ஜெயபதியும் மனைவி சொன்னது போல் புளியோதரை, டமாராத்துடன் காட்டு வழியாகச் சென்றான்.

மாலையானது மனைவி சொன்னது போல் சாப்பிட்ட ஜெயபதி அதே மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டான்.

கள்வர்கள் வர வேண்டுமே என கவலையுடன் காத்திருந்தான் ஜெயபதி.

நள்ளிரவு தீவெட்டிகளுடன் கள்வர்கள் வந்தார்கள். அதே மரத்தின் கீழ் அமர்ந்தார்கள்.

இதைத்தானே எதிர்பார்த்து காத்திருந்தான் ஜெயபதி. உடனே, டமாரத்தை எடுத்து பலமாகத் தட்டினான்.

ஆனால், கள்வர்கள் ஓடவில்லை. முன்பு போல் ஓடி பெருஞ் செல்வத்தை இழந்தவர்கள் ஆச்சே.

மறுநாள் செல்வமும் கிடைத்தது. கள்வர்கள் ஓடி விட்டார்கள் என்ற அறிவிப்பு அரண்மனையில் இருந்து வராததால் இது தனிப்பட்டவனின் ‘சதி’ என ஊகித்து இருந்தனர்.

இன்றும் அது போல் ‘டமாரம்’ அடிக்கவே சுதாரித்துக் கொண்டு மேலே பார்த்தார்கள் கள்வர்கள்.

ஜெயபதி எதையும் கவனிக்காமல் ‘டமாரம்’ அடித்துக் கொண்டே இருந்தான்.

முன்பும் நம்மை ஏமாற்றியவன் இவனாகத்தான் இருக்கும் என எண்ணி மரத்தில் ஏறி நையப்படைத்தார்கள்.

மறுநாள் குற்றுயிராய் திரும்பி வந்தான் ஜெயபதி.

உடல் காயம், வலி எல்லாம் போகவே நான்கு மாதங்கள் ஆகிவிட்டன ஜெயபதிக்கு.

இருந்த பசுவையும் விற்றதால் தரித்திரம் தாண்டவம் ஆடியது.

வறுமையில் நாம் வாட அண்ணன் வசதியாக வாழ்கிறானே என பொறாமை கொண்டான் ஜெயபதி.

உடல் தேறிய உடன். அமாவாசை இருளில் யாரும் அறியா வண்ணம் அண்ணன் வீட்டிற்கு ‘தீ’ வைத்தான்.

வெப்பம் தாங்காத மாடுகள் கத்தவே, ரகுபதியும், விமலாவும் வெளியே வந்தார்கள்.

வீடு எரிவதைப் பார்த்து இருவரும் தீயை அணைத்தார்கள். இருப்பினும் ஒரு பகுதி எரிந்துவிட்டது.

எரிந்த கரித் துண்டுகளை மூட்டையாக கட்டிய விமலா விற்று வாருங்கள் என அனுப்பி வைத்தாள்.

ரகுபதியும் கரி மூட்டையுடன் வந்து கொண்டு இருந்தான்.

அந்த வழியாக முத்து வணிகரும் குதிரையில் வியாபாரத்திற்காக வந்து கொண்டிருந்தார்.

அந்த சமயம் ஒரு காட்டு யானை மதம் பிடித்து மரம், செடி,கொடிகளை பிடுங்கி எறிந்து கொண்டு வந்தது.

எல்லோரும் கையில் உள்ளதை போட்டுவிட்டு உயிர் தப்பினால் போதும் என திசைக்கு ஒருவராக சிதறி ஓடினார்கள்.

மூட்டைகள் அங்கும், இங்குமாக கிடந்தன.

யானை சென்று வெகு நேரம் சென்ற பின் ரகபதியும், முத்து வியாபாரியும் அங்கு வந்தார்கள்.

ஆளுக்கு ஒரு மூட்டையாக எடுத்துக் கொண்டு வீடு திரும்பினார்கள்.

ரகுபதி மூட்டையுடன் வந்ததை கண்ட விமலா ஏன் கரியை விற்கவில்லையா? என கேட்டாள்.

ரகுபதியும் நடந்த விபரத்தை கூறினான்.

இனியும் போய் விற்க வேண்டாம் நாமே எரிபொருளாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாள் விமலா.

அன்று மாலை பால் காய்ச்ச கரி எடுக்கலாம் என மூட்டையை பிரித்தாள் விமலா.

என்ன ஆச்சரியம் எல்லாம் நல்முத்துக்கள் தன் கணவனை அழைத்து காட்டினாள்.

முத்து வியாபாரியிடம் இருந்து மாறி இருக்கிறது எனத் தெரிந்து கொண்டான் ரகுபதி.

இந்த விபரம் காற்று வாக்கில் கமலாவிற்குத் தெரிந்தது.

ஜெயபதியிடம் நீங்கள் உதைபட்டு வந்தீர்கள். உங்கள் அண்ணனுக்கு சொத்து மேல் சொத்தாக சேர்ந்து கொண்டு போகிறது என அலுத்துக் கொண்டாள் கமலா.

ஜெயபதி அண்ணனிடம் சென்று அண்ணா! நீங்கள் முத்து வியாபாரம் செய்கிறீர்கள் அண்ணிக்கு முத்தால் காது அணி, வளையல், மாலை என அணிகலன்கள் செய்து கொடுத்து இருக்கிறீர்கள்.

முத்து சம்பாதித்த  விதத்தை எனக்கு கூறக்கூடாதா? என கேட்டான் ஜெயபதி.

நான் எங்கே சம்பாதித்தேன். தற்செயலாக கிடைத்தது என்ற ரகுபதி நடந்த உண்மைகளைக் கூறினான்.

ஒன்றுக்கு இரண்டாக கரி மூட்டையை கட்டிக் கொண்டு வாடகைக் குதிரையில் கரி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்றான் ஜெயபதி.

அதே முத்து வியாபாரிகள் அந்த வழியாக வந்து கொண்டு இருந்தார்கள்.

முத்து மூட்டைகளுக்கு பதில் கரி மூட்டைகளை எடுத்துக்கொண்டு போனவன் ஜெயபதியை  பார்த்துவிட்டான்.

அண்ணனும், தம்பியும் ஒரே சாடையாக இருப்பார்கள். எனவே, அங்கு வந்த ஜெயபதியை ரகுபதி என நினைத்து விட்டான்.

அன்று என் முத்து மூட்டையைத் தூக்கிச் சென்றவன் வருகிறான்.

அன்று நடந்த சம்பவத்தில் தற்செயலாக நடந்ததா? ஏமாற்று பேர் வழியா? என அறிய விரும்பிய முத்து வியாபாரி நண்பர்களிடம் விவரத்தைச் சொன்னான்.

கவிஞர் ச. மல்லிகா எழுதும் கதை தொடரும்.

Share.

Leave A Reply