முன்கதை சுருக்கம்

விடுமுறையில் தாத்தா வசிக்கும் கிராமத்திற்கு வரும் இராஜா, ரகு ஆகியோர் அங்குகிராமத்தில் மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடி பொழுதை களிக்கிறார்கள். ஒரு சமயம் அங்குள்ள ஒரு மலைக்குச் செல்கிறார்கள். அந்த மலைபற்றி அங்குள்ள மக்கள் பலவிதமானச் செய்திகளைக் கதைகதையாகச் சொல்கிறார்கள்.. இவர்களும் அந்த மலையின் உச்சிக்குச் சென்று பார்க்கும்போது அங்குள்ள மக்கள் சொல்வது உண்மையாக இருக்குமோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. தொடர்ந்து மலை பற்றி ஆராய்ந்து சில உண்மைகளைத் தெரிந்து கொள்கிறார்கள். மலையின் அடிவாரத்தில் கற்பாறைகளை நகர்த்தினால் புதையல் கிடைக்கலாம் என்று அங்குள்ள பெரியவர்களின் மூலம்.தெரிந்துகொண்டு முயற்சிக்கிறார்கள்

‘வெள்ளையா என்ன அதற்குள் விடிந்து விட்டதா?’ என்றபடி கொல்ல ஆறுமுகம் எழுந்து துண்டை உதறி தோளில் போட்டபடி வந்தார். கொல்ல ஆறுமுகம் ஆறடி உயரம் இருப்பார். எப்போதும் அள்ளி முடிந்த பாகவதர் முடி ,இடுப்பில் ஒரு நாலுமுழம் வேட்டி மட்டும் உடுத்தியிருப்பார். ஒரு துண்டு இது தான் அவரின் உடைகள் . ஆனால் அவரிடம் எப்போதும் ஒரு தீப்பெட்டியும் சுருட்டுகளும் மடியில் அவசியம் வைத்து இருப்பார். .
துண்டை தோளில் போட்டபடி வீட்டிற்குள் இருந்து வெளியே வந்தார். ஆறுமுகம். சற்று தள்ளி வெளியில் வெள்ளையன் நின்று கொண்டு இருந்தான். ”என்ன வெள்ளையா சாமான்களை எல்லாம் எடுத்துக் கொண்டாயா?” என்று கேட்டபடி வெளியில் வந்து வானத்தைப் பார்த்தவருக்குப் பொழுது இன்னும் விடிவதற்கு நேரம் இருப்பதை தெரிந்து கொண்டார்.
இந்தக் கருக்கள் நேரத்தில் யார் நம்மை வந்து கூப்பிடுவது என்ற சந்தேகம் ஏற்பட்டது. சந்தேகத்தை வெளியில் காட்டிக்கொள்ளாமல் உடனே தனது மடியில் இருந்த சுருட்டை எடுத்து பற்றவைத்தார்.. தரையில் கீழே உட்கார்ந்தது போல் குத்துகாலிட்டு அமர்ந்து சுருட்டை பலமாக இழுத்தபடி வெள்ளையனை நோட்டம் விட்டார்..
அந்த சுருட்டு வெளிச்சத்தில் வெள்ளை உடை மட்டுமே கண்களுக்குத் தெரிந்தது. அவருக்கு அங்குள்ள முனி பேயெல்லாம் நடமாட்டம் இருப்பது தெரியும். எனவே இது ஏதோ ஒரு முனியின் வேலையாகத்தான் இருக்கும் என்று மனதில் நினைத்து தைரியத்தை வரவழைத்துக் கொண்டார்.,
கொல்ல ஆறுமுகம் மிகவும் தைரியசாலி என்பதால் அடுத்து என்ன செய்யலாம் என்பதை மனதில் உறுதி செய்து கொண்டார் . உடனே எழுந்து கொண்ட அவர் வீட்டின் தாழ்வாரப் பகுதியில் இருந்த நன்கு இரும்பு பூண் போட்ட தடியொன்றை கையில் எடுத்துக் கொண்டார். வழக்கமாக இருட்டில் அவர் வெளியில் செல்லும்போது தன்னுடன் கொண்டு செல்வது வழக்கம் .
வழக்கமாக ஆறுமுகம் தான் முன்னால் செல்வார். வெள்ளையன் பின்னால் சுமைகளை எடுத்துக் கொண்டு வருவான். ஆனால் இன்று வழக்கமான நடைமுறையை மாற்றி வெள்ளையனை நோக்கி ,”வெள்ளையா” முன்னாள் போ நான் வருகிறேன் என்று கூறினார்.
வந்திருந்த முனி பேய்க்கு யாருமுன்னே போவது யார் பின்னே போவது என்றெல்லாம் தெரியாது .ஆறுமுகத்துக்கு நம்மைத் தெரியாது . அவர் சொன்னபடி செல்ல வேண்டியது தான் என்றபடி கண்மாய்க்கரை ஒத்தையடிப்பாதையில் மலை அடிவாரத்தை நோக்கிச் செல்லத் தொடங்கியது .
‘வெள்ளையன் உருவில் வந்த பேய் முன்னே செல்லத் தொடங்கியது , ஆறுமுகத்துக்குத் தெரிந்து விட்டது. வந்திருப்பது ஏதோ பேய்தான் என்று , இந்தப் பேய்க்கு இன்று நல்ல பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று ஆறுமுகம் எண்ணிக் கொண்டார் . மலையடி வாரம் செல்லும் வரை சுருட்டை மெது மெதுவாக இழுத்துக் கொண்டே பேயை பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்.
வழியெங்கும் கும் இருட்டு விடிவதற்கு இன்னும் ஒரு நாழிகை பொழுது இருக்கும் என்பதை ஆறுமுகம் வானத்தைப் பார்த்து முடிவு செய்துகொண்டார்.ஒரு வழியாகக் கொல்ல ஆறுமுகமும் , வெள்ளையன் உருவில் வந்த பேயும் மலையடிவாரம் வந்து சேர்ந்தனர்.
”வெள்ளையா பட்டறையில் கரி போட்டு பற்ற வை ” என்று கூறிவிட்டு சற்று தள்ளி நின்று கொண்டார் ஆறுமுகம் .. வெள்ளையன் உருவில் வந்திருந்த பேயும் துருத்தியை எடுத்து வைத்து கரியை போட்டு விட்டு தயாராக இருந்தது.
கொல்ல ஆறுமுகம் நெருப்பு மூட்டியவுடன் வெள்ளையன் உருவில் வந்த பேய் துருத்தியை ஊதி தணலை உண்டாக்கியது .தணல் உண்டானதும் கொல்ல ஆறுமுகம் , வெள்ளையனை கூப்பிட்டு பட்டாவை அடுப்பில் வைக்கச் சொன்னார் . வீச்சரிவாள் செய்வதற்கான 3 அடி இரும்பு பட்டாவை அடுப்பில் வைத்து துருத்தியை நன்றாக ஊதவும் தணல் ஏற்பட்டு பட்டா நன்றாக பழுக்க காயத் தொடங்கியது .
சற்று நேரம் நன்றாக இரும்பு பட்டா காய்ந்து பக்குவம் வந்ததும், , வெள்ளையனைக் கூப்பிட்டு ”சம்மட்டியை எடுத்துக்கொண்டு வா” என்று ஆறுமுகம் கூறினார். துருத்தி ஊதுவதை நிறுத்திவிட்டு வெள்ளையன் உருவில் வந்த பேய் சம்மட்டியை எடுத்துக்கொண்டு பட்டாவை அடிக்க தயாராகி நின்றது .
கொல்ல ஆறுமுகம் ஒன்றும் தெரியாதவர் போல் காய்ச்சிய இரும்புபட்டாவை பட்டறையில் வைத்து அடிக்கச் சொன்னார். .இப்படி அடி , அப்படி அடி என்று பட்டாவை மாற்றி மாற்றி வைத்துக் கொண்டிருந்தார்.. திடீரென்று சம்மட்டியால் பட்டாவை ஓங்கி அடிப்பதற்கு நன்கு குனிந்த நிலையில் பழுக்க காய்ச்சிய பட்டாவை பேயின் முதுகுப் பகுதியில் கொல்ல ஆறுமுகம் வைத்தார்.
அவ்வளவு தான் ”வீல்” என்ற சப்தம் பேயாவது பிசாசாவது ஒன்றையும் காணோம். அப்போதுதான் ஆறுமுகத்துக்கு நிம்மதி ஏற்பட்டது. ‘பேயே என்னிடமா வாலாட்டுகிறாய்” என்று கூறிவிட்டு அந்திப்பொழுதில் அந்த இடத்தில் இருந்து கிராமத்துக்கு வந்து சேர்ந்தார், அங்கு வந்து அனைவரிடமும் நடந்த சம்பவத்தைக் கூறினார்.
பேயை அடித்து விரட்டிய ஆறுமுகத்துக்கு கிராமத்து மக்கள் வாழ்த்து கூறினார்கள். அந்த சம்பவத்துக்குப் பின்னர் , கிராமத்தில் பேய் பயமே இல்லை என்றும் கூறினார்கள். காலப்போக்கில் இரவில் வருபவர்கள் ஏதாவது சத்தம் கேட்டால் ‘பேயை ஓட்ட ஆறுமுகத்தை கூப்பிடவா’ என்று இருட்டுநேரத்தில் சத்தம் போட்டு பேசிக்கொண்டு வருவார்கள்.
இதுதான் கொல்ல ஆறுமுகம் பேயை அடித்து விரட்டிய கதை என்று கூறினார் கல் மூக்கன். இதைக்கேட்ட அனைவரும் வியப்பு அடைந்தனர்.
தொடரும் .
======================================================================== ============= .

Share.

Leave A Reply