25-மகப்பேரின் மகத்துவம்

பூமியில் மக்கள் பெருக்கத்தை உண்டு பண்ண இறைவன் பெண்களுக்கு அளித்திருக்கும் சுகமான இயற்கையின் அமைப்பாகும்.

பெண்களின் உடல் அமைப்புகளில் இயற்கையாகவே குழந்தைப் பெருக்கத்திற்கு ஏதுவான கர்ப்பப்பை உள்ளது.

இயற்கை கொடுத்த வரப்பிரசாதத்தால் பெண்கள் மட்டுமே தாய்மை அடைய முடியும். பழைய காலங்களில் மருத்துவ வசதிகள் இல்லாத காலகட்டங்களில் வீடுகளிலும், காடுகளிலும் குழந்தைகள் பிறந்தன. 

அடுத்தடுத்த பிரசவிப்பதால் ஆரோக்கியமற்ற சோக குழந்தைகள் அதிகம் பிறந்தன. பெண்கள் பிரசவத்திற்கு  மருத்துவரிடம் போவதில்லை. தன்னால் பிறக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்த காலம்.

ஊருக்கு ஒரு மருத்து வச்சி  வயதான ஒரு பெண்மணி இருப்பார். அப்பெண் தான் பிரசவம் பார்ப்பார்.

அப்படிப்பட்ட காலகட்டத்தில் அம்மை, விஷக்காய்ச்சல், காலரா, வலிப்பு, இளம்பிள்ளை வாதம் என்ற பல நோய் தாக்குதல்களில் எளிதாக இறந்து போகும் குழந்தைகளும் இருந்தார்கள்.

கால சுழற்சியால், கால மாற்றத்தால் தடுப்பு ஊசிகள், போலியோ சொட்டு மருந்துகள் அம்மை தடுப்பூசிகள் கண்டுபிடித்து தாய், சேய் இருவருக்கும் போடுவதால் ஆரோக்கியமான குழந்தைகளாக இருக்கிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில் மருத்துவம் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது.

“மலடி” என்று சொன்னால் காலம் முழுவதும் கண்ணீர் வடிக்க வேண்டும்.

இன்றைய மருத்துவ வளர்ச்சியால் நான் ‘மலடி’அல்ல மார்தட்டிக் கொள்ளலாம். ‘டியூப்’ குழந்தைகள். பெருகிவிட்டார்கள்.

பொது மருத்துவமனைகள் பெருகிவிட்டன இலவச போலியோ சொட்டு மருந்துகள் முறையாக கொடுக்கப்படுகின்றன. பெண்கள் இப்போது எல்லாம் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க ஆரம்பித்து விட்டார்கள்.

புராணத்திலும், அறிவியலும் என்ன சொல்கிறார்கள் என்பதையும் பார்ப்போம்.

ஒரு மடமாதும் ஒருவனும் ஆகி
இன்பசுகம் தரும் அன்பு பொருந்தி
உணர்வுகலந்து
ஒழகியவிந்து
ஊறுசுரோணித
மீதுகலந்து
பனியில் ஓர்பாதி
சிறுதுளி மாது
பண்டியில் வந்து புகுந்த திரண்டு
பதுமம் அரும்பு கமடம் இதென்று
பார்வை மெய்வாய் செவி கால் கைகள் என்ற உருவமும் ஆகி
உயிர்வளர் மாதம் ஒன்பதும் ஒன்றும் நிறைந்து மடத்தை
உதரம் அகன்று புவியில் விழுந்து…

என்று பட்டினத்தார் கவிதை வரிகளில் சொல்லி இருப்பதை தான். நாம் அறிவியல் கோணத்தில் பார்க்கப் போகிறோம்.

இன்று குழந்தை இல்லாத தம்பதிகள் சோதனைக் குழாயில் கருமுட்டையை வளர்த்து…குழந்தை பெற்றுக் கொள்வது போல் ஐ.வி.எப் முறையயில், நவீன சோதனை குழாய் குழந்தைகள் பிறக்கின்றன.

இதை புராணக் காலத்து கதையில் பார்த்தால்…

முல்லை வனம் என்ற ஊரில் கௌதமர், கார்த்திகேயர் என்று இரண்டு முனிவர்கள் தவம் செய்து கொண்டு இருந்தார்கள்.

குழந்தை இல்லாத குறை போக்க வேண்டும் சுவாமி என வேண்டி வணங்கி நின்றனர். நிந்திருவர், வேதிகை தம்பதியினர்.

முல்லைவன நாதரையும், அம்மனையும் வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என கௌதமரும் கார்த்திகேயரும் சொல்லி வாழ்த்தினார்கள்.

அவ்வாறே முல்லைவன நாகரையும், அம்மனையும் வணங்கி குழந்தை பாக்கியம் பெறுகிறார்கள். அந்த தம்பதியர். நிந்திருவர் வெளியில் சென்றிருந்த சமயம் வேதிகைக்கு கர்ப்ப வலி வந்து துடித்துக் கொண்டு இருந்தாள்.

அந்த சமயம்
ஊர்த்துவபாதர் என்ற முனிவர் வந்து வேதிகையிடம் பிட்சை கேட்டார்.

கர்ப்ப வலியில் இருந்த வேதிகையாள் பிட்சை  இட முடியவில்ல.

அவளின் கர்ப்ப வலியினை அறியாத முனிவர் தன்னை அவமதித்ததாக எண்ணி சாபமிட்டார்.

அவர் இட்ட சாபத்தால் வேதிகையின் கரு கலைந்து விடவே, அழுது, புரண்டு அம்பாளிடம் முறையிட்டு புலம்பினாள் வேதிகை.

வேதிகையின் கண்ணீரைத் துடைக்க அம்பாள் விரும்பி சிதைந்த கருவை ஒரு குடத்தில் ஆவாகனம் செய்து குழந்தை உருவாகும் நாள் வரையிலும் வைத்து காப்பாற்றி ‘நைத்துருவன்’என்ற குழந்தையாக கொடுக்கிறார் அம்பாள்.

அக்குழந்தையைப் பெற்றுக் கொண்ட வேதிகை கருத்தரிக்கும் பெண்களை காக்க வேண்டியது உன் கடமை என வேண்டிக் கொள்கிறாள்.

வேதிகையின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட அம்பிகை ‘கர்ப்பரட்சாம்பிகையாக’ மாறி உலகில் கருத்தரித்தவர்களையும், கருவையும் காப்பாற்றி வருகிறாள்.

தஞ்சை மாவட்டத்தில் திருக்கருகாவூர் என்ற இடத்தில் கருவை ரட்சித்த கர்ப்பரட்சாம்பிகையாக கோயில் உள்ளது. அக்கோவிலுக்கு இப்படி ஒரு வரலாறும் உண்டு. எனவே, இன்றைய நவீன மருத்துவ உலகில் கருவை வெளியே வைத்து வளர்க்கும் ஐ.வி.எப் முறைதான் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இன்றும் அந்த நம்பிக்கை இருக்கிறது.

நம்பிக்கைகள் தவறானவை அல்ல. இதனால் இது சரியாகும் என்ற நம்பிக்கையே மனவலிமையை தந்து ஆச்சரியப் படத்தக்க சம்பவங்களை நிகழ்த்தி விடுகிறது.

எனவே, நம்பிக்கை மனிதனின் அசைக்க முடியாத ஆணிவேராக இருந்தால் நினைத்ததை நிகழ்த்தும் சாதனை மனிதனுக்கு உண்டு என்பதை நமது புராணங்கள் கூறுகின்றன.

எனவே, ஒவ்வொரு பெண்களும் மன வலிமையை வளர்த்துக் கொண்டால் சுகப்பிரசவம் எளிமையாக நிகழும்.

இத்தொடர் நிறைவு பெறுகிறது. வேறு தொடரில் திங்கட்கிழமை சந்திப்போம்.
Share.

Leave A Reply