9- புத்திமான் பகவான்

சூரியன் மறையும் நேரம். மாலை வெயில் மங்கிக் கொண்டு வந்தது. குழந்தைகள் தாத்தாவிடம் கதை கேட்க வந்து கொண்டு இருந்தார்கள்.

தாத்தாவும் வந்துஅமர்ந்தார்.

தாத்தா…தாத்தா நேற்று இரவு ஜெகன் வீட்டிற்கு ஒரு திருடன் வந்திருக்கிறான். அவனை ஜெகன் தந்தை சாமர்த்தியமாகப் பிடித்து கைகளைக் கட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்து இருக்கிறார்கள். என்றனர் ஒரே குரலாக குழந்தைகள்.

“நானும் கேள்விப்பட்டேன் புத்தி கூர்மையை பயன்படுத்தினால் பூதத்தைக் கூட கொல்லலாம்”  என தாத்தா கூறினார்.

“அது எப்படி தாத்தா பூதத்தைக் கொல்வது அதைச் சொல்லுங்கள்” என குழந்தைகள் குதூகளித்தனர்.

பூதக்கதை என்றாலே  குழந்தைகள் முகத்தில் சந்தோசம்தான் தாண்டவம் ஆடும்.

குழந்தைகளின் சந்தோசத்தை ரசித்துக்கொண்டே தாத்தா “அமைதியாக இருங்கள் சொல்கிறேன்” என்றவர் சொல்ல ஆரம்பித்தார்.
                  *****

ஒரு ஊரில் கந்தசாமி, கமலா என்ற தம்பதிகள் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு ராமு,
சோமு என்ற இரண்டு மகன்கள் இருந்தனர்.

குடும்பத்தில் ஒரு சொந்தம் உருவானது.

கமலா கர்ப்பமானாள் எல்லோருக்கும் சந்தோசம். பெண் குழந்தை தான் பிறக்க வேண்டும் என எல்லோரும் ஆசைப்பட்டார்கள்.

அந்த சமயம் பார்த்து அந்த ஊருக்கு ஒரு முனிவர் வந்தார்.

முனிவரிடம் சென்ற கந்தசாமியும், கமலாவும் தங்கள் ஆசையைக் கூறினார்கள்.

முனிவரும் தியானத்தில் சிறிது நேரம் இருந்தபின் இருவரையும் அழைத்தார்.

இருவரும் பணிவுடன் வணங்கி நின்றார்கள்.

வருகிற பௌர்ணமி அன்று அம்பாளுக்கு பூஜை செய்து மாதுளம் பழத்தை நைவேத்தியமாக வைத்து அப்பழத்தை பூசித்தால் உங்கள் ஆசை நிறைவேறும்.என்று கூறினார் முனிவர்.

பௌர்ணமியும் நெருங்கிக் கொண்டு இருந்தது எங்கு தேடியும் மாதுளம் பழம் கிடைக்கவில்லை.

ராமுவும், சோமுவும் எப்படியாவது மாதுளம் பழத்துடன் வருகிறோம் எனக் கூறிவிட்டு பழத்தை தேடிச் சென்றார்கள்.

தேடிக் கொண்டே வந்தவர்கள் காட்டுப் பகுதிக்கு வந்து விட்டார்கள்.

அங்கு ஒரு பழத்தோட்டம் இருப்பது கண்டு ஆச்சரியப்பட்டவர்களாக அந்த இடத்தை நோக்கிச் சென்றார்கள் இருவரும்.

மா, பலா, தென்னை, வாழை, கொய்யா என கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது அத்தோட்டம். மாதுளை இருக்கிறதா என தேடினார்கள்.

அதோ அங்கே பார் இருக்கிறது என மகிழ்ச்சியுடன் கூறினான் ராமு.

ராமு கை நீட்டிய பக்கம் பார்த்தான். மாதுளம் பழம் தொங்கிக் கொண்டு இருந்தது முகம் மலர்ந்தான் சோமு.

சுற்றிப் பார்த்தனர் இருவரும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரையும் காணவில்லை.

பழத்தைப் பறிப்போம் தோட்டத்துக்காரர் வந்தால் பணத்தை கொடுத்து விடுவோம் என முடிவு செய்த பின் ஆளுக்கு ஒரு பழமாக பறித்தனர்.

அந்த மரத்தில் ஒரு பூதம் இருந்தது எவர்  மாதுளையை பறித்தாலும் அது அவர்களை சும்மா விடாது.

இந்த பூதத்திற்கு பயந்தே அந்த தோட்டத்திற்கு யாரும் வருவதில்லை.

இவர்களுக்கு பூதம் பற்றி எந்த விபரமும் தெரியாது. மாதுளம் பழத்தைப் பறித்துக் கொண்டிருந்த போது தங்கள் முன் இடி சத்தத்துடன் பெரிய உருவம் திடீர் என வந்து நிற்கவும் ராமுவும், சோமுவும் நடுநடுங்கி திரு திரு என விழித்தார்கள்.

“டேய் சிறுவர்களா இந்த மரம் என்னுடையது. இதில் ஏன் என் அனுமதி இன்றி பழம் பறித்தீர்கள். உங்களை விழுங்கப் போகிறேன்” என ஹ.. ஹ.. ஹ… என பூமியே நடுங்கும்படி சிரித்தது பூதம்.

பூதம் சிரிப்பதைக் கண்ட ராமுவும், சோமுவும் உடல் நடுங்கி பயத்தால் ஓ…! என அழுதுவிட்டார்கள்.

இந்தா! நாங்கள் பறித்த பழத்தை தந்து விடுகிறோம். எங்களை ஒன்றும் செய்து விடாதே, எங்களுக்கு ஒரு தங்கை பிறக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பறித்து விட்டோம்…

எங்களை ஒன்றும் செய்து விடாதே! என அழுது கொண்டே கெஞ்சினார்கள் இருவரும்.

சிறுவர்கள் கூறியதைக் கேட்ட பூதம் மனதிற்குள் சந்தோசப்பட்டுக் கொண்டு வெளியில் காட்டிக் கொள்ளாமல்…

ஏய் சிறுவர்களா! ஒன்று பழத்தை மரத்தில் ஒட்டவைக்க வேண்டும் அல்லது குழந்தை பிறந்ததும் எனக்குத் தந்துவிட வேண்டும் எதைச்  செய்கிறீர்கள் என்று உறுமியது பூதம்.

பறித்த பழத்தை ஒட்ட வைக்க முடியுமா? சிறுவர்கள் என்ன செய்வது என தெரியாமல் தவித்தனர்.

சரி போங்கள் என்றது பூதம்.

உடனே சிறுவர்கள் இருவரும் மகிழ்ச்சியில் ஓட ஆரம்பித்தார்கள்.

“நில்லுங்கள்’ என்றது பூதம்.

மின்சாரம் தாக்கியது போல் மறுபடியும் நின்றார்கள். உடல் கருகாமல் மனம் கருகியது அவர்களுக்கு.

“குழந்தை பிறந்ததும் வந்து விடுவேன்” என எச்சரித்த பூதம் போக அனுமதித்தது.

சிறுவர்கள் பயத்துடன் ஓடி வந்து பெற்றோரிடம் நடந்ததைச் சொல்லி அழுதனர்.

பெற்றோர் சமாதானம் சொன்னார்கள். “பூதம் ஊருக்குள் வராது பயப்பட வேண்டாம் சும்மா மிரட்டி இருக்கும்” என ஆறுதல் சொன்னார்கள்.

பௌர்ணமி பூஜை நடந்தது. நைவேத்தியம் செய்த மாதுளம் பழத்தை கமலத்திடம் சாப்பிடக் கொடுத்தனர்.

கமலமும் பக்தியுடன் வாங்கி உண்டாள்.

  உரிய காலம் வந்ததும் அழகான பெண் குழந்தை பிறந்தது.

எல்லோரும் சந்தோசப்பட்டார்கள். பூதம் சொன்னதை  அப்போது யாரும் நினைக்கக் கூட இல்லை மறந்து போயிருந்தனர்.

காலையில் சூரியன் வெண் கதிர்களால் எழுப்பினான். வெளியில் வர கதவைத் திறந்த கந்தசாமி அதிர்ச்சியில் அப்படியே உறைந்துவிட்டார்.

வீட்டில் முன் உள்ள திண்ணையில் கரும்பூதம் அமர்ந்திருந்தது.

கந்தசாமியைப் பார்த்த பூதம். “எங்கே குழந்தை” அது எனக்குச் சொந்தம். மாதுளம் பழம் கொண்டு வந்த சிறுவர்கள் சொல்லவில்லையா? கொண்டு வா குழந்தையை! என்றது பூதம்.

“பிறந்த குழந்தையை வாங்கிப் போய் எப்படி வளர்ப்பாய். குழந்தைக்கு பால் வேண்டாமா? தாயையும், சேயையும் உடனே பிரிப்பது பாவமல்லவா! ஆறு மாதம் கழித்து வந்து குழந்தையை வாங்கிப் போ!” என்றான் கந்தசாமி.

சரி என்ற பூதம் கிளம்பியது. ஆறு மாதம் கழித்து மீண்டும் வந்தது குழந்தையைக் கேட்க.

“தனியாக குழந்தைக்கு சாப்பிட கூட தெரியாது, நடக்கக்கூட முடியாது, எப்படி வளர்ப்பாய் ஒரு வருடம் கழித்து வா” என்றான் கந்தசாமி.

பூதமும் சரியெனப் போய்விட்டது. இன்னும் ஆறு மாதம் நம்மிடம் குழந்தை இருக்கும் என நிம்மதி பெருமூச்சி விட்டனர்.

ஒரு வருடம் ஓடிவிட்டது. பூதம் வந்து கதவை தட்டியது.

பூதத்தைப் பார்த்த கமலா என்ன சொல்வது என யோசித்துக் கொண்டே இருந்தாள்.

என்ன குழந்தையை இப்போதாவது கொடுக்கிறீர்களா? இல்லை எடுத்துக் கொண்டு போகட்டுமா? என்றது பூதம்.

குழந்தையை எடுத்துக்கொண்டு போய் என்ன செய்வாய் என மெதுவாக கேட்டாள் கமலா.

உற்சாகமாக பூதம் “திருமணம் செய்து கொள்வேன்” என்றது.

கவிஞர் ச. மல்லிகா எழுதும் கதை தொடரும்.

Share.

Leave A Reply