்குவின் குரல் கேட்டது.

கண்விழித்த சிவன் பார்வையைப் பார்த்தார் கருணையே உருவாய் புன்னகைத்தாள் பார்வதி.

பார்வதியின் புன்னகைக்கு அர்த்தம் புரிந்து கொண்ட சிவனும், பார்வதியை அழைத்துக்கொண்டு சங்குராஜா தவம் செய்யும் காட்டிற்கு வந்தார்கள்.

“பக்தா! உனது பக்தியை மெச்சினோம். எம்மை கண் திறந்து பார்” என்ற சிவபெருமான்.

கண் திறந்து பார்த்த சங்குராஜா, எதிரில் அம்மையப்பன் நிற்பது கண்டு ஆனந்த பரவசத்தில் எழுந்து வணங்கினான்.

“பிரபுவே… அம்மா!” என சாஷ்டாங்கமாக காலில் விழுந்தான் சங்குராஜா”

எழுந்திரு மகனே” உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றார் சிவன்.

எனது தந்தையார் தங்கள் நாமத்தைக் கூறும் ‘அரகரா’ என்கிற மீனும்,’சிவசிவா’ என்கிற கொக்கும் கூறும் ஒலியைக் கேட்டுஅமைதி பெற விரும்புகிறார்.

அதற்காக இங்கு தவம் செய்ய வந்தேன். தந்தையின் ஆசையை நிறைவேற்றுவது தமையனின் கடமை அல்லவா? அதை தாங்கள்தான் நிறைவேற்ற வேண்டும் என வணங்கி பணிந்தான் சங்குராஜா.

“மகிழ்ந்தேன் உன்னை வார்த்தைகளால் வாழ்த்தினால் மட்டும் போதாது.பெற்றோரை மதிக்கும் உன் பண்பிற்காக நீ கேட்ட வரத்தை தந்தோம்” என்றவர். ஒரு கோலைக் கையில் கொடுத்தார்.

வாங்கிக் கொண்ட
சங்குராஜா இதை வைத்து மீனையும், கொக்கையும் எவ்வாறு பெறுவது என கேட்டான்.

“மகனே! இக்கோலை எடுத்துக்கொண்டு அரண்மனைக்குச் சென்றவுடன் சிறு தொட்டியில் தண்ணீர் நிறைத்துக் கொண்டு தண்ணீரில் உள்ள தொட்டியில் அரகரா என்ற மீன் வரவேண்டும் என சொல் வந்துவிடும்.

பின் தரையில் அடித்து சிவ சிவா என்ற கொக்கு வரவேண்டும் எனக்கேள் வந்துவிடும்” என்றவர்.

பிறர் நலனை பெரிதாக கருதும் உனக்கு என்றும் வெற்றியும் சந்தோசமும் நிலைத்து நிற்கும் என வாழ்த்தி மறைந்தனர்.

நன்றிப் பெருக்குடன் இறைவனை வணங்கினான்
சங்குராஜா.

பின்  பவள நாட்டிற்கு வந்த சங்குராஜா இளவரசி பத்மாவை அழைத்துக் கொண்டு தனது நாட்டிற்கு உடனே புறப்பட வேண்டும் எனக் கூறினான்.

மன்னரும் சங்குராஜாவின் அவசரத்தையும், கடமை உணர்வையும் புரிந்து கொண்டு.

மகள் பத்மாவையும் அவளுக்கு வேண்டிய பொன்னும் பொருளும் கொடுத்து அனுப்பி வைத்தார் மன்னர்.

காவலாளிகள் புடைசூழ இளவரசி பத்மாவுடன் வெங்கி நாட்டிற்கு வந்தான் சங்குராஜா.

கவிஞர் ச. மல்லிகா எழுதும் கதை தொடரும்.

Share.

Leave A Reply