22-பெண்ணின் வளர்ச்சி
சங்க இலக்கியங்களில் ஒரு பெண்ணின் வளர்ச்சியை அவள் வயதை வைத்து ஏழு விதமாக பிரித்து இருக்கிறார்கள்.
1 முதல் 5 வரை பேதை
6 முதல் 12 வரை பெதும்பை 13 முதல் 16 வரை மங்கை
17 முதல் 21 வரை மடந்தை 22 முதல் 27 வரை அறிவை 28 முதல் 35 வரை தெரிவை
36 முதல் அதற்கு மேல் வயது உள்ள பெண்களை பேரிளம் பெண் என்று அழைக்கிறார்கள்.
1 முதல் 10 வயது வரை ஆண்களுக்கும், பெண்களுக்கு பெரிய மாறுதல்கள் என்று ஒன்றும் கிடையாது.
பத்து வயதுக்கு மேல் பெண்களுக்கு உடல் வளர்ச்சியும், மனவளர்ச்சியும் இருக்கும்.
அப்போது, தனது பெண்ணிடம் ஒரு தோழியைப் போல் பழக வேண்டும். உடல் பற்றியும், உள்ளம் பற்றியும் நடந்து கொள்ளும் விதம் பற்றியும், “பழத்தில் ஊசியை குத்தினால் எவ்வாறு மென்மையாக இறங்கும் அது போல் மெதுவாக பல விபரங்களை நாம் கற்றுத் தரவேண்டும்.”
கண்ணாடிப் பொருள் எடுக்காதே உடைந்து போகும் என்றால், அதை எடுத்துப் பார்ப்போமே என்று துணிச்சல் உள்ள வயது எடுத்து உடைத்து விட்டும் நிற்பார்கள்.
இந்த சமயத்தில் நம் அணுகுமுறை மிகவும் அவசியம். சில தாய்மார்கள் உடனே, அடித்து ஆர்ப்பாட்டமே செய்வார்கள்.
அந்த சம்பவம் மனதை பாதிக்கும்
அதை தவிர்த்து இப்படி அணுகிப் பாருங்கள். இப்போது தானே சொன்னேன். எனது பேச்சைக் கேட்டு எடுக்காமல் இருந்திருந்தால் இந்தப் பொருள் உடைந்து இருக்காது.
நமக்கு பொருள் சேதமும் ஏற்பட்டிருக்காது. கண்ணாடி கை காலில் குத்தவில்லையே சரி இனியாவது கவனமாக இரு எனக் கூறி உடைந்த பொருட்களை சுத்தம் செய்யுங்கள்.
அப்போது அவர்கள் முகம் வாடி இருக்கும். அம்மா அடிப்பார்கள் என்ற பயத்தில் இருக்கும் நிலையில்…
அடிக்கவில்லை என்றவுடன் இனி இது போன்ற தவறுகளைச் செய்யக் கூடாது. என அவர்கள் மனதில் சிந்திக்க ஒரு சந்தர்ப்பத்தை கொடுக்க வேண்டும்.
சுத்தம் செய்யும் போதே கண்ணாடியும் உடைந்து எனக்கும் வேலை பார் என இடையில் சொல்ல வேண்டும்.
அவர்கள் இது போன்ற தவறுகள் செய்வதை கண்டிப்பாக குறைத்துக் கொள்வார்கள்.
இப்போது உள்ள காலகட்டத்தில் பெண் பிள்ளைகளை வேலை செய்யச் சொல்வது குறைந்து வருகிறது.
என் பெண்ணுக்கு எதுவும் செய்யத் தெரியாது என்று சொல்வது சில தாய்மார்களுக்கு பெருமையாக இருக்கிறது.
இது நல்ல முறையா? என ஆராய்வோம். ஒரு பெண்ணாகட்டும், ஆணாகட்டும் அவசரத்திற்கு ஏதாவது செய்து சாப்பிட கண்டிப்பாக பழகி இருக்க வேண்டும்.
பையன் சமையல் பக்கம் வராதே எனச் சொல்வதும் தவறு. பெண் சமையல் செய்து கொண்டே இரு என்பதும் தவறு.
இந்த காலம் கணினியுகம் இந்த காலகட்டத்தில் ஆண், பெண் இருவரும் அலுவலகம் செல்ல வேண்டும். ஆளுக்கு ஒரு வேலையாக பகிர்ந்து விரைவில் முடித்து கிளம்பும் போது இருவருக்குமே ஒருவர் மேல் ஒருவருக்கு அன்பு அதிகமாகும்.
அவர்கள் இல்லறம் இனிக்கும். சலிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்காது. இத்தகைய வாழ்க்கைக்கு அஸ்திவாரமாக சிறு குழந்தைகளாக இருக்கும் போதே…
இதை எடுத்துக் கொடு, அதை எடுத்து அங்கு கொண்டு போய் வை.என சிறுசிறு வேலைகள் சொல்லும் போது அம்மாவிற்கு உதவி செய்ய வேண்டும் என்ற மனப்பக்குவம் வரும்.
அதோ! அப்பா எதையோ தேடுகிறார் என்ன என்று கேள். இப்படி அன்பாக நாம் ஒவ்வொரு செயலையும் சொல்லும்போது நம்முடன் அவர்கள் அன்பாய் பிணைந்து வளர்வார்கள்.
குடும்பம் என்றால் ஒருவருக்கு ஒருவர் அனுசரித்துப் போக வேண்டும். என்பதை புரிந்து கொள்வார்கள்.
வீட்டில் இப்படி பழகியவர்கள் வெளியிடங்களுக்கு செல்லும்போது மற்றவர்கள் அன்பை புரிந்து கொண்டு நல்ல பெயர் வாங்கிக் கொடுப்பார்கள்.
இதை விடுத்து எப்போது பார்த்தாலும் திட்டுவது, எதற்கு எடுத்தாலும் அடிப்பது இது போன்ற செயல்களால் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்.
இரண்டுங்கெட்டான் பருவம். அவர்கள் மனக்குமுறலை யாரிடமும் சொல்லவும் தெரியாது.
ஏன்? நம்மை அம்மா (அல்லது )அப்பா இப்படி திட்டுகிறார்கள்? எதற்கு அடிக்கிறார்கள்?
என்ன தவறு அப்படி செய்து விட்டோம் என அவர்கள் மனம் வேதனைப்படும். பின் காலப்போக்கில் அவர்கள் மேல் வெறுப்பு வரும். மரியாதை குறையும்.
அவர்கள் சொல்வதற்கு எதிர் மறையாகச் செய்ய ஆரம்பிப்பார்கள். காரணமே இல்லாமல் அடம்பிடிப்பார்கள்.
அவர்கள் எது செய்தாலும், தவறுதலாகவே செய்தும் விடுவார்கள். எனவே, அன்பை கொடுப்போம் ஊக்கமாய் வளர்ப்போம்.