சரி வாருங்கள் சோதித்துப் பார்க்கலாம் என ஜெயபதியிடம் வந்தார்கள்.
குதிரை மிகவும் களைத்து இருக்கிறது. இந்த மூட்டைகளைப் பார்த்துக் கொள்ளுங்கள். மரநிழலில் கட்டி விட்டு வருகிறோம் என்ற முத்து வியாபாரிகள். மூட்டைகளைப் போட்டுவிட்டு குதிரையுடன் மறைவிடத்திற்கு சென்றார்கள்.
எதார்த்தமாக நடந்திருந்தால் மன்னித்து விடலாம். ஏமாற்ற நினைத்தால் நையப்புடைக்க வேண்டியதுதான் என எண்ணியபடி காத்திருந்தார்கள்.
மறைந்து இருந்து பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
இதை அறியாத ஜெயபதி பழம் நழுவி பாலில் விழுந்து விட்டதாக எண்ணியவன். கரி மூட்டையுடன் முத்து மூட்டையை மாற்றிக் கொண்டு கிளம்ப ஆயத்தமானான்.
மறைந்து இருந்த முத்து வியாபாரிகள் ஜெபதியை சூழ்ந்து கொண்டு அடித்து உதைத்தார்கள்.
ஜெயபதி, நானில்லை… நானில்லை எனக் கூறியது அவர்கள் காதுகளில் கேட்கவில்லை.
குற்றுயிரும் குலை உயிருமாக வீடு வந்து சேர்ந்தான் ஜெயபதி.
உடல் தேற ஆறு மாதம் ஆயிற்று.
பெயரில் மட்டும் ‘ஜெயம்’ இருக்கிறது.எங்கு போனாலும் உதைபட்டு வருகிறோம்.
நடப்பதெல்லாம் தோல்வி. அண்ணன் செய்யும் செயலுக்கு எல்லாம் நான் அடிவாங்கி வருகிறேன். என வேதனைப் பட்டான்.
அண்ணனுக்கு நடப்பது தற்செயல் நாம் செய்வது திட்டமிட்டு ஏமாற்ற நினைக்கிறோம் என்பதை உணர மறுத்தது அவன் மனம்.
பழிவாங்கும் எண்ணத்தை வளர்த்துக் கொண்டே வந்தான்
ஜெயபதி. உடல் குணமடைந்தது.
ரகுபதி தோட்டத்தில் தனியாக இருக்கும் சமயம் பார்த்து சாக்குப்பையுடன் பின்புறமாக வந்து தலையில் கவிழ்த்தினான்.
ரகுபதி தலையை எடுப்பதற்குள் உடலெல்லாம் திணித்து மூட்டையாக கட்டி காட்டுக்கு தூக்கிச் சென்றான்.
பக்கத்தில் கிடந்த சுள்ளிகளை எல்லாம் எடுத்து சாக்கு மூட்டை மேல் போட்டான்.
நீ செத்தால் தான் எனக்கு நிம்மதி என தீப்பெட்டியை பார்த்தான் ஜெயபதி
தீப்பெட்டி எடுத்து வரம் மறந்து இருந்தான்.
பக்கத்தில் சுடுகாட்டில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. அங்கு சென்று நெருப்பு எடுத்து வர விரைந்தான் ஜெயபதி.
அந்த சமயம் மாடுகளை ஓட்டிக்கொண்டு யாரோ வருவதை உணர்ந்தான் ரகுபதி.
இந்த சாக்குப்பையை அவிழ்த்து விடுங்கள் அப்படி செய்தால் இருபது பொற்காசுகள் தருகிறேன். இல்லை என்றால் நான் இறந்த பின் உன்னை வந்து பிடித்துக் கொள்வேன் என்றான் சாக்கு மூட்டைக்குள் இருந்தபடி ரகுபதி.
மாடு ஓட்டி வந்தவன் சிறு பையன். எனவே, அவனுக்குப் பயமாக இருந்தது.
வந்தது வரட்டும் என துணிந்து சாக்கு மூட்டையை அழித்துவிட்டான் சிறுவன்.
நன்றியோடு பார்த்த ரகுபதி கொஞ்சம் உதவி செய் என்றான் சிறுவனைப் பார்த்து.
பக்கத்தில் கிடந்த சருகுகளை எல்லாம் எடுத்து சாக்குப்பையில் நிரப்பினர் இருவரும்.
சாக்குப்பையை முன்பு போல் கட்டி சுள்ளிகளை அதன் மேல் போட்டுவிட்டு மறைந்து கொண்டனர் இருவரும்.
கொள்ளிக் கட்டையுடன் வந்த ஜெயபதி சுள்ளியில் தீ வைத்தான்.
காய்ந்த சருகுகள் படபட எனப் பிடித்துக் கொண்டு எரிந்தது.
‘செத்தான்’ என்ற நிம்மதியுடன் வீட்டிற்குச் சென்றான் ஜெயபதி.
மறைந்திருந்த ரகுபதி சிறுவனை அழைத்துக் கொண்டு தனது வீட்டிற்குச் சென்றான்.
இருபது பொற்காசுகளும், ஆடைகளும் கொடுத்து அனுப்பி வைத்தான் சிறுவனை.
கொஞ்சம் பொற்காசுகளும், நகைகளும்,
முத்துக்களும் எடுத்து ஒரு மூட்டையாக கட்டினான் ரகுபதி.
தம்பியின் வீட்டை நோக்கி சென்றவன் கதவைத் தட்டினான்.
கதவைத் திறந்த ஜெயபதி பயத்தில் வார்த்தை வராமல் பேய்…பேய் என அலறினான்.
தம்பி பயப்பட வேண்டாம். நீ எரித்த பின் நான் மேலே போனேன். அங்கு அம்மா, அப்பாவை எல்லாம் பார்த்தேன். நடந்தவைகளை அறிந்து கொண்ட நம் தாய், தந்தையர் என்னை உயிருடன் அனுப்பினார்கள்…
உனக்கு இந்த மூட்டையை கொடுத்து பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல் வாழும்படி கூறச் சொன்னார்கள் என்றான் ரகுபதி.
“அண்ணனை கொன்றதே பாவம்.தெரியாமல் செய்துவிட்டேன் என்னை மன்னித்து விடு அண்ணா!” என்றான் ஜெயபதி.
நடந்தவைகளை மறந்துவிடு. இனி நல்லவனாக வாழ் அது போதும்.என்றவன், “மூட்டையை திறந்து பார்” என்றான் ரகுபதி.
திறந்து பார்த்த ஜெயபதி கண்கள் பிரகாசமானது. எல்லாம் எனக்கா அண்ணா என்றான்.
ஆமாம்! தம்பி, உனக்குத்தான் இனி சந்தோஷமாக இரு என்று வாழ்த்திவிட்டு தனது இல்லத்திற்குச் சென்றான் ரகுபதி.
ஜெயபதியும் முத்து வியாபாரம் செய்து செல்வந்தர் ஆகி விட்டான்.
இப்போது அண்ணன், தம்பிக்குள் எந்த வேற்றுமையும் இல்லை என்ற தாத்தா கதையை முடித்தார்.
“இதில் இருந்து என்ன தெரிந்து கொண்டீர்கள்” என்றார் ராமு,சங்கரைப் பார்த்து.
தாத்தா இனி யாருக்கு என்ன கிடைத்தாலும் பகிர்ந்து கொள்வோம் என்றார்கள் அண்ணனும், தம்பியும்.
இந்த குணம் எல்லோருக்கும் வந்து விட்டால் பங்காளிச் சண்டை வருவதே குறைந்து போகும் என்றவர் எழுந்து துண்டை எடுத்து தோளில் போட்டார்.
தாத்தா எழுந்தவுடன் குழந்தைகள் எல்லாம் நாங்களும் வருகிறோம் தாத்தா எனக் குதித்துக் கொண்டு அவரவர் வீட்டிற்கு மகிழ்ச்சியுடன் ஓடினார்கள்.
கவிஞர் ச. மல்லிகா எழுதும் கதை தொடரும்.