வ.உ.சி. யின் பேரன் தமிழ்வாணன் உடன் ஒரு கலந்துரையாடல்.

இந்தியா சுதந்திரம் அடைவதற்காக தமது  காலத்தில் போராட்ட களத்தில் முன்னின்று விடுதலை பெற்றுத் தந்தவர்களில் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் முதன்மை  பெறுகிறார்கள். இந்திய வரலாற்றில் என்றும் நிலையான இடத்தில் உள்ளார்கள்.  அவரது மனைவி  வழித்தோன்றலில் மு.நா.பா.தமிழ்வாணன் அவர்களும் ஒருவர்.வ.உ.சி .க்குபேரன் முறையாவார்.  விவசாயத்துறையில் முதுநிலை பட்டத்துடன் ஆராய்ச்சி படிப்பில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.அதோடு மிகச் சிறந்த இயற்கை ஆர்வலர் ஆவார்.இந்திய ஆராய்ச்சித் துறையில்,விவசாய பல்கலைக்கழத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு பல்வேறு வகைகளில் உதவிகள் செய்து வருகிறார்.


கோவை வடவள்ளி அருகே சிறுவாணி நகரில்  வசித்து வரும்  திரு தமிழ்வாணனை சந்திப்பதற்கு ஸ்ரீ ஐசுவரியம் இதழ் ஆசிரியர் சோம.சந்திரன்,செந்தமிழ் வாணி ச.மல்லிகா  இருவரும் அவரது இல்லம் நோக்கி  சென்றோம். இயற்கை ஆர்வலர் மரங்களை நேசிப்பவர் என்பதை அவரது இல்லம் சென்றவுடன் தெரிந்து கொண்டோம் .அவர் வசிக்கும் வீதியில் நிழல் தரும் மரங்கள் ,வீட்டின் முன் பகுதியில்மரங்களும்  அபூர்வ செடிகளும்நிறைந்து  குளுமையான இயற்கை காற்று  ஆகியவை தமிழ்வாணன் அவர்களை  முந்திக்கொண்டு எங்களை வரவேற்றன. அதைத் தொடர்ந்து தமிழ்வாணன் அவர்களின் இல்லாள்  திருமதி தமிழ்ச் செல்வி எங்களை அன்புடன் வரவேற்றார்.வீட்டின் உள்ளே சென்று அமர்ந்து அவர்களுடன் உரையாடல் நிகழ்த்தினோம்.


கேள்வி -நீங்கள் வ.உ,சி. அய்யா அவர்களின் உறவு முறை பேரன் என்று அறிந்தோம் மகிழ்ந்தோம்,இலக்கிய,சமூக பணிகள் செய்வதாக அறிந்தோம் அது பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன ? என்று கேட்டோம்.

பதில்- வ.உ..சி அய்யா அவர்களின் தோன்றல்களில் பேரன் முறை.அய்யா அவர்களின் பெயரை வெறுமனே சொல்வதை விட அவரது பெயரை தக்க வைக்கச் செய்ய வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் உள்ளவன். அய்யா வ.உ.சி .யின் செயல்களை அடிவொற்றி செல்லும் அனைவரும் வ.உ.சி யின் பேரன்கள் தான், அவரின் வாரிசுகள் தான் . எனது மனைவி ஆசிரியை இப்போது பணியில் இருந்து தன்னை முழுமையாக விடுவித்துக்கொண்டு திருக்குறள் மாமன்றத்தை நடத்தி வருகிறார்கள். நாங்கள் இருவரும் சேர்ந்து ,"உயர் தமிழ்த் திருவாட்டி மு. நாச்சியார் அம்மையார் அவர்கள் அறக்கட்டளையும், திருக்குறள்  மாமன்றமும்" நடத்தி வருகிறோம்.
இதற்கிடையில் அம்மையார் த.தமிழ்ச்செல்வி அவர்கள் குறுக்கிட்டு  கூறியதாவது- ‘எங்களது தமிழ் நாடான் கல்வியகம்  மூலம் மாணவர்களை மதிப்பெண் பெற வைப்பதும், அவர்களை சிறந்த சிந்தனையாளர்களாக உருவாக்குவதிற்கும்  உதவிகள் செய்து வருகிறோம். இப்போதைய பல மாணவர்கள் மனப்பாட எந்திரங்களாக மாறி மார்க்கு எடுக்கும் கருவியாக செயல்பட்டு வருகிறார்கள்.
பல மாணவர்கள் அதிக,முதல் மதிப்பெண் பெற்று இருந்தாலும் அவர்கள் சிறந்த வர்கள் என்றோ,குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்கள் திறமையற்றவர்கள் என்றோ கூறி விடமுடியாது.மதிப்பெண்களை வைத்து மாணவர்களை மதிப்பிட முடியாது. மாணவர்கள்  அறிவை வளர்த்துக்கொள்ள சுயமாக சிந்தித்து படிக்க உதவிகள் செய்து வருகிறோம்.


முந்தைய காலங்கள் போல இப்போது வாய்பாடுகள், மனனக் கணக்குகள் செய்வது எல்லாம் குறைந்து,சொல்லப்போனால் அழிந்து கணினி மூலம் மதிப்பு செய்யும் காலமாகி விட்டது,தொழில் நுட்பம் அதிகம் ஆனதால் பண்பாடு முறைகள் எல்லாம் மாறிவிட்டன.அதனால் ஒரு சிறிய பால்,மோர் கணக்கு பார்க்க கூட கணினி யை தேடும் அவலம் ஆகிவிட்டது.

மாணவ-மாணவிகள் கடிதம் எழுதும் முறை கூட குறைந்து விட்டது.திருவள்ளுவ சிந்தனையை வளர்ப்பதிலும்,கருத்துக்களை பரப்புவதிலும் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. என்று கூறினார்.


அதைத் தொடர்ந்து தமிழ்வாணன் அவர்கள் கூறும் போது,’ எங்கள் அமைப்பின் சார்பில்  மாணவர்களை பல்வேறு தேர்வு களுக்கு தயார் படுத்துவது, மரம் வளர்ப்பது,மரக்கன்றுகள் நடுவது, மரம் வெட்டுவதை தடுப்பது  போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். 

இயற்கையை காக்க வேண்டும், மரத்தை வளர்க்க வேண்டும், பறவைகளை அழியாமல் பாதுகாக்க வேண்டும், மாடுகளை வதை செய்வதை ,கொலை செய்வதை தடுக்க வேண்டும். இயற்கையை காப்பாற்றும் பணியில் ஈடுபடுபவர்களுடன் இணைந்து செயல்படுகிறோம்.



கேள்வி- நீங்கள் உங்கள் நண்பருடன் காளை மாடுகள் வளர்த்து வருவதாக சொன்னார்களே?

தமிழ்வாணன் பதில்- நம் நாட்டின் மிகப்பெரிய செல்வம் மாடுகள் தான். மாடும் மரங்களும்,தண்ணீரும்  இல்லை என்றால் மனிதன்  அழிந்து  விடுவான். மரங்கள் இருந்தால் தான் நீர் ,சுத்தமான காற்று கிடைக்கும்,. 


காங்கயம் காளைகள் என்று புகழ் பெற்று விளங்கிய காளைகள் இப்போது அழிவை நோக்கி சென்று கொண்டுள்ளன.  எனது நண்பர் திரு முத்து முருகன் என்பவர் மூலம் தொண்டாமுத்தூரை அடுத்த குளத்துப்பாளையம் என்ற இடத்தில்  சில காளைகள் ,மாடுகள் பராமரித்து வளர்த்து வருகிறோம்.

வருங்காலத்தில் உழுவதற்கு கூட மாடுகள் கிடைக்காத நிலை ஏற்பட்டு விடும்.அப்போது எங்களிடம் மாடுகள் உண்டு. நிலம் உள்ளவர்கள் மாடுகளை ஓட்டிச்சென்று விவசாய பணிகளை செய்துவிட்டு மாடுகளுக்கு நல்ல உணவு கொடுத்து மீண்டும் எங்களிடமே கொண்டு வந்து விட்டு விடலாம்  இதற்கான  ஏற்பாடுகள் செய்து கொண்டுள்ளோம்.

கேள்வி- அய்யா நீங்கள் எதைக் குறிக்கோளாக கொண்டு செயல் படுகிறீர்கள்?

தமிழ்வாணன் பதில்- இன்றைய சூழ்நிலையில் நீர்நிலைகள், ஆறுகள் கெட்டுப் போய்விட்டன.அவற்றை பாதுகாக்க வேண்டும்.அதற்காக எங்களது பங்களிப்பை செய்து வருகிறோம்.

இயற்கை உணவு வகைகள்,காய்கறிகள் அனைவருக்கும் கிடைக்க ,அவற்றை வாங்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். 
மாணவர்களுக்கு அரசுப்பணிகளில் சேர நுழைவுத் தேர்வு பயிற்சி அளிக்கிறோம். இந்த நாடு செழிக்க இயற்கையை பாதுகாக்க,நல்ஒழுக்க வாழ்க்கையை பின்பற்ற திருக்குறள் மூலம் அறிவுரை வழங்கி வருகிறோம்.கன்னியாகுமரியில் கம்பீரமாக காட்சியளிக்கும் திருவள்ளுவர் சிலையை செதுக்கிய கணபதி  ஸ்தபதி,மற்றும்  சிற்பிகள் மீது எனக்கு பெரும் மதிப்பு உண்டு.


இங்குள்ள மாணவர்கள் ,மற்றும்  மக்களிடம் தீபாவளி பண்டிகை போன்ற காலங்களில் புதிய உடை நீங்கள் அணிந்து கொள்ளுங்கள், உங்களிடம் உள்ள பழைய உடைகளை இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுங்கள், பட்டாசு வெடிப்பதை  முற்றிலும் தவிர்த்து விடுங்கள். அதற்கு பதில் இனிப்பு, இட்லி போன்றவைகளை  இல்லாதவர்களுக்கு கொடுத்து மகிழுங்கள் என்று கூறி வருகிறோம்.

பட்டாசு வெடிப்பதன் மூலம் காற்று மாசு படுகிறது.பறவைகள் அச்சப்படுகின்றன.வயதான நோயாளிகள் மனம் பாதிக்கப்படுகிறது.இவர்களை எல்லாம் பாதுகாக்க வேண்டும்  . இங்கே எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் பெயர் பாண்டியராசன் .அவர் சிட்டுக்குருவிகள் காப்பகம்  வைத்துள்ளார். அங்கு 2 ஆயிரம் சிட்டுக்குருவிகளை பாதுகாத்து வருகிறார்  என்றார்.

கேள்வி-பொதுவாக  மற்றவர்களுக்கு உங்கள் அறிவுரை,கோரிக்கை என்ன ?

பதில்- எங்கள் அறக்கட்டளை சார்பில்  திருக்குறள் திருவிழா  ஏழு முறை நடத்தி இருக்கிறோம். . அதில்  இந்த மண்ணைப் பற்றி, அதன் அருமை-பெருமைகள் பற்றி இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.


பறவைகள், குருவிகள்,உள்பட அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டும்.இந்த உலகில் எந்த உயிரையும் யாரும் கொள்வதற்கு உரிமை இல்லை.ஒவ்வொரு உயிரும் மனிதனுக்கு ஏதாவது ஒரு வகையில் தனது பங்களிப்பை செய்து கொண்டு தான் இருக்கிறது.இதை மனிதன் தான் சரியாக புரிந்து கொள்ள வில்லை.

இந்த மண்ணில் தமிழர் கள் இழந்த உரிமையை மீட்க வேண்டும். அந்த உரிமைகள் என்ன அதை எவ்வாறு மீட்பது என்பது பற்றியும் , சாத்வீக வழி முறைகள் குறித்து விழிப்புணர்வு உண்டாக்க வேண்டும். தமிழர்களாக பிறந்து தமிழர்களின் நலனில் அக்கறை கொண்ட மாபெரும் தமிழ் பெருந்தலைவர்கள்,அறிஞர்கள்,இந்த மண்ணின் மைந்தர்களின் வாழ்க்கை வரலாறுகளை எடுத்துக்கூறி  வருங்கால சந்ததியினருக்கு அதன் பெருமைகளை,அறியச்  செய்ய வேண்டும்.

மண் வளம் காக்க மரங்கள் நட வேண்டும்.மண் அரிப்பை தடுக்க ,நிழல் பெற,கால்நடைகள் உணவு பெற,மனிதனுக்கு தேவையான நல் உணவுகள் பெற ,நல்ல சுவாசத்திற்கு மரம் மிகவும் அவசியம் எனவே  மரத்தை காக்க வேண்டும். இந்த மண் நம் முன்னோர்களால் காக்கப்பட்டது.மண்,மலை,மரம் ,காடு,கண்மாய்,  குளம், குட்டை ,நீர்நிலைகள், கால்நடைகள், உயிரினங்கள் பாதுகாக்கப்பட்டன, அவை மீண்டும் வளம் பெற வேண்டும்.
கேள்வி -அய்யா பனை மரங்கள் நிறைய அழிந்து வருகிறதே அது பற்றி உங்கள் கருத்து என்ன ?

தமிழ்வாணன் பதில்- அது மிகவும் வருத்ததக்க செய்தி.நமது நாட்டில் 2 5 கோடி பனை மரங்கள் இருந்தன. அவைகள் மூலமே ஓலைச்சுவடிகள் தயாரிக்கப்பட்டுநமது முன்னோர்களால்   பயன்படுத்தப்பட்டு வந்தன.பனைமரங்கள் வெட்டப்படுவதால் நாடு  மிகப்பெரிய இழப்பை  சந்திக்கும்  நிலை ஏற்பட்டுள்ளது.

முன்பு நமது நாட்டில் 1 லட்சம் புலிகள் இருந்தன.அவை வேட்டையாடப்பட்டு இன்று 3 ஆயிரம் புலிகளாக குறைந்து விட்டன. காங்கயம் காளைகள் 1 2  லட்சம் அளவில் இருந்தன. ஆனால் இப்போது  1 லட்சம் காளைகளாக குறைந்து விட்டன. இவற்றை எல்லாம் அழித்து விட்டார்கள் .இவற்றை நாம் பெருக்கி க்கொடுக்கவேண்டும்.

கண்மாய்கள், குளங்கள், ஆறுகளை அழித்து  பல்வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்துகிறார்கள் இதனால்  தண்ணீர் கிடைக்காத நிலை அடுத்த தலைமுறைக்கு ஏற்பட்டுவிடும் ஆபத்து உள்ளது.இது போன்ற ஒரு அவல நிலை நாட்டில் ஏற்பட்டு வருகிறது.இது மிகவும் வருத்தமான நிலை.

கேள்வி -இதை  தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் ?

தமிழ் வாணன் பதில்-  நாட்டில் இது போன்ற அவல நிலை மீண்டும் வராமல் இருக்க இன்றைய இளைஞர்கள் முன் வர வேண்டும். வீதிகள் தோறும் மரங்கள் நட வேண்டும் அதை தொடர்ந்து பாதுகாக்க  வேண்டும்.வளர்த்து ஆளாக்க வேண்டும்.

மண்பிடிப்பு உறுதி பெற ,மண்சரிவை தடுக்க ,சுற்றுச் சூழலில் ஏற்படும் நச்சுக்காற்றை போக்க நாம் அனைவரும் மரம் வளர்க்க வேண்டும். பல இடங்களில் சாலை விரிவாக்கத்திற்காக மிகப்பெரிய மரங்களை  வெட்டி  வீழ்த்தி விடுகிறார்கள். ஒரு மரத்தை வெட்டினால் , பத்து மரக்கன்றுகளை வளர்த்து பராமரிக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது, அவ்வாறு செயல் படுகிறார்களா  என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.எங்கள் அமைப்பு சார்பில் இப்போது மரக்கன்றுகளை விட விதைகள் வழங்கி வருகிறோம் விதையை வேண்டாம் என்று  ரோட்டு ஓரத்தில் அல்லது எங்காவது ஓரிடத்தில் தூக்கி எறிந்துவிட்டு சென்றாலும் அவை தானாக முளைத்து பயன் கொடுக்கும்என்றார்..



சாலை ஓர மரங்களை வெட்டுவதால் மிகப்பெரிய கேடு ஏற்படும்,நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்களின் வேகத்தை தடுக்கும் ஆற்றல்,பேருந்துகள் கக்கும் கார்பன்டை ஆக்சைடு போன்ற நச்சுவாயுக்களை சுத்தம் செய்யும் ஆற்றல்  சாலையோர மரங்களுக்கு உண்டு.அதனால் தான் நம் முன்னோர்கள் சாலைகளில் மரம் நட்டு வளர்த்தார்கள். எனவே தான் மரங்களை பாதுகாக்க சொல்கிறோம். அதே போல் சீமை கருவேல் மரங்கள்  முற்றிலும் அகற்றப்படவேண்டும் .

 கேள்வி-  உங்களிடம் பிறந்தாள் வாழ்த்து பெற வரும் இளைஞர் களுக்கு நீங்கள் என்ன பரிசு கொடுப்பீர்கள் ?

தமிழ்வாணன்  பதில்- சமீபத்தில்  பிறந்தநாள் ஆசி பெற  1 7 வயது இளைஞர் ஒருவர்   வருகை தந்தார்.அவருக்கு ஆசிகள் வழங்கி  ஒரு சில நிமிடம் அவரை அமரச்செய்தேன். நீங்கள் எவ்வளவு காலம் வாழ வேண்டும் என்று எண்ணுகிறீர்கள் என்றேன்,சற்று திகைத்த அவர், சிறிது யோசனைக்குப்பின் சுமார் என்பது ஆண்டுகள் வரை வாழ விரும்புகிறேன் என்றார்.

ஆனால் நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் வயதை குறைத்துக்கொண்டே வருகிறீர்களே என்றேன்.இப்போது உங்களுக்கு பதினேழு, என்பதில்   இதை குறைத்தால் 6 3 ஆண்டுகள் தான் வருகின்றன.அடுத்தஆண்டு 6 2,6 1 , 6 0 என்று குறைந்து கொண்டே தானே வருகிறது.

உங்கள் வயதை கூட்டுவதற்கு உங்கள் பிறந்தாள் எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வாருங்கள்,  இந்த ஆண்டு 17,18, 19  என கூடிக்கொண்டே தானே செல்லும்.உங்கள் முதுமை காலத்தில் அந்த மரங்களைச் சென்று பாருங்கள், உங்களுக்கு 7 9 வயது ஆகும் போது எவ்வளவு மரங்கள்உயிர் பெற்று இருக்கும் ,அவை உங்களை வாழ்த்தும் உங்களுக்கு பின் அவை உங்கள் பெயர் சொல்லும்,அதன் காலம் முழுவதும் உங்கள் வயது கூடிக்கொண்டே இருக்கும். என்றேன்.
திகைத்துப் போய் உட்கார்ந்த இளைஞர் இப்போது புதிய சிந்தனையுடன் எழுந்தார். இந்த உலகின் புதிய வரலாறு வித்திடப் போவதாக அவர் என்னிடம் உறுதி அளித்தார்.ஆண்டுதோறும் என் பிறந்தநாளில் எங்காவது ஓர் இடத்தில் மரங்கள் உயிர்பித்துக்கொண்டே இருக்கும்.இது உறுதி என்றார்.சிந்திக்க கூடிய இளைஞர் கள் இருக்கும் வரை நாம் நமது நாட்டை காப்பாற்றிவிட முடியும் என்ற நம்பிக்கைஎன்னுள் ஏற்பட்டது.

இந்தியாவில் கடந்த 1 0 ஆண்டுகளில் 1 0 கோடிமரங்கள் வெட்டப்பட்டுள்ளன. ஆனால் 1 லட்சம் மரங்களை கூட அதற்கு ஈடாக  வளர்க்க முடியவில்லை என்று தனது மனக்குறையை வெளியிட்டார்.தமிழ் வாணன் அவர்களின் செயல்களுக்கு ,அவரது மனைவி தமிழ்ச்செல்வி மிக உறுதுணையாகவும் , அமைப்பின் பொறுப்பாளராகவும் இருந்து செயல்பட்டு வருகிறார்.
Share.

Leave A Reply