11-எத்தனுக்கு எத்தன்

மாலை நேரம் வந்து விட்டால் சிறுவர்களுக்கு கொண்டாட்டம்தான். தாத்தாவிடம் கதை கேட்க கூடிவிட்டனர் அவர் முன்.

அப்பளக்குடுமி தாத்தாவும் கதை சொல்ல தயாரானார் அப்போது…

அழுது கொண்டே வந்தாள் சுமித்ரா.

இங்கே வாம்மா! என அழைத்த தாத்தா, “ஏன் அழுகிறாய்?” என அருகில் அமர வைத்தார்.

தாத்தா ஊரிலிருந்து மாமா வந்திருந்தார். அவர் போகும் போது ஐந்து ரூபாய் தந்து விட்டுச் சென்றார். என்றவள், மூக்கை உறிஞ்சிக் கொண்டு மேலே பேச ஆரம்பித்தாள் சுமித்ரா.

கண்ணீரைத் துடைத்துவிட்ட தாத்தா ‘ம்’ மேலே சொல்லுமா என்றார்.

அந்த ஐந்து ரூபாய்க்கு பிஸ்கட் வாங்கினேன். மீதி கடைக்காரர் கொடுத்தார் நான் பத்து ரூபாய் கொடுத்ததாக நினைத்துக் கொண்டு ஐந்து ரூபாய் ஐம்பது பைசா கொடுத்துவிட்டார்.

ஐம்பது பைசா தானே கொடுக்க வேண்டும். ஐந்து ரூபாயும் கொடுத்து விட்டார்களே என நினைத்தேன்.திருப்பிக் கொடுக்க மனம் இல்லாமல் கொண்டு வந்து விட்டேன்.

வரும்போது.. வரும்போது எதிர்த்த வீட்டு பாபு தடியன் கையில் இருந்ததை பறித்துக் கொண்டு ஓடி விட்டான். பிஸ்கட்டும் போச்சு, ரூபாயும் போச்சு என அழுதாள் சுமித்ரா.

இவற்றை எல்லாம் அமைதியாக கேட்ட தாத்தா, அமைதியாக ஆனால், ஆழமாக சுமித்ராவைப் பார்த்தார்.

அந்த பார்வைக்கு அர்த்தம் புரியாத சுமித்ரா என்ன தாத்தா என்றாள்.

குழந்தை! கடைக்காரர் கவனக்குறைவால் அதிகமாக பணத்தை தந்து விட்டார். நீ திருப்பிக் கொடுத்திருக்க வேண்டும் அல்லவா? என நிறுத்தினார் தாத்தா.

‘ஆமாம்’ என்றால் சுமித்ரா.

நீ கொடுக்காமல் ஏமாற்ற நினைத்ததால் உன் உடமையான பிஸ்கட்டும், ரூபாயும் சேர்ந்து பறிபோய்விட்டது பார்த்தாயா.

நாம் ஒருவரை ஏமாற்ற நினைத்தால் மற்றொருவரிடம் நாம் ஏமாந்து போய்விடுவோம் தெரிகிறதா! என்ற தாத்தா.

“எத்தனுக்கு எத்தன் இந்த உலகில் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள். அதை விளக்க ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள்” என்ற தாத்தா கதை சொல்ல ஆரம்பித்தார்.
                   ******

ஒரு ஊரில் மாடசாமி என்ற திருடன் வாழ்ந்து வந்தான்.அவனைக் கண்டாலே அவ்வூர் மக்கள் எல்லாம் ஒதுங்கி பயந்து நடக்க ஆரம்பித்தார்கள்.

இது கண்ட மாடசாமி இனி இவ்வூரில் இருப்பதைவிட அடுத்த ஊர் பக்கம் போய் வரலாம் என தன் மனைவியிடம் சாப்பிட ஏதாவது செய்து கொடு என கேட்டான்.

அவன் மனைவியோ களிமண்ணில் உருண்டை செய்து அதன் மேல் களிமண் தெரியாத வண்ணம் சோற்றை ஒட்டி தன் கணவனிடம் கொடுத்தாள்.

அதை வாங்கிப் பார்த்த மாடசாமி, தனக்கு ஏற்ற மனைவிதான் என நினைத்தவன். இதை என்ன செய்ய என கேட்டான்.

“இந்த உருண்டையை வேறு யாரிடமாவது கொடுத்துவிட்டு அவர்களிடம் இருந்து நல்ல உணவை நீங்கள் வாங்கி சாப்பிடுங்கள்” என்றால் மாடசாமி மனைவி.

ஜாடிக்கு ஏற்ற மூடி தான் என தன் மனைவியை பாராட்டிய மாடசாமி களிமண் சாப்பாட்டுடன் விடை பெற்றான்.

பக்கத்து ஊரில் கந்தசாமி என்ற ஏமாற்று பேர்வழி வாழ்ந்து வந்தான். வாயைத் திறந்தால்  பொய்தான் உதிரும்.

ஊரை பொய் சொல்லியே ஏமாற்றி வாழ்க்கை நடத்தினான். காலப்போக்கில் அவனைக் கண்டு ஒதுங்க ஆரம்பித்தார்கள் மக்கள்.

இனி இந்த ஊரில் சரிப்பட்டு வராது என எண்ணிய கந்தசாமி தன் மனைவியிடம் வழியில் சாப்பிட ஏதாவது செய்து கொடு என கேட்டான்.

அவன் மனைவி அரவனை விட ஏமாற்றுப் பேர்வழி.

ஒரு கலயத்தை எடுத்து அதன் முக்கால் விளிம்பு வரை மணலைப் போட்டு சிறிது அரிசியை மேலே பரப்பி தன் கணவனிடம் கொடுத்தாள்.

“இது என்ன? அரிசியை தருகிறாய்” எனக் கேட்டான் கந்தசாமி.

“அரிசியை யாரிடமாவது கொடுத்துவிட்டு சோற்றை வாங்கிச் சாப்பிடுங்கள்” என்றாள்.

அவனும் தன் மனைவியின் செய்கையை பாராட்டியபடி கலயத்தை சுமந்து கொண்டு மனைவியிடம் விடை பெற்றான்.

இருவரும் ஒரு ஊரில் சந்தித்தார்கள். இவர்கள் இருவருக்கும் ஒருவர் குணம் மற்றவருக்குத் தெரியாது. எனவே, தாம் தாம் கெட்டிக்காரர்கள் மற்றவனை ஏமாற்றி விடலாம் என இருவரும் முடிவு செய்தனர்.

அவர்கள் தங்கி இருந்த இடத்தில் ஒரு சுனை இருந்தமையால் இருவரும் அதில் நீராடினார். நெற்றி நிறைய விபூதி பூசிக்கொண்டனர்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகை செய்து கொண்டு பேச ஆரம்பித்தார்கள்.

மாடசாமி கந்தசாமியிடம், நீங்கள் எந்த ஊர்? எங்கே போகிறீர்கள்? என்று விசாரித்தான்.

கந்தசாமியும், நான் ஒரு வழிப்போக்கன்  பிழைப்பு தேடி வேற்றூர் போகிறேன்.நீங்கள் எங்கே போகிறீர்கள் என்று திருப்பிக் கேட்டான்.

நானும் பிழைப்பு தேடி வேற்றூர் போகிறேன் என்ற மாடசாமி அச்சு அச்சு என தும்மல் போட்டான்.

‘ நீங்கள் சாப்பிட என்ன செய்யப் போகிறீர்கள்” என்றான் மாடசாமி.

என் மனைவி ஒரு அரைச் சமர்த்து. அரசியைக் கட்டிக் கொடுத்துவிட்டாள். நீராடவும், பசி வந்துவிட்டது. என்ன செய்வது என யோசிக்கிறேன் என்றான் கந்தசாமி.

என் மனைவி பழைய சோற்றை உருட்டி தந்துவிட்டாள் ஜலதோசமாக இருக்கிறது. பச்சைத் தண்ணீரில் வேறு குளித்துவிட்டேன். நீங்கள் தவறாக நினைக்கவில்லை என்றால் அரிசியையும், சோற்றையும் மாற்றிக் கொள்ளலாமா? எனக் கேட்டான் மாடசாமி.

கந்தசாமிக்கு பழம் நழுவி பாலில் விழுந்தது போன்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. அப்படியே மாற்றிக் கொள்வோம் என இருவரும் மாற்றிக் கொண்டனர்.

இருவரும் அங்கே இருந்தால் ஒருவரைப் பற்றி ஒருவருக்கு தெரிந்து சண்டை போட நேரும் என எண்ணி எதிர் எதிர் திசையில்  செல்லலானார்கள்.

மாடசாமி செல்லுவதை பார்த்துக்கொண்டே இருந்தவன் தலை மறைந்ததும் சோற்றை சாப்பிட எடுத்தான்.

சோற்று உருண்டை களிமண் என்பதும் களிமண்ணை மறைக்க பருக்கையை ஒட்டி வைத்திருப்பதும் கண்டு கோபம் கொண்டு திரும்பி வந்தான்.

கந்தசாமி தலைமறைந்ததும் மூன்று கல் எடுத்து வைத்து சுள்ளி பொறுக்கி வந்து அடுப்பை பற்ற
வைத்தான். அரிசியை களைந்து கலயத்தோடு பொங்கி இறக்க தீர்மானித்து அரிசியை களைந்தான் மாடசாமி.

திடுக்கிட்டான்  அரிசியை விட மணலே அதிகம் இருப்பது கண்டு கோபம் கொண்டு திரும்பினான்.

இருவரும் கோபத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்தபோது இருவருக்கும் சிரிப்புதான் வந்தது.

கவிஞர் ச. மல்லிகா எழுதும் கதை தொடரும்.

Share.

Leave A Reply