சுமதியின் நான்கு வீடு தள்ளி சுபா வீடு இருந்தது. இருவருக்கும் பல வகையில் ஒற்றுமை இருந்தது.
ஒரே மாதத்தில்  பிறந்தவர்கள்.ஒரே வீதியில் வசிப்பவர்கள்.ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தவர்கள்  என சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், ஒரு வேறுபாடு இருந்தது. சுமதி அதிகம் பேசமாட்டாள். சுபா பேசிக்கொண்டே இருப்பாள்.
இருவரும் நல்ல தோழிகள்.எங்கு சென்றாலும் இருவரையும் பார்க்கலாம். தனியாகப் பார்ப்பது வீட்டில் இருக்கும் போது மட்டும் தான். காலங்கள் கடந்தன…பள்ளிப் படிப்பு முடிந்தது.கல்லூரிக்கு வெளியூர் போக வேண்டும். இருவரும் வேறு….வேறு …கல்லூரியில் சேர்ந்தார்கள்.
பிரிவு என்பது முதல் முறை என்பதால் கல்லூரிக்கு  போகாமல் இருந்து விடுவோமா  எனக்கூட யோசித்தார்கள். படிப்பு பெண்களுக்கு அவசியம் வேண்டும் என்பதை இருவரும் உணர்ந்து இருந்ததால் பிரிவை தாங்கிக் கொண்டு கல்லூரிக்கு சென்றனர்.
கால மாற்றம் பிரிவுத் துயர் மறைந்தது.வேறு தோழிகளின் நட்பு திசை மாறியது.
சுமதிக்கு கிடைத்த தோழி மாலா .அவள் படிப்பிலும் கெட்டிக்காரி.செயல் திறனிலும் கெட்டி. இப்படி ஒரு தோழி சுமதிக்கு கிடைத்ததால் சுமதி சற்று மாறித்தான் இருந்தாள்.
கல்லூரிப் படிப்பு மட்டும் இல்லாமல் பல போட்டிகளில் கலந்து கொண்டு இருவரும் பரிசுகள் வெல்வது, பொது நல சேவை, பெண்களுக்கு விழிப்புணர்வு முகாம், இரத்த தானம் செய்வது என பல வற்றிலும் கலந்து கொண்டு பிறர் நலனிலும் சேவை செய்தார்கள்.
இரண்டு ஆண்டுகள் முடிந்து மூன்றாம் ஆண்டு தொடங்கிவிட்டது.பெண்கள் விழிப்புணர்வு முகாம் நடத்துவதற்காக வேறு ஊருக்கு அழைத்துச் சென்றார்கள்.
அங்குதான் தோழி சுபா படிக்கும் கல்லூரி இருக்கிறது.சுபா வைப் பார்க்க வேண்டும்,மாலாவிற்கு  சுபாவை அறிமுகப்படுத்தனும்  என சந்தோச அலைகளில் இருந்தாள் சுமதி. அவர்கள் சென்ற சமயத்தில் ஒரு கல்லூரி மாணவிகள் போதைக்கு  அடிமையாகி அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருந்த இடத்திற்கு அழைத்துச்  சென்றார்கள்.
இவர்கள் தவறான பழக்கத்திற்கு அடிமையானதால் அவர்கள் பெற்றோருக்கு கூட தெரியாமல் ஆசிரியர்கள் சேர்த்து இருக்கிறார்கள்.
அவர்கள் தவறை உணர்ந்து திருத்த முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். நமது பங்கு அவர்களை திருத்துவதாக இருக்கும்,முயற்சியாக செயல்படுவோம் என ஆசிரியை கூறியதும்…
மாணவிகள்  ஒவ்வொருவராக அவர்களை கவனிக்கும் பொறுப்பு, ஆறுதல் சொல்வது, மருத்துகள் கொடுப்பது அவர்களை அன்றாட பணிக்கு உதவி செய்வது என பிரித்துக் கொண்டு செயல்பட்டார்கள்.
சுமதி ஒரு அறைக்குச் சென்றால். படுக்கையில் படுத்திருந்த கல்லூரி மாணவியிடம் சென்றவள் திடுக்கிட்டாள்.
ஆம்…படுத்திருந்தது தனது பள்ளித் தோழி சுபா. அவளைப்பார்த்ததும் சுமதிக்கு  அவளையும் அறியாமல் கண்ணீர் பொல பொல எனக்கொட்டியது .
‘சுபா’ என அவள் தலையை கோதியவள்  தோள் பட்டையில் தன் கரங்களை பதித்தாள் சுமதி.
சுமதியின் கண்ணீர் துளி சுபாவின் மேல் பட்டதும் தன்னை உரிமையுடன் யார் தொடுவது பரிட்சியமான கரமாக இருப்பதை உணர்ந்த சுபா திரும்பினாள்.
சுமதியைப் பார்த்ததும்சுபா கண் கலங்கினாள்.” நீ எப்படி” என தணிவான குரலில் கேட்டாள்.
‘என்னை விடு ஏன் நீ இப்படி ஆனாய்” எனக்கேட்டாள் சுமதி.
”குரைக்கிற நாய் கடிக்காது”  என்பார்கள். அது போல சதா பேசியே படிப்பை கோட்டை விட்டேன் .தீய நட்பு போதைக்கு அடிமையானேன் .
ஆசிரியருக்குத் தெரியவே  கல்லூரி பெயர் கெட்டுவிடும்  என்பதற்காக எங்களை திருத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள் என விரக்தியான குரலில் கூறினாள் சுபா.
ஆறுதலாக அவள் கரத்தைப் பற்றிய சுமதி, ‘கெட்ட கனவாக  எண்ணி மறந்து விடு. இனி நடப்பது நல்லவையாக நடக்கட்டும் எனக்கூறியவள்….
சுபா கூடவே இருந்து கவனித்துக் கொண்டாள்.தனது தோழியின் அருகாமை கிடைத்த சந்தோசத்தில் சுபா போதை பழக்கத்தில் இருந்து விடுபட்டதுடன் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு புதுமைப் பெண்ணாக  புத்தொளி பெற்றாள்
Share.

Leave A Reply