8-முனிவரின் சாபம்

மாலை நேரம் குழந்தைகள் எல்லாம் தாத்தாவிடம் கதை கேட்கும் ஆர்வத்தில் அமைதியாக இருந்தார்கள்.

அம்பிகா பக்கத்தில் அமர்ந்திருந்த ரமாவை பார்த்தாள்.

அவள் கண்கள் அழுததில் சிவந்து இருந்தது. கன்னம் வீங்கி இருந்தது.

“ஏன், ரமா அழுதாயா” எனக்கேட்டவுடன் அவள் முகம் வாடிவிட்டது.
வார்த்தைகள் வராமல் கண்ணீர் வடிந்தது.

இந்த சம்பவத்தைப் பார்த்த தாத்தா ஊகித்துக்  கொண்டார்.

ரமாவிற்கு அம்மா இல்லை. சித்தியிடம் வளர்கிறாள் சித்தி ரமாவை படுத்தும் பாடு ஊருக்கே தெரியும்.

ரமாவை சாந்தப்படுத்தும் வகையில் ஒரு கதை சொல்ல வேண்டும் என நினைத்த தாத்தா. ரமா இங்கே வாம்மா என அழைத்தார்.

ரமாவும் கண்ணைத் துடைத்துக் கொண்டு தாத்தாவின் அருகில் வந்தாள்.

தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்ட தாத்தா கதை சொல்ல ஆரம்பித்தார்.
                ******

ஒரு ஊரில் குப்புசாமி என்ற குடியானவன் வாழ்ந்து வந்தான்.

அவனுக்குத் திருமணமாகி முதல் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் இறந்து போனாள் அவன் மனைவி.

பச்சிளங் குழந்தையை வளர்க்க முடியாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டான் குப்புசாமி.

கருப்பாயி குப்புசாமியை திருமணம் செய்து கொண்டதில் இருந்து குழந்தை மலர்கொடியை வெறுத்தாள்.

மலர் கொடியை சிறுபிள்ளை பிராயத்தில் இருந்து வேலைகள் ஏவுவதும் சாப்பாடு போடாமல் பட்டினி போடுவதுமாக இருந்தாள்.

சில வருடங்கள் கழித்து கருப்பாய்க்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

மலர்விழி என பெயர் சூட்டி சீரும், சிறப்புமாக வளர்த்து வந்தாள் கருப்பாயி.

மலர்விழிக்கு விலை உயர்ந்த துணிகள் எடுத்துப் போட்டு அழகு பார்ப்பாள்.

மலர் கொடி எடுத்துக் கொடுக்க வேண்டுமே என வேண்டா வெறுப்பாக எடுத்துக் கொடுப்பாள்.

அதையும் குப்புசாமி இருக்கும் போது மட்டும்தான் போட்டு விடுவாள். அவன் வேலைக்குச் சென்றவுடன்…

இந்த மூஞ்சிக்கு இந்த உடை ஒரு கேடா! என துணியை கழற்றடி எனப் பிடுங்காத குறையாக கழற்றி விடுவாள்.

ஒரு கரித்துணியை கொடுத்து இதைக் கட்டிக்கொண்டு வேலைகளைச் செய் என கட்டளையிடுவாள்.

ஒரு குடத்தைக் கொடுத்து தண்ணீர் இறைத்து வரச் சொன்னாள் கருப்பாயி.

குடத்தை எடுத்துச் சென்ற மலர்கொடி கிணற்று அடியில் அமர்ந்து அழுவாள்.

“ அம்மா… நீ இறக்கும் போதே என்னையும் கூட்டிக்கொண்டு போயிருக்கக் கூடாதா?

நாள் முழுவதும் வேலை செய்யும் எனக்கு சாப்பிட உணவு கூட கிடைக்கவில்லை. அம்மா, அம்மா…! எனப் பசியால் அழுதாள் மலர்கொடி.

மகள்அழும் ஓசை கேட்டு அம்மா வந்தாள். மகளே! மலர்கொடி நீ பசியால் வாடுவதை என்னால் பார்க்க முடியவில்லை எனக் கூறினாள்.

தாயின் குரல் கேட்டு சுற்றும், முற்றும் பார்த்தாள் மலர்கொடி. கண்ணுக்குத் தெரியவில்லை. குரல் மட்டும் கேட்டது.

“மகளே! மலர் கிணற்றுக்குப் பின்புறம் வெள்ளரிப் பிஞ்சுகள் காய்த்திரிக்கிறது. தினம் நீ இங்கு வந்து சாப்பிட்டு பசி தீர்த்துக்கொள்” என அவள் அம்மாவின் குரல் கூறியது.

“அம்மா… அம்மா நீ எங்கு அம்மா இருக்கிறாய்!” என மலர்கொடி அழுதாள். 

“மகளே! மலர் நான் உன் கண்களுக்குத்  தெரியமாட்டேன். நான் சொல்வது போல் வந்து சாப்பிட்டுச் செல் மகளே” எனக் கூறியது அம்மாவின் குரல்.

மலர்கொடியும் கண்களைத் துடைத்துக் கொண்டு கிணற்றின் பின்புறம் சென்றாள்.

என்ன ஆச்சரியம் இத்தனை நாள் வெற்றிடமாக காட்சி அளித்த இடம் பசுமையான வெள்ளரிக் கொடிகளாக காட்சி தந்தது. அதில் பூவும், பிஞ்சும் பூத்து குலுங்கியது.

வறண்ட பூமியில் மழை நீர் விழும் போது மக்களுக்கு ஏற்படும் சந்தோசம் போல் மலர்கொடிக்கு ஏகப்பட்ட சந்தோசம்.

பிஞ்சுகளைப் பறித்து வயிறு நிறையும் வரை சாப்பிட்டாள்.

அவளுக்கு விவரம் தெரிந்து இன்று போல் என்றைக்கும் சாப்பிட்டதில்லை. வயிறு நிறையவும் முகமும் மலர்ந்தது.

கிணற்றில் நீர் இறைத்து குடத்த நிரப்பிய மலர்கொடி வீட்டிற்கு வந்தாள்.

ஏண்டி இவ்வளவு நேரம்! என சித்தி திட்டியவுடன் பயத்தில் அவள் சந்தோசம் எல்லாம் மறைந்து விட்டது.

“இல்லை சித்தி! பசி தாங்க முடியவில்லை அதுதான்” என இழுத்தாள் மலர்கொடி.

நேரத்திற்கு நேரம் கொட்டிக்காட்டி வேலை செய்ய முடியாதா? இன்று உனக்கு ஒன்றும் கிடையாது போய் படு, என சித்தி விரட்டினாள்.

தினம் ஒரு கவளம் சோறு கொடுப்பாள் இன்று அதுவும் இல்லை.

சரி சித்தி, எனப் போய் படுத்துக் கொண்டாள் மலர்கொடி.

வெள்ளரிப் பிஞ்சை சாப்பிட்டே நாள் ஒரு மேனியாக வளர ஆரம்பித்தாள் மலர்கொடி.

கருப்பாயிக்கு ஆச்சரியம் இவளை வேலை வாங்கி பட்டினி போட்டு சாகட்டும் என நினைத்தாள் இவள் கிழிந்த அழுக்கு உடையிலும்பு அழகாக இருக்கிறாள்.

தன்மகள் கூட இப்படி இல்லையே என மனதிற்குள் கருவிக் கொண்டாள்.

பக்கத்து ஊர் பண்ணையார் பெரியசாமிக்கு குழந்தையே இல்லை. அவர் மனைவி பூவாத்தாளுக்கு குழந்தை என்றால் அவ்வளவு ஆசை.

இவ்வளவு செல்வத்தை கொடுத்த இறைவன் ஒரு குழந்தையை கொடுக்கவில்லையே என இருவரும் வருந்துவார்கள். இறைவனிடம் அழுது புலம்புவார்கள்.

இவர்கள் புலம்பல் இறைவனுக்கு கேட்டு விட்டதோ என்னவோ! ஒரு நாள் மீன் விற்றுக் கொண்டு சென்றவனைக் கூப்பிட்டு பூவாத்தாள் மீன்  வாங்கினாள்.

வீட்டின் பின்புறம் எடுத்துச் சென்ற பூவாத்தாள் நறுக்க எடுத்தாள் மீனை.

“அம்மா என்னை விட்டுவிடு அம்மா” என மீன் பேசியது.

என்ன ஆச்சரியம் மீனாவது பேசுவதாவது, நமது பிரம்மையாக இருக்கும் என நினைத்த பூவாத்தாள் மறுபடியும் மீனை எடுத்து நறுக்க முற்பட்டாள்.

கவிஞர் ச. மல்லிகா எழுதும் கதை தொடரும்.

Share.

Leave A Reply