முன்கதை சுருக்கம்
கோடை விடுமுறைக்கு நகரத்தில் வசிக்கும் மகன் , மனைவி ,தனது இரண்டு மகன்களுடன் கிராமத்திற்கு விடுமுறையை கழிக்க வருகிறார் . கிராமத்தில் தங்கி இருக்கும்போது அங்குள்ள பலவிதமான இடங்களைப் பார்த்து மனதை பறிகொடுக்கிறார்கள். அங்குள்ள இயற்கை எழில் , சூழ்நிலைகள் பற்றி கேள்விப்பட்டு அதிசயிக்கிறார்கள்.. அப்போது அங்குள்ள மலைக்கோவில் , அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் பொக்கிஷ விவரங்களை தெரிந்து கொண்டு அங்கு செல்ல முயற்சிக்கிறார்கள். அங்குள்ள மலை பற்றிய விவரங்களை அவர்கள் வீட்டு விசுவாசியான வேலையாள் மாரியப்பன் சொல்லி விளக்கிக் கொண்டு இருக்கிறார்.
மறுநாள் காலையில் எழுந்ததுமே விரையில் கிளம்புவதற்கு இராஜாவும் ரகுவும் ரெடியாகி விட்டார்கள். ஊரைத்தாண்டி இருக்கும் முனியப்ப சாமி கோவிலுக்குச் செல்வதாகக் கூறி விட்டு மலை மீது ஏறிப் போக வேண்டும் என்பதே இராஜா, மாரியப்பன் இருவரின் திட்டமாக வைத்து இருந்தார்கள்.
ஆனால், அந்த திட்டத்திற்கு அவர்கள் சரியாகப் புறப்பட்டுச் செல்வதில் தடங்கலும்,தாமதமும் ஏற்பட்டது. சரி என்ன செய்வது மலைக்கு இன்னொரு நாள் செல்வது என்று முடிவு செய்து விட்டார்கள். அருகில் உள்ள முனியப்பன் என்ற கருப்பசாமி கோவிலுக்குப் புறப்பட்டு இராஜா, ரகு மற்றும் அங்குள்ள சிறுவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள். அந்தக்கோவில் ஊரைஒட்டி ஒரு பெரிய இலந்த மரத்தின் கீழ் இருந்தது. அங்கு பலவிதமான மண்சிலைகள் இருந்தன. அத்துடன் மிகப்பெரிய அரிவாள் , சங்கிலி, ஆகியவைகளால் திறந்த வெளி கோயிலாக இருந்தது . உடன் வந்தவர்களில் பெரிய சிறுவன் ஒருவன் இது ஊர் காவல் தெய்வம் என்றும் , மிகவும் சக்தி வாய்ந்தது என்றும் கூறினான்.
அப்போது ஆடு மேய்த்துக்கொண்டிருந்த அமாவாசை என்பவர் அங்கு வந்தார் . வயது முதிர்ந்த அவர் நீண்டகாலமாக அங்கு ஆடு மேய்ப்பதையே தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார். அவரைப்பார்த்த ,’இராஜா’ ஐய்யா இந்தக் கோவில் மிகவும் சக்தி வாய்ந்தது என்கிறார்கள். இந்தக் கோவில் எப்படிப்பட்டது என்பது பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள் என்று கேட்டான்.
உடனே அமாவாசை அவர்களும் கொஞ்சம் பொறுங்கள் , ஆடுகளை ஒரு சேர மேயவிட்டு விட்டு வந்து சொல்கிறேன் , என்றபடி சிதறிய ஆடுகளை ஒரு சேர புல்வெளிப்பக்கம் மேயவிட்டு விட்டு கோவில் பகுதிக்கு வந்தார்., அவர் வந்து நிழல் பகுதியில் உள்ள ஒரு கல்லில் அமர்ந்தார். அதற்குள் அங்குள்ள சிறுவர்கள் அங்கு அமாவாசை வைத்திருந்த நீண்ட தொரட்டிக் கம்பை வாங்கி அதன் மூலம் இலந்தம் பழம் பறிக்க முயற்சி செய்து கொண்டு இருந்தார்கள். ஒரு வழியாக சில இலந்தம் கிளைகளை வளைத்து ஒடித்து கொஞ்சம் இலந்தம் பழங்களையும் , சில முற்றிய காய்களையும் பறித்துக் கொண்டு அங்கு வந்தார்கள்.
”அய்யா இப்போது சொல்லுங்கள் ”. என்றபடி சிறுவர்கள் அனைவரும் அமர்ந்து கொண்டனர். இந்தக்கோவில் சாதாரண கோவில் அல்ல . மிகவும் சக்தி வாய்ந்த மந்தக் கருப்பசாமி கோவில். இதற்கு உருவம் கிடையாது .சங்கிலியும் .,அரிவாலும் தெய்வமாக வைத்து வழிபடுகிறார்கள். இந்த மக்களை காப்பதற்கு இந்த அரிவாள், சங்கிலி ஆகியவையே உள்ளன. நமது முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் ஒவ்வொரு கூட்டமாக வாழ்ந்து வந்தார்கள். அப்போது அவர்களுக்கு காக்கும் கருவிகளாக அரிவாள் இருந்திருக்கிறது . அவர்கள் தங்களைக் காத்துக் கொள்வதற்கும், மிருகங்கள் போன்றவிலங்குகளிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கும் அரிவாள் தான் முக்கியமாக இருந்து இருக்கிறது .
அத்துடன் சங்கிலியும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி வாழ்ந்து இருக்கிறார்கள் . காலப்போக்கில் அவற்றையே தெய்வமாக வழிபட்டு உள்ளனர். இங்குள்ள மண் குதிரைகளை , சாதாரணமாகக் கருதி விடக்கூடாது .
இவையும் சக்தி வாய்ந்தது தான்.
அய்யா , ”இந்தமண் குதிரைகளின் வாயில் புல் இருப்பது போல் தெரிகிறதே, மண் குதிரை புல் திங்கிறதா ?”என்று இராஜா கேட்டான். ‘ சரியாக கேட்டாய் தம்பி, நீ முத்துசாமி அய்யா பேரன் தானே ? என்று கேட்டார் .
”ஆம் ” ஐய்யா என்றான் இராஜா .
நம் நாட்டை வெள்ளையர்கள் ஆண்டு வந்த காலத்தில் , ஒரு வெள்ளையன் இது போன்ற கிராமங்களை எல்லாம் சுற்றிப் பார்க்க வந்துள்ளார்.இங்குள்ள மலை பற்றிய விவரங்களை சேகரிக்க வந்த அந்த வெள்ளைக்காரத் தொரை , இந்த மரத்தடியில் சற்று ஓய்வெடுத்துள்ளார்.
அப்போது இந்தப்பகுதி மக்கள் இந்த அரிவாள், சங்கிலி போன்றவற்றுக்கு பூஜை செய்து தீபாராதனை செய்துள்ளனர். அதைத்தொடர்ந்து இந்த மண் குதிரைக்கும் , அது தீவனமாக உட்கொள்ளும் புல்,மற்றும் பொருட்களை வைத்து தீபாராதனை செய்து வழிபட்டுள்ளனர்.
இதைப்பார்த்து நகைத்த வெள்ளைக்காரத் தொரை , இதென்ன உயிருள்ள குதிரையா ? இதையெல்லாம் இது சாப்பிடுமா ?என்பது போல் நகைத்தபடி கேட்டுள்ளார்
இதனால் பூசாரி,ஐயா ,”அந்தக் கோவில் சக்தி வாய்ந்த இறை குதிரை , இது உயிர்பெற்று புல்லைத் தின்னும் என்று கூறி உள்ளார். அத்துடன் தனது தீவிர பக்தி உணர்வுடன் தனது கருப்பசாமியை மனமுருகி வேண்டி மண் குதிரை முன்பு ஒருகட்டு புல்லை வைக்க, ….
இவர்களது பக்திக்கு இசைந்த இறைவன் குதிரைக்கு உயிரூட்டியதால், , அந்தக் குதிரை கனைத்தபடி நாக்கை சுழற்றி அந்த புல்லை தின்பதற்காக எடுக்கவும் …அதைப்பார்த்த வெள்ளைக்காரத் தொரை பயந்து அங்கிருந்து மிரண்டபடி ஓடி விட்டதாகவும் சொல்வார்கள்.
அது இந்த கோவிலின் பெருமைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இந்த கோவில் திறந்த வெளி கோவிலாக இருந்தாலும் இங்குள்ள எந்தப்பொருளாக இருந்தாலும் எந்த காற்று , மழைக்கும் அப்படியே இருக்கிறது.
ஊரில் ஏதாவது ஒரு காரியம் தொடங்குவதற்கு முன் இங்கு வந்து பூசைகள் செய்து விட்டு தொடங்குவார்கள். இந்த சாமியை குல தெய்வமாக வணங்குபவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்வார்கள் . காட்டு தெய்வமாக விளங்கும் இந்த இடத்துக்கு குறிப்பிட்ட நாட்களில் மட்டும் தான் கிராமத்தில் இருந்து வழிபாட்டுக்கு வருவார்கள்.
மற்ற நாட்களில் கருப்பசாமிக்க நாங்களும், எங்களுக்கு கருப்பசாமியும் தான் துணை ஆகும், என்று கூறி முடித்தார் .
தொடரும்…..