கயல் விழியை பட்டுப் புடவையில் அலங்காரம் செய்து அழைத்து வந்து நடுக் கூடத்தில் அமரவைத்தனர் .
அங்கு உறவினர்கள், நண்பர்கள் என பலர் கூடி இருந்தார்கள் .
ஒரே ஊர் என்பதால் ஒன்பதாம் மாதத்தில் சீமந்தம் செய்தார்கள்.கயல்விழிக்கு  நலுங்கு வைத்து ஆசீர்வாதம் செய்தார்கள் பெரியவர்கள் .
ஆரத்தி நீரில் கற்பூரம் வைத்து திருஷ்டி கழித்த பின் கயல்விழியை அழைத்துச்  சென்று ஐந்து வகை சாதங்களைக் கொடுத்து சாப்பிடச் சொன்னார்கள்.
வந்திருந்தவர்கள் எல்லாம் திருப்தியாக உண்டு ஆசீர்வாதம் செய்து புறப்பட்டார்கள்.
கயல்விழியை பக்கத்து வீதியில் இருக்கும் தாயார் வீட்டிற்கு அழைத்துப் போனார்கள்.
மாமா மகனை திருமணம் செய்ததால் ஊர் பயணம் , பாசப்பிரிவுகள்  இப்படி எதுவும் கயல்விழி அறியாத ஒன்று .
தாய் வீட்டிற்கு சென்ற பத்தாவது நாள் ஆண் குழந்தை பிறந்தது,கயல் விழிக்கு  இரு வீட்டினரும் இனிப்பு கொடுத்து மகிழ்ந்தனர்.
குழந்தை பிறந்த ஒரு வாரத்தில் அழுது கொண்டே இருந்தது குழந்தை .
குழந்தையை தூக்கிய பக்கத்து வீட்டுப்பாட்டி ,குழந்தையின்  காது மடல்களை நீவி விட்டுப் பார்த்தாள்.
உரம் விழவில்லை என்பதை தெரிந்து கொண்ட பாட்டி, நான் போய் மருந்து கொண்டு வருகிறேன் எனப் புறப்பட்டார்.
சிறிது நேரத்தில் வந்த பாட்டி குவளையில் ஏதோ கொண்டு வந்து சங்கில் ஊற்றி குழந்தைக்குக் கொடுத்தாள்.
வேண்டா வெறுப்பாக விழுங்கி ஒதுக்கி வைத்திருந்த பாலை துப்பியவனைப் பார்த்த பாட்டி குறும்புக்காரப் பையன் எனச் சிரித்துக்கொண்டவள்….
மடியில் கிடத்தியபடியே காலை மெதுவாக  ஆட்டி  தூங்க வைத்தாள். அழுது கொண்டு இருந்த குழந்தை கண்ணை மூடி தூங்க ஆரம்பித்தான்.
”கயல்விழி  குழந்தை தூங்கி எழுந்தவுடன்  உன் பாலைக் கொடுத்தால் போதும் .இனி இப்படி அழுக மாட்டான் என்ற பாட்டி எழுந்தாள்.”
”பாட்டி  அது என்ன மருந்து கொடுத்தீர்கள் ”என்று கேட்டார்கள் உறவுப் பெண்கள் .
”அதெல்லாம் மருத்தவ ரகசியம் ”எனச் சொல்ல மறுத்தாள் பாட்டி .
”பாட்டி எனக்குச் சொல்லிக் கொடுங்க பாட்டி ”என ஆவலுடன் கேட்டாள் கயல்விழி .
கயல்விழியின் ஆர்வத்தைப் பார்த்த பாட்டி ”அழுத பிள்ளையும் சிரிக்குமாம் , கழுதைப் பாலைக் குடிக்குமாம் ” என்றாள்.
பழமொழியிலேயே  தான் குழந்தைக்கு என்ன மருந்து கொடுத்தேன் என்பதைச் சொன்னவள் ….
”கழுதைப் பாலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் எந்த எதிர்மறை விளைவுகளும் இன்றி தடுப்பு ஊசி போல் குழந்தைகளின் நலனை காக்கிறது.”…
”தொன்று தொட்டு வரும் பழக்கமாக இன்றும் குழந்தைகள் பிறந்த ஒரு மாதத்திற்குள் கொடுக்கப்பட்டு வருகிறது” .
”உன் மகன் தூங்கி எழுந்தவன் சிரித்து விளையாடுவான்.பயப்பட வேண்டாம்” என தைரியம் சொல்லி வீட்டுக்குப் புறப்பட்டாள் பாட்டி .
சிறிது நேரத்தில் சிரித்துக் கொண்டு எழுந்த மகனைப் பார்த்தவள் பாட்டிக்கு எப்படி இத்தனை மருந்துகள் தெரிகிறது என ஆச்சரியப்பட்டாள் கயல்விழி.
Share.

Leave A Reply