10-பேராசை பெரும் நஷ்டம்

சூரியன் மறையத் தொடங்கினான். பள்ளிக்கூடம் போய் வந்த களைப்பு போகும் முன் தாத்தா கதை சொல்லிவிடுவார் என ஓடி வந்தார்கள் குழந்தைகள்.

தாத்தா இன்னும் வரவில்லை என அறிந்ததும், வட்டமாக அமர்ந்தார்கள். செந்தில் கையில் வைத்திருந்த மிட்டாயில் ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டவன், மற்றொன்றை எடுத்து பக்கத்தில் அமர்ந்திருந்த தண்டபாணியிடம் கொடுத்தான்.

தண்டபாணியும் வாங்கி சாப்பிட்டவன் மிட்டாய் நல்லா இருக்கவே செந்திலிடம் இருந்து மிட்டாயை எடுக்கப் போனான்.

அந்த சமயம் அங்கு வந்த தாத்தா அதைப் பார்த்துவிட்டார்.

பிறர் பொருளுக்கு ஆசை வைத்தால் இறைவன் தண்டிப்பான் என்றவர் குழந்தைகளுடன்  தானும் அமர்ந்து கொண்டார்.

“அது எப்படி தாத்தா இறைவன் தண்டிப்பார்” எனக் குழந்தைகள் கேள்வி கேட்டனர்.

“சொல்கிறேன் கவனமாக கேளுங்கள்” என்றார் தாத்தா.

எல்லா குழந்தைகளும் அமைதியாக ஆர்வத்துடன் தாத்தா முகத்தைப் பார்க்க ஆரம்பித்தார்கள்.

தாத்தா கதை சொல்ல ஆரம்பித்தார்.
                    *****

ஒரு ஊரில் வேலப்பன் என்ற விவசாயி இருந்தான்.  நல்ல உழைப்பாளி, சூதுவாது தெரியாத அப்பாவி.

அவனுக்கு ஒரு கூரை வீடும், கொஞ்சம் நிலமும் சொந்தமாக இருந்தது.

அந்த நிலத்தில் திணை விதைத்தான். காலத்தே மழை பொழியவும் திணை விளைந்து கதிர்கள் முற்றி அறுவடைக்கு தயாராக இருந்தன.

முத்திரய கதிர்கள் ஆடு, மாடுகள் மேய்ந்து விடக்கூடாது என வேலி போட்டிருந்தான் வேலப்பன்.

இன்னும் ஒரு வாரத்தில் அறுவடை செய்து விடலாம் என அதற்கான வேலையில் ஈடுபட்டிருந்தான் வேலப்பன்.

தேவலோகத்தில் இருந்து பறந்து வந்த வெள்ளை யானைக்கு திணையின் வாசனை மூக்கைத் துளைத்தது.

அதன் வாசனையில் ஈர்க்கப்பட்ட வெள்ளையானை வயலில் இறங்கியது.

முற்றிய திணைக் கதிர்களைக் கண்ட வெள்ளை யானை வயிறார மேய்ந்து விட்டுச் சென்றது.

மறுநாள் வயலுக்கு வந்த வேலப்பன் திணையைக் காணாது வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு துடித்துப் போனான்.

இத்தனை நாள் உழைத்து அறுவடை செய்யப் போகும் சமயம் திருடிவிட்டுப் போய்விட்டார்களே என தேம்பித் தேம்பி அழுதான். பின் தனக்குத் தானே ஆறுதல் செய்து கொண்டு ஒரு முடிவுக்கு வந்தான்.

திருடியவன் நாளை வந்தால் பிடித்து விடுவது என முடிவு செய்தான். திருடன் வரட்டும் பார்க்கலாம் என தன் தோட்டத்தில் ஒளிந்து இருந்தான் வேலப்பன்.

திணையை உண்ட சுவை வெள்ளை யானைக்கு மீண்டும் சாப்பிடத் தோன்றியதால் மறுநாளும் வந்தது திணையை சாப்பிட ஆரம்பித்தது.

அது கண்ட வேலப்பன் யானையை துரத்திக் கொண்டே ஓடி வந்தான். இதைக் கண்ட வெள்ளை யானை பறக்க ஆரம்பித்தது.

ஓடி வந்த வேலப்பன். என்ன செய்வது என்று தெரியாமல் யானையின் வாலைப் பிடித்துக் கொண்டான்.

வெள்ளை யானை மேலே பறக்க பறக்க வேலைப்பனுக்கு பயமாக இருந்தது. வாலை விட்டு விட்டால் விழுந்து விடுவோமே என்று கெட்டியாகப் பிடித்துக் கொண்டான் வேலப்பன்.

தேவலோகத்திற்குப் போன வெள்ளையனை நின்றது. “அப்பாடா” என மூச்சுவிட்டுக் கொண்ட வேலப்பன் வாலை விட்டான்.

வேலப்பனைக் கண்ட தேவர்கள் “மானிடா! நீ எப்படி உடலோடு தேவலோகம் வந்தாய்” என கேட்டார்கள்.

உங்கள் தலைவனிடம் என்னை அழைத்துச் செல்லுங்கள் நான் நீதி கேட்க வேண்டும், என்றான் வேலப்பன்.

தேவலோகத்து தலைவன் இந்திரன் என்பதை அவன் அறியவில்லை. அவன் பெருமையும் தெரியவில்லை வேலப்பனுக்கு.

தேவர்கள் வேலப்பனை இந்திரன் முன் அழைத்துச் சென்றார்கள்.

யார் இந்த மனிதன்? இவன் இங்கு எப்படி வந்தான்? என்றார் இந்திரன்.

இதைக் கேட்ட வேலப்பன். “எனக்கு நீங்கள் தான் நியாயம் சொல்ல வேண்டும். எனக்கு இருந்ததோ காணி நிலம். அதில் திணை பயிரிட்டு இருந்தேன். இங்கு உள்ளது வெள்ளை யானை மேய்ந்து விட்டது. அதற்கு நஷ்ட ஈடு வாங்கத்தான் யானையின் வாலைப் பிடித்துக் கொண்டு வந்தேன்.

எனக்கு ஒரு வழி சொல்லா விட்டால் இவ்விடத்தை விட்டுப் போக மாட்டேன் என்ற வேலப்பன் தரையில் அமர்ந்து கொண்டான்.

இந்திரனுக்கு அவன் செய்கை கோபம் வந்தாலும், சிரிப்பும் வந்தது.

அவன் ஒரு வெகுளி என்பதை ஞான திருஷ்டியில் அறிந்து கொண்ட இந்திரன். ஒரு மரக்கால் பொற்காசுகள் அளந்து கொடுத்து பூலோகத்தில் விட்டு விட்டு வாருங்கள் என தேவ பணியாளர்களுக்கு கட்டளையிட்டார் இந்திரன்.

இந்திரன் கட்டளைப் படியே ஒரு மரக்கால் பொற்காசுகள் கொடுத்து வேலப்பனே அவன் வீட்டு முன் கொண்டு வந்து விட்டார்கள் தேவ பணியாளர்கள்.

வேலப்பனும் பொற் காசுகளுடன் தனது வீட்டுக்கு வந்து தனது மனைவி கருப்பாயிடம் நடந்தவற்றை எல்லாம் சொன்னான்.

கருப்பாயும் தன் கணவன் சொன்னதெல்லாம் கேட்டு ஆச்சரியப்பட்டாள்.

நமக்கு இப்பவாவது நல்ல காலம் பிறந்ததே என சந்தோசப் பட்டார்கள்.

பொற்காசின் மதிப்பு தெரியாத வேலப்பன். இரண்டு பொற்காசுகளை எடுத்துக்கொண்டு கந்தப்பன் என்ற வட்டிக்கடைக்காரரிடம் சென்றான்.

“ இதை வைத்துக் கொண்டு பணம் தாருங்கள்” என்றான் வேலப்பன்.

கந்தப்பனும் பொற்காசுகளை வாங்கி உரசிப் பார்த்தான். நல்ல தங்கமாக இருந்தது.

இதுவரை அவர் கடைக்கு வந்த நாணயங்களில் இது போன்ற பள பளப்பான நாணயத்தை கண்டதில்லை கந்தப்பன்.

“இந்த நாணயம் ஏது?” என  மெதுவாக விசாரித்தான் கந்தப்பன்.

வெகுளிலயான வேலப்பனும், நடந்தவற்றை எல்லாம் ஒன்று விடாமல் சொன்னான்.

இதைக் கேட்ட கருந்தப்பனுக்கு ஆசை வந்தது. வெகுளியான வேலப்பனை ஏமாற்றுவது பெரிய விசயம் அல்ல என்பதை உணர்ந்து கொண்டான் கந்தப்பன்.

வேலப்பா! உன்னிடம் உள்ள பொற்காசுகளை எல்லாம் கொண்டுவந்து என்னிடம் கொடு நான் விவசாயத்திற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்து தருகிறேன் என்றவன் கொஞ்சம் பணமும் கொடுத்து அனுப்பினான்.

பொற்காசுகளின் மதிப்பு தெரியாத வேலப்பனும் மகிழ்ந்து அப்படியே செய்கிறேன் என்றான். பணத்தை வாங்கிக் கொண்டு சொன்னபடியே வேலப்பனும்  நடந்து கொண்டான்.

வேலப்பன் மீண்டும் திணை விதைத்தான். திணை முற்றிய நிலைக்கு வந்தது.

இதை எதிர்பார்த்திருந்த கந்தப்பன். வேலப்பனிடம் நாம் மறைத்து இருக்கலாம். வெள்ளை யானை வந்தால் வாலைப்  பிடித்துக் கொண்டு போய் இருவரும் பொற்காசுகள் வாங்கி வரலாம். வரவில்லை என்றால் போகிறேது. என ஓட்டுதல் இல்லாமல் பேசினான் கந்தப்பன்.

அந்த சமயம் பார்த்து வெள்ளை யானை வயலில் இறங்கியது. வேலப்பன் வாலைப் பிடிப்பதை அறிந்த வெள்ளை யானை பறக்க ஆரம்பித்தது. இதை எதிர்பார்க்காத கந்தப்பன் ஓடி வருவதற்குள் யானை பறக்க ஆரம்பித்து விட்டது.

கந்தப்பன் என்ன செய்வது என திகைத்து பின் வேலப்பனின் காலை கட்டியாகப் பிடித்துக் கொண்டான். மூன்று பேரும் மேலே பறக்க ஆரம்பித்தார்கள்.

மேலே பறக்க பறக்க கந்தப்பனுக்கு ஆசை அதிகமானது.

வேலப்பா உனக்கு பொற்காசு அளந்து கொடுத்த மரக்கால் சிறியதா? பெரியதா? எனக் கேட்டான் கந்தப்பன்.

வெகுளியான வேலப்பன் “பெரியது” என கையை விரித்து காண்பித்தான். யானையின் வாலை விட்டு விட்டான் வேலப்பன். அடுத்த நொடியே  கந்தப்பன் மேல் விழுந்தான்.

கந்தப்பனும் நிலை தடுமாறி கீழே விழுந்தான் அவன் மேல் வேலப்பன் விழுந்தான். யானை மேலே பறந்து போய்விட்டது.

மேலே இருந்து விழுந்ததால் கந்தப்பன் இறந்து போனான். அவன் மேல் வேலப்பன் விழுந்ததால் காயங்களுடன் உயிர் பிழைத்தான் எனக் கதையை  முடித்தார் தாத்தா.
                ******

இக்கதையைக் கேட்ட குழந்தைகள் தாத்தா “பேராசை பெரும் நஷ்டம்” எனத் தெரிந்து கொண்டோம் என ஒருமித்த குரலில் கூறினார்கள்.

மிகச் சரியாக சொன்னீர்கள் வேலப்பன் கொடுத்த பொற்காசுகளை வைத்துக் கொண்டு இருந்திருந்தாலும் இறந்திருக்க மாட்டான். அது போதாது என இன்னும் வேண்டும் என பேராசை பட்டதால் கந்தப்பன் இறந்து போனான்.

வெகுளியான  வேலப்பன் காயங்களுடன் கடவுள் கிருப்பையால் பிழைத்துக் கொண்டான்.

எனவே, அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படுவதும் தவறு, அளவுக்கு மிகுதியாக பேராசைப்படுவதும் தவறு, என கதையை முடித்தார் தாத்தா.

இன்றைக்கு நீங்களே தெளிந்த அறிவுடன் பேச ஆரம்பித்து விட்டீர்கள். என தாத்தா சந்தோசப் பட்டார்.

பின்னர் குழந்தைகளை, நீங்கள் போய் படியுங்கள் என்றவர் எழுந்தார் வீட்டுக்குப் போக….

குழந்தைகளும் நல்ல ஒரு கதை கேட்ட திருப்தியில் வீட்டிற்குப் போக எழுந்தார்கள்.

கவிஞர் ச. மல்லிகா எழுதும் கதை தொடரும்.

Share.

Leave A Reply