தேசியக்கொடி ஒவ்வொரு குடிமகனுக்கும் உயிர்மூச்சு .பலவித உருவம், அளவு நிறங்களொடு பல ஆண்டுகாலமாகத் தயாரிக்கப்பட்டு மாறுதல் பெற்று வந்த நம் தேசியக்கொடி 1947-ல் தற்போதைய உருவத்தைப் பெற்றது .

1904-ல் முதன் முதலாக சுவாமி விவேகானந்தரின் சிஷ்யையான சகோதரி நிவேதிதையால் விடுதலைக்கான தேசியக்கொடி வடிவமைக்கப்பட்டது . இதில் உள்ள மஞ்சள் நிறம் வெற்றியையும் சிவப்பு விடுதலைப் போராட்டத்தையும் குறிக்கும் .
அதன் மீது வங்க மொழியில் ”வந்தே மாதரம் ”என்றும், இந்திரனின் வஜ்ராயுதமும் (வலிமை ) வெள்ளைத் தாமரையும் (புனிதம்) வரையப்பட்டிருந்தன .நிவேதிதையின் கொடி என இது அழைக்கப்பட்டது.
பின் 1906-ல் நீலம் , மஞ்சள், சிவப்பு நிறங்களைக் கொண்ட சுதந்திர கொடி வடிவமைக்கப்பட்டது .நீல நிற பட்டையில் எட்டு நட்சத்திரங்கள் இருந்தன . சிவப்பில் சூரியனும், நட்சத்திரமும் வரையப்பட்டிருந்தன .மஞ்சளில் தேவநாகரி எழுத்தில் வந்தே மாதரம் எழுதப்பட்டிருந்தது .

1907- ஆகஸ்ட் 22-ல் மேடம் புகாஜிகாமா, வீரசாவர்க்கர் மற்றும் ஹியாம் கிருஷ்ணவர்மா ஆகிய மூவரும் சேர்ந்து ஒரு புதிய கொடியை வடிவமைத்தனர் .

1916-இல் ஹோம் ரூல் இயக்கம் நடைபெற்றபோது லோகமான்ய திலகர் , அன்னிபெசன்ட் அம்மையார் இருவரும் சேர்ந்து ஒரு கொடியை உருவாக்கினர் .

1917-ல் திலக் ஒரு புதுக் கொடியை படைத்து அதில் சப்தரிஷிகளைக் குறிக்கும் ஏழு நட்சத்திரங்களை அமைத்தார் .

1921- இல் சிவப்பு மற்றும்பச்சை நிறங்களுடன் இந்து, முஸ்லீம் இனத்தைக் குறிக்கும் கொடி உருவாக்கப்பட்டபோது அதில் வெள்ளை நிறத்தை இணைத்து காந்திஜி வெள்ளை, பச்சை, சிவப்பு நிறங்களைக் கொண்ட கொடியை அமைத்தார். வெள்ளை சத்தியத்தையும், பச்சை நிறம் விவசாயத்தையும் ,சிவப்பு விடுதலைப் போராட்ட முனைப்பையும் குறித்தது .

1931-இல் ஆந்திராவின் பிங்கனி வெங்கையா என்பவர் ஒரு புதிய கொடியை உருவாக்கினார் .காவி நிறம் வலிமையையும் , வெள்ளை சத்தியத்தையும் , பச்சை பசுமையையும் குறித்த இக்கொடியை 1947 ல் இந்திய விடுதலை போராட்டக்குழு தேசியக் கொடியாக ஒருமனதாக ஏற்றது .
மத்தியில் இருந்த இராட்டினத்திற்கு பதில் அசோக சக்கரம் நீல நிறத்தில் குறிக்கப்பட்டது. பிங்கனி வெங்கையாவால் உருவாக்கப்பட்ட இக்கொடி இந்தியாவின் நீண்ட கால சுதந்திரப் போராட்டத்தைக் குறிக்கும் சின்னமாக விளங்குகிறது . இது 1947-ல் டெல்லி செங்கோட்டையில் அதிகார பூர்வமாக ஆகஸ்ட் 15 அன்று ஏற்றப்பட்டது .

நம் தேசியக்கொடியை வடிவமைத்த பிங்கனி வெங்கையா சுதந்திரப் போராட்ட வீரர் , விவசாயி, சாஸ்திர நிபுணர் , பன்மொழிப் புலவர் . பிங்கனி வெங்கையா 1876 ஆகஸ்ட் 2- ம் தேதி ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு கிராமத்தில் பிறந்தார் .தென் ஆப்பிரிக்காவில் ஆங்கிலோ-போயர் போரில் பிரிட்டிஷ் இந்தியப் படையில் சேர்ந்து போரிட்டார். அப்போது மகாத்மா காந்தியின் கொள்கைகளால் கவரப்பட்டார்.

1916-இல் பாரத நாட்டிற்கு ஒரு ‘தேசியக்கொடி’ என்ற நூல் எழுதினார் .5 வருடங்கள் பல நாடுகளின் கொடிகளையும் ஆராய்ந்து முப்பது விதக் கொடிகளைப்பற்றி அதில் விவரித்திருந்தார் .
ஒரு தேசியக் கொடியை வடிவமைத்து தரும்படி காந்திஜி வெங்கையாவைக் கோரினார். பிரகாசத்திற்கும், புனிதத்திற்கும் ,வளத்திற்கும், சின்னங்களாக காவி, வெள்ளை , பச்சை நிறங்களுடன் மூன்று மணி நேரத்திற்குள் கொடியை தயாரித்து விட்டார் வெங்கையா.
சுதந்திரத்திற்குப் பின் இக்கொடியின் நடுவில் ராட்டினத்திற்கு பதில் அசோகரின் தர்ம சக்கரத்தைச் சேர்த்து நம் தேசியக்கொடியாகத் தேர்ந்தெடுத்தனர் .

நம் பாரம்பரியத்தின் அடையாளமாக பட்டொளி வீசிப் பறக்கும் தேசியக்கொடிக்கு வீர வணக்கம் செலுத்தி நம் தாய் நாட்டை கெளரவிப்போம்.

Share.

Leave A Reply