முடக்கத்தான் கீரை
எலும்புகளுக்கு வலு சேர்க்க கூடிய மிக முக்கியமான சத்துக்கள் நிறைந்த கீரை இந்த முடக்கத்தான் கீரை. எனவே எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள். எலும்பு தேய்மானம் அடைந்தவர்கள் இந்த முடக்கத்தான் கீரையை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.
கொடியாக வளரக்கூடிய தாவரம் இதன் விதைகளை எடுத்து தூவினாலே எளிமையாக வளரக்கூடிய ஒரு கொடி வகையாகும்.
இந்த கீரையை மற்ற கீரையோடு சேர்த்து கூட்டு கீரையாக பயன்படுத்தலாம். தனியாகவும் பயன்படுத்தலாம். இதில் கொஞ்சம் கசப்புத்தன்மை இருக்கும் நன்றாக நெய்விட்டு வதக்கி பயன்படுத்தினால் கசப்புத் தன்மை குறையும். இதை அடிக்கடி சாப்பிட்டு பழகினால் கசப்புத்தன்மை அறவே தெரியாது.
இந்த முடக்கத்தான் இலையை காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக உண்டு வருவதால் இதன் பயன்கள் நமக்கு முழுமையாக கிடைக்கும். இதை இந்தக்கீரையை நான்கு பல் பூண்டு நான்கு சிறு வெங்காயம் மிளகு சிறிது உப்பு எல்லாம் சேர்த்து நல்லெண்ணெய் விட்டு வதக்கி அதை அரைத்து தோசை மாவில் கலந்து தோசை சுட்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
இதன் மூலம் மூட்டுத் தேய்மானம் இடுப்பு தேய்மானம் போன்றவை ஏற்படாது. மூட்டுவலி இடுப்புவலி பிரச்சினை உள்ளவர்களுக்கு இது ஒரு அற்புதமான மருந்து. இந்தக்கீரையை பறித்து நல்லெண்ணை அல்லது விளக்கெண்ணை விட்டு அதிலும் விளக்கெண்ணெயை சேர்த்துக் கொள்வது நல்லது நன்றாக வதக்கி இளஞ்சூட்டில் மூட்டு வலி அல்லது இடுப்பு வலி உள்ள இடங்களில் அதை வைத்து கட்டிவர மூட்டுவலி இடுப்புவலி பிரச்சினைகள் தீர்க்கும் அருமருந்தாக இது பயன்படுகிறது. அதனோடு சேர்த்து கீரையை உணவில் உட்கொண்டு வருவது முழுமையான பயனை அளிக்கும்.
நரம்புத்தளர்ச்சி உள்ளவர்களுக்கு இந்த கீரையை எடுத்துக் கொள்வது மூலம் நரம்பு தளர்ச்சி சரிசெய்யக்கூடிய தன்மை இந்த கீரைக்கு உண்டு.
மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த கீரையை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. மேலும் இது தோல் சம்பந்தமான பல பிரச்சனைகளையும் தீர்க்கும் மருந்தாக பயன்படுகிறது.
முடக்கத்தான் கீரையை அரைத்து அதன் சாறை இரண்டு துளிகள் காதில் விட்டு வர காது வலி உள்ளவர்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
இவ்வாறு பல வழிகளில் பயன்படக்கூடிய முடக்கத்தான் கீரையை நாமும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டு பயன் அடைவோம்.
– ச.ம. பால கிருஷ்ணன். சென்னை
அழகுக் குறிப்பு
"கொய்யா பேஸ்பேக்"
தேவையான பொருட்கள் :-
ஓட்ஸ் : 1 மேஜைக்கரண்டி
முட்டை மஞ்சள் கரு : ஒன்று
தேன் : 1 மேஜைக்கரண்டி
கொய்யா : 1/2 பழம்
செய்முறை :-
முதலில் கொய்யாவை சீவிக் கொள்ள வேண்டும். அதை பசை போல அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மேஜைக் கரண்டி ஓட்ஸ் எடுத்து பொடியாக்கி கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் ஓட்ஸ் பொடி எடுத்து அதனுடன் ஒரு மேஜைக்கரண்டி தேன் அரைக்கப்பட்ட கொய்யா மற்றும் முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும் இதை முகத்தில் பூசிக் கொள்ளவும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுவதால் தழும்புகள் பருக்களைப் போக்கும். சருமத்திற்கு புத்துணர்வு அளித்து பளபளப்பான தோற்றத்தையும் அளிக்கும்.
– பிரேமா பாலகிருஷ்ணன்,சென்னை
பழமொழி
"ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி"
நாம் அறிந்த விளக்கம் :-
பேச்சு பெரிசாக இருக்கும் செயல் ஒன்றும் இருக்காது. என்று இடித்துரைப்பார்களே அது போல தான். இந்தப் பழமொழியும் உலக வழக்கில் பொருள் கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் இதன் பொருளை ஆராய்ந்தால் ஒரு அற்புதமான விளக்கம் கிடைக்கிறது.
விளக்கம்:-
ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி களும் யாரென்று தெரிந்தால் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள் அது நாம்தான். குழப்பமாக இருக்கிறதா?
ஓட்டை கப்பல் என்பது மனித உடலையும் ஒன்பது மாலுமிகள் என்பது நம் உடலில் உள்ள பல்வேறு துவாரங்களையும் குறிக்கிறது. எனவேதான் இந்த மனித வாழ்க்கையில் ஒருவனுக்கு மரணம் நேரும் பொழுது அவனுடைய உயிர் மூச்சு அந்த உடலில் எந்த ஓட்டை வழியாகவும் வெளியே வரும் . எனவே
பெரியவர்கள் நிலையற்ற இந்த மனித வாழ்வை குறிக்கும் பொழுது ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி, போய் ஆக வேண்டியதைப் பாரப்பா என்று சொல்வார்கள் .
.