(நாட்டுப்புற அறிவு கதைகள் பகுதி இரண்டு இக்கதைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற கதைகள் உங்களுக்காக…)

1-அதிர்ஷ்டம் தந்த அற்புதம்

குழந்தைகள் எல்லோரும் அமர்ந்து இருந்தார்கள். கதை கேட்கும் ஆர்வத்தில்.

தாத்தாவும் என்ன கதை சொல்லலாம் என யோசித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு ஓடி வந்த ராமு “தாத்தா நீங்களே!” சொல்லுங்கள் தாத்தா, நான் வரும்போது ஐந்து ரூபாய் கீழே கிடந்தது.

“அந்த ரூபாய் எனக்கு வேணும் என்று சங்கர் அழுது ஆர்ப்பாட்டம் செய்து என்னை அடிக்க வருகிறான்” தாத்தா என்றான்.

ராமு அழுததில் கண்கள் எல்லாம் சிவந்து கன்னம் வீங்கி, மூச்சு விட முடியாமல் தேம்பிக் கொண்டு நின்றான் சங்கர்.

அவனைக் கண்ட தாத்தா, ராமு, சங்கர் இருவரும் என் அருகில் வாருங்கள் என அன்புடன் அழைத்தார் தாத்தா.

தாத்தாவின் அன்பிற்கு பணிந்தவர்களாக இருவரும் அருகில் சென்றனர்.

என் பக்கத்தில் அமர்ந்து கொள்ளுங்கள் உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன். பின் நீங்கள் இருவரும் சமாதானம் ஆகி விடுவீர்கள் என்றார் தாத்தா.

சிறுவர்களும் தாத்தா அருகில் வந்து அமர்ந்தார்கள்.

தாத்தா கதை சொல்ல ஆரம்பித்தார்.
                   *****
ஒரு ஊரில் ஒரு பால் வியாபாரி வசித்து வந்தார். வாரிசுக்கு இரண்டு மகன்களும், வாழ்க்கையை ஓட்ட இரண்டு பசு மாடுகளும் இருந்தன.

வயதாகி உயிர் பிரியும் நேரத்திற்கு முன்பு மகன்களை அழைத்து ஆளுக்கு ஒரு பசுவாக பிரித்துக் கொடுத்துவிட்டு பால் வியாபாரி இறந்துவிட்டார்.

மூத்தவன் ரகுபதி அந்த மாட்டை தொழுவத்தில் கட்டினான். சில நாட்களில் நோய் வந்த மாடு இறந்துவிட்டது.

அதைக் கண்ட ரகுபதியின் மனைவி விமலா, இறந்த மாட்டை கறிக்கடைகாரரிடம் கொடுத்து தோலை உரித்து தரச் சொல்லி வாங்கிக்கொண்டு கறியை விற்று விட்டாள்.

தோலை எடுத்துச் சென்று ஒரு ‘டமாரம்’ செய்து வாங்கி வந்தாள். அதை நகரத்திற்குச் சென்று விற்று வரும்படி கூறினாள் விமலா.

வழியில் சாப்பிட புளியோதரை செய்து கொடுத்து அனுப்பினாள் விமலா.

ரகுபதியும், விமலா தந்த புளியோதரையையும், டமாரத்தையும் எடுத்துக் கொண்டு நகரத்திற்கு பயணப்பட்டான்.

வாகன வசதிகள் இல்லாததால் கால்நடையாக காட்டு வழிப் பாதையில் நடந்தான்.

மாலை ஆனது சூரியன் மேற்கே மறையத் தொடங்கினான்.

ரகுபதி தான் கொண்டு வந்த சாப்பாட்டை சாப்பிட்டவன். இருட்டுவது அறிந்து இனி பயணப்படுவது சரியல்ல என்ற முடிவுக்கு வந்தான்.

காட்டு மிருகங்களிடம் இருந்து தன்னை பாதுகாக்க ஒரு மரத்தில் ஏறி பாதுகாப்பாக அமர்ந்து கொண்டான் ரகுபதி.

நள்ளிரவு ஆனது தீப்பந்தங்களுடன் சிலர் வந்தனர். அவன் தங்கி இருந்த மரத்திற்கு அடியில் அமர்ந்தனர்.

அப்போது, எங்கே! தான் மரத்தின் மீது இருப்பதைப் பார்த்து தன்னைக் கொன்று விடுவார்களோ! என அஞ்சி நடு நடுங்கினான் ரகுபதி.

வந்திருந்தவர்களிடம் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள கருதிய ரகுபதி ‘டமாராத்தை’ எடுத்து பலமாக அடித்தான்.

வந்தவர்கள் போட்டது போட்டபடி ஓடிவிட்டார்கள்.

தாங்கள் திருடி வந்ததை யாரோ தெரிந்து தகவல் கொடுத்திருக்கிறார்கள் என எண்ணியபடி ஓடினார்கள்.

ரகுபதி விடிந்தபின் கீழே இறங்கினான். தரையில் விரித்தபடி பொன்னும், நகையும் பளபளத்தன.

ரகுபதிக்கு உண்மை புரிந்தது இரவில் வந்த தீவெட்டி கள்வர்கள் தான் கொடுத்த சத்தத்தில் பயந்து போட்டது போட்டபடி ஓடிவிட்டார்கள்.

இனி அவர்கள் திரும்பி வருவதற்குள் நாம் ஊர் போய் சேர்ந்து விட வேண்டும் என எண்ணினான்.

டமாரத்தை கிழித்து அதற்குள் பொன்னும், நகைகளையும் வைத்துக்கொண்டு ஊர் வந்து சேர்ந்தான்.

டமாரத்தை  விற்காமல் திருப்பிக் கொண்டு வந்து விட்டீர்களே என்று கேட்டாள் விமலா.

நடந்த சம்பவங்களைக் கூறி பொன்னும், நகைகளையும் எடுத்துக் கொடுத்தான் ரகுபதி.

எல்லாம் கடவுள் செயல் எனை நினைத்தாள் விமலா.

கொஞ்சம் பொன்னை எடுத்து நிலத்தை வாங்கி அதில் வீட்டை கட்டினார்கள். விவசாயம் செய்தார்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்கி சந்தோசமாக வாழ்ந்தார்கள்.

இவர்கள் நல்ல முறையில் வாழ்வதைக் கண்ட ரகுபதியின் தம்பி மனைவி பொறாமை பட்டாள்.

இருந்த ஒரு மாடும் செத்துப் போனது. பின் எப்படி இவ்வளவு செல்வத்துடன் வாழ்கிறார்கள் என புரியாமல் தவித்தாள் கமலா.

தெரிந்து கொள்ளவில்லை என்றால் தூக்கமே வராது என்ற நிலையில், கமலா அன்பாக பேசி மெதுவாக விசாரித்தாள் விமலாவிடம்.

விமலாவும் உள்ளது உள்ளபடி உளறி விட்டாள்.

பொறாமையில் வெந்து கொண்டு இருந்த கமலாவிற்கு இது போதாதா!

வீட்டிற்குச் சென்றவள், உடனடியாக ஒரு காரியம் செய்தாள். மாட்டை கடையில் விற்றுவிட்டு ‘டமாரம்’ ஒன்று செய்து வாங்கிக் கொண்டு வந்தாள்.

தன் கணவனிடம் விவரத்தைச் சொல்லி, அதே போல் நீங்களும் செய்ய வேண்டும் என புளியோதரையையும், டமாரத்தையும் கொடுத்து அனுப்பி வைத்தாள் கமலா.

கவிஞர் ச. மல்லிகா எழுதும் கதை தொடரும்.

Share.

Leave A Reply