3- அரகரா மீனும் சிவசிவா கொக்கும்
“தாத்தா இன்று எங்களுக்கு என்ன கதை சொல்லப் போகிறீர்கள்” என சிறுவர்கள் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.
“அமைதி….. அமைதி” என்றார் தாத்தா.
நாம் பிறருக்காக செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நமக்கு நன்மை பயக்கும் என்பதை விளக்கும் வகையில் கதை சொல்லப் போகிறேன். அதை கேட்கும் நீங்களும் பிறருக்காக நன்மைகள் செய்ய வேண்டும்” என்ற தாத்தா கதை சொல்ல ஆரம்பித்தார்.
*****
குறுநில மன்னர்களில் ஒருவர் ராஜேந்திரன். காவேரி என்ற இளவரசியை திருமணம் செய்தார்.
எல்லா செல்வங்களும் இருந்தது. குழந்தை செல்வம் மட்டும் அந்த அரண்மனையில் தவழவில்லை.
“தனக்கு ஒரு வாரிசு இல்லையே” என்ற ஏக்கம் மன்னர் ராஜேந்திரனிடம் இருந்தது.
இதை அறிந்த ராஜேந்திரனின் தந்தை, மன்னருக்கு மறுமணம் செய்து வைத்தார். வாரிசு வேண்டுமே என்பதற்காக.
இரண்டாவது மனைவி கோதைக்கும் குழந்தை பாக்கியம் இல்லாமல் போய்விட்டது. மீண்டும் மன்னர் கவலையுற்றார்.
அந்த சமயத்தில் அந்நாட்டிற்கு முனிவர் ஒருவர் வந்தார்.
முனிவரை வரவழைத்து தனது கவலையை வெளிப்படுத்தினார் மன்னர்.
மன்னரின் கவலையை போக்க முடிவு செய்த முனிவரும், “மன்னா! இந்த மாங்கனியை பெற்றுக்கொள்” என்றவர்.
“இதை உனது மனைவிக்குக் கொடுத்து உண்ணச் சொல் கனியை சாப்பிடும் முன் இஷ்ட தெய்வத்தை வணங்கச் சொல். நற்பலன் அடைவீர்கள்” என வாழ்த்தி விடை பெற்றார் முனிவர்.
மன்னரும் அக்கனியைப் பெற்றுக் கொண்டு அரண்மனைக்குச் சென்றார்.
கோதையிடம் கொடுத்து அக்கனியை சாப்பிடச் சொன்னார் மன்னர் ராஜேந்திரன்.
இதை மறைந்திருந்து கேட்ட வேலைக்காரி, ஓடிச் சென்று மன்னரின் முதல் மனைவி காவிரியிடம் கூறினாள்.
காவேரியும் உடனே கிளம்பி அரண்மனை அந்தப் புரத்திற்கு வந்தாள். அவள் வருவதற்குள் மாங்கனியை சாப்பிட்ட கோதை கொட்டையை சன்னல் வழியாக தூக்கி எறிந்தாள்.
காவேரி அக்கொட்டையை லாவகமாகப் பிடித்து வாயில் போட்டு முழுங்கி விட்டாள். தனக்கு இதுவாவது கிடைத்ததே என்ற சந்தோசத்தில் திரும்பிச் சென்று விட்டாள்.
கோதை சில நாட்களில் கர்ப்பம் தரித்தாள்.
அதே சமயம் காவேரியும் கர்ப்பமுற்றாள்.
பத்து மாதம் முடிந்த பின் கோதை அழகான ஆண் குழந்தைக்குத் தாயானாள்.
அரண்மனையில் அலங்காரமும், வான வேடிக்கைகளும், கூத்தும், பாட்டும் என நாடே கொண்டாடியது.
மன்னர் ராஜேந்திரனுக்கு ஏற்பட்ட சந்தோசத்திற்கு எல்லையே இல்லை. அந்த சந்தோசத்தை மக்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணினார் மன்னர்.
ஒரு வாரத்திற்கு அரண்மனையிலேயே அறுசுவை உணவு, இனிப்புடன் வழங்கப்படும் என அறிவித்தார்.
ஊரே சந்தோசமாக இருக்கும் போது ஒரு மனம் மட்டும் அழுது கொண்டிருந்தது.
ராணி காவேரிக்குப் பிறந்த குழந்தை சங்காகப் பிறந்தது. கணவரும் ஒதுக்கி விட்டார், குழந்தையும் இவ்வாறு பிறந்து இருக்கிறது. என காவேரி மனவேதனையில் துடித்தாள்.
சிறிது.. சிறிதாக மனதை தைரியப்படுத்திக் கொண்டாள். எல்லாம் நன்மைக்கே என ஆறுதல் படுத்திக் கொண்டாள்.
காலம் யாருக்காகவும் நிற்கவில்லை. நாட்கள், மாதங்களாகவும் மாதங்கள் வருடங்களாகவும் உருண்டு ஓடியது.
ராணி காவிரி தனித்து இருப்பதால் அவளுக்குத் தேவையான உணவு மட்டும் செய்து வைப்பாள் வேலைக்காரி.
சில நாட்களாகவே உணவுகள் குறைந்து கொண்டே இருந்தது.
எதனால் இவ்வாறு உணவு குறைகிறது என தெரிந்து கொள்ள காவிரி மறைந்து இருந்து பார்த்தாள்.
சங்கு ஓட்டை கழற்றிவிட்டு ஒரு சிறுவன் வந்தான். அவன் மிக அழகாகவும், பிரகாசமாகவும் இருந்தான். மெதுவாகச் சென்று உணவு எடுத்து உண்ண ஆரம்பித்தார்.
இதைக் கண்ட காவேரியின் கண்கள் குளமானது. வாய் பேச முடியாமல் உடல் புல்லரித்தது.
மகனே! என சங்குப் பையனைக் கட்டிப்பிடித்து அழுதாள் காவேரி.
அம்மா… என அவனும் கழுத்தைக் கட்டிக் கொண்டான்.
மடியில் படுக்க வைத்துக் கொண்ட காவிரி மகனே! உனக்கு பாலும், பழமும் கொடுக்காமல் தூக்கி எறிந்தேனே! மகனே ‘சங்கு’ என தலை, நெற்றி, கன்னம் என மாறி…மாறி முத்தமிட்டு மகிழ்ந்தாள்.
சங்கிற்குள் இருந்து வந்ததால் சங்கு ராஜா என பெயரிட்டு மகிழ்ந்தாள் காவேரி.
சங்க ராஜாவும் நாளொரு மேனியாகவும், பொழுதொரு வண்ணமாகவும் வளர்ந்து வந்தான்.
இதே சமயம் அரண்மனையில் கோதையின் மகனுக்கு முகுந்தன் என பெயரிட்டு பூ போன்றும், பொன் போன்றும் பேணி வளர்த்தார்கள். முகுந்தன் மிகவும் செல்லமாக வளர்த்தார்கள்.
முகுந்தன் மிகவும் செல்லமாக வளர்ந்ததால் பிடிவாதமாகவும் தான் செய்வதே சரி எனவும் செயல்பட்டாள். முகுந்தனுக்கு உரிய வயது வந்தவுடன் கல்வி, கலைகள் கற்க குருகுலத்தில் சேர்த்தார்கள்.
அதே குருவிடம் சங்கு ராஜாவும் சேர்ந்தான்.
சங்கு எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்றான்.
முகுந்தனுக்கு எதையும் கற்றுக் கொள்ளும் ஆர்வமே இல்லை. விளையாடுவதும், வீண் வம்புகள் செய்வதுமே அவனுக்குப் பிடித்து இருந்தது.
வயது வந்தால் பக்குவப்படுவான் என எண்ணினார் மன்னர். ஆனால், முகுந்தன் வேடிக்கைகளிலும், கேளிக்கைகளிலும் நேரத்தை வீணடித்துக் கொண்டிருந்தான்.
இதைக் கவனித்த மன்னர் இவனிடம் எப்படி ஆட்சியை ஒப்படைப்பது என கவலை கொண்டார்.
மதி மந்திரியை அழைத்து யோசனை கேட்டார் மன்னர்.
மந்தியும் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார்.
“மன்னா! ‘அரகரா’என்கிற மீனையும், ‘சிவசிவா’ என்கிற கொக்கையும் கொண்டு வரும்படி கூறுங்கள். தேடிச் செல்லும்போது பல கஷ்ட, நஷ்டங்கள் ஏற்படும் அப்படி ஏற்படும்போது உலக அனுபவத்தை நம் இளவரசர் புரிந்து கொள்வார்” எனக் கூறினார்.
மந்திரி கூறியதிலும் உண்மை இருப்பதை புரிந்து கொண்ட மன்னர். மந்திரியும், மன்னரும் சேர்ந்து ஒரு நாடகம் நடத்தினர்.
கவிஞர் ச.மல்லிகா எழுதும் கதை தொடரும்.