7-சேற்றில் சிக்கிய காகம்

தாத்தா மரத்தடியில் அமர்ந்து இருந்தார் கதை சொல்ல.

அப்போது சோமு மிகுந்த கவலை கொண்ட முகத்துடன் மெதுவாக வந்து அமர்ந்தான்.

அவனைக் கண்ட தாத்தா “சோமு இங்கே வா” என அழைத்தார்.

“என்ன தாத்தா?” என அருகில் வந்தான் சோமு.

ஏன் உனது முகம் வாடி இருக்கிறது? என நலம் விசாரித்தார் தாத்தா.

தாத்தா கேட்ட  உடன் சோமுவிற்கு கண்கலங்கி கண்ணில்… நீர் பெருகி கன்னத்தில் வடிந்தது.

என்ன சோமு நடந்தது? என தாத்தா ஆதரவாக அவன் கரங்களைப் பற்றி தன் அருகில் அமரச் செய்து கண்ணீரைத் துடைத்து விட்டார்.

தாத்தாவின் ஆறுதல் சோமுவை அமைதி அடையச் செய்தது.

தாத்தா!என பேச ஆரம்பித்தான் சோமு.

சொல்  சோமு,எனக் கேட்டார் தாத்தா.

எங்க அப்பா அவர் நண்பரிடம் பணம் கொடுத்திருக்கிறார். அதை அவர் இப்போது ஏமாற்றிவிட்டு வெளியூருக்குச் சென்று விட்டார், என்றான் சோமு.

“இப்படி சிலர் இருப்பதால் தான் நட்புக்கே களங்கம் ஏற்பட்டு விடுகிறது” என்ற தாத்தா! கதை சொல்ல ஆரம்பித்தார்.
                   *****
ஒரு காட்டில் ஒரு குருவி கூடு கட்டி வாழ்ந்து வந்தது.

மரத்தில் அல்ல, பழைய இடிந்த வீட்டில் பொந்து போல் அலகால் தோண்டி இரண்டு அடுக்காக கூடு கட்டியது.

மேல் அடுக்கில் மழைக் காலங்களில் வெளியில் செல்லாமல் உண்பதற்கு வேண்டிய உணவுகளை சேகரித்து வைத்திருந்தது.

அதே காட்டில் ஒரு காகமும் வாழ்ந்தது. அக்காகம் மரத்தில் கூடு கட்டி வாழ்ந்து வந்தது.

அன்றைக்கு வேண்டிய உணவை மட்டும் தேடி சாப்பிட்டு இரவு வந்ததும் கூட்டில் வந்து தங்கிவிடும்.

இவ்வாறு காலத்தை ஓட்டியது காகம்.

ஒரு நாள் மேகம் கருத்தது. இடி, மின்னலுடன் பலத்த காற்று வீசியது. மரத்துடன் மரம் மோதி  உய்…உய்…   என இரைச்சல். சற்று நேரத்திற்கெல்லாம் மழை கொட்ட ஆரம்பித்தது.

காற்று வீசிய வேகத்தில் மரம் வேருடன் கீழே சாய்ந்தது. அதில் தங்கியிருந்த காகக்கூடும் மரக்கிளைக்குள் சிக்கி நொறுங்கிப் போனது.

காகம் மழையில் நனைந்து தனது கூட்டையும் இழந்த நிலையில் தத்தி…தத்தி குருவிக் கூட்டுக்கு அருகில் வந்து நின்றது.

குளிரில் நடுங்கியபடி இறக்கைகளை சிலுப்பிக்கொண்டு மெதுவாக தன் அலகால்  குருவியின் வீட்டைத் தட்டி… தட்டி கூப்பிட்டது.

சத்தம் கேட்டு வெளியில் வந்து எட்டிப் பார்த்த குருவி, காகம் மழையில் நனைந்திருப்பது கண்டு மனம் இறங்கி உள்ளே வர அனுமதித்தது.

காகத்தின் மேல் உள்ள ஈரம் உலர்ந்த பின் காகம் சாப்பிட தனக்காக சேமித்து வைத்திருந்த உணவிலிருந்து சிறிது எடுத்து வந்து சாப்பிடக் கொடுத்தது குருவி.

காகமும் நன்றாகச் சாப்பிட்டது. வயிறு முட்ட சாப்பிட்டவுடன் தூக்கம் வந்தது காகத்திற்கு.

இதை கவனித்த குருவி காகத்திடம், “இந்த கூட்டில் ஒருவர்தான்  படுக்க முடியும். நீ மேலே இருக்கும் கூட்டில் படித்துக் கொள்” என அழைத்துச் சென்று படுக்க வைத்தது குருவி.

காகமும் மேலே சென்று படுத்துக்கொண்டது. குருவி கீழே வந்து தூங்கிவிட்டது.

நடு இரவில் கண் விழித்த காகம் என்ன பலவகையான வாசனைகள்! மூக்கை உறிஞ்சிய காகம். அங்கும், இங்கும் நகர்ந்து என்ன இருக்கிறது எனப் பார்க்க ஆரம்பித்தது.

குருவி சிறிது சிறிதாகச் சேர்த்த உணவை எல்லாம் தின்று தீர்த்தது காகம்.

காகத்திற்கு உதவி செய்த சந்தோசத்தில் நன்கு தூங்கிய குருவி காலையில் கண்விழித்தது.

மேலே சென்று காகத்தைப் பார்த்தது. குருவி. காகத்தைக் காணவில்லை. சுற்றும்,முற்றம் பார்த்தது குருவி. எங்கும் காகம் இல்லை.

தான் சேர்த்து வைத்திருந்த உணவு எல்லாம் எதுவும் இல்லை எல்லாம் கலைந்து சிதறிக் கிடந்தது.

அது கண்ட குருவி காகத்திற்கு உதவி செய்யப்போய் இப்படி நம்மை ஏமாற்றி விட்டதே என வருந்தியது.

இதற்குள் உண்ட வீட்டிற்கே  ரெண்டகம் செய்த காகம் குருவி எழுந்தால் தனது ‘செயல்’ தெரிந்துவிடும் என நினைத்து காகம், கீழே வந்து பார்த்தது.

குருவி நன்கு தூங்கிக் கொண்டு இருந்தது வசதியாகப் போயிற்று காகத்திற்கு. மெதுவாக வந்த காகம் கூட்டை விட்டுப் பறந்து சென்றது.

இரவு எல்லாம் விழித்து உணவு உண்டதால் காகத்திற்கு ஒரே தாகம்.

பறந்து கொண்டிருந்த காகம் தண்ணீர் குடிக்கலாம் எனக் கீழே இறங்கி தண்ணீர் உள்ள இடத்தில் காகம் காலை வைத்தது.

அடுத்த நொடியில் காகத்தின் கால்கள் அங்குள்ள சேற்றில் உள்ளே சென்றது. காலை எடுக்க முடியவில்லை காகத்தால்.

இதை சற்றும் எதிர்பார்க்காத காகம். பறக்க முயற்சி செய்தது.அதற்குள் ‘சிறகு’களும் சேற்றில் சிக்கிக் கொண்டன.

கொஞ்சம் கொஞ்சமாகக் காகம் சேற்றில் மூழ்கிக்  கொண்டு இருந்தது.

முதல் நாள் இரவு பெய்த மழையில் தண்ணீர் எங்கும் நிறைந்து இருந்ததால் ‘புதைக்குழி’ உள்ள இடம் என்று தெரியாமல் சிக்கிய காகம் சிறிது சிறிதாக சேற்றில் மூழ்கியது.

உள்ளன்புடன் உதவி செய்த குருவியின் அன்பை உதாசீனப்படுத்தியதால் வந்த விளைவு என நினைத்தபடி உயிரை விட்டது காகம்.

பார்த்தீர்களா குழந்தைகளே! ஒருவர் நமக்கு உதவி செய்தால் நாம் அன்நன்றியை மறந்து விடக்கூடாது.

ஒருவர் மனம் புண்படும்படி நடந்தால் நமக்கே தீங்கு நேரும் என்பது இக்கதையின் மூலம் நமக்கு நன்கு புரிந்து விட்டது என்றார் தாத்தா.

குழந்தைகளும் ‘ஆமாம்’ என்றனர்.

சிறுவர்களுக்கு புரிந்து விட்ட சந்தோசத்துடன் வீட்டிற்குச் செல்ல எழுந்தார் தாத்தா.

கவிஞர் ச. மல்லிகா எழுதும் கதை தொடரும்.

Share.

Leave A Reply