இசை என்ற ஒரு இன்பச் சொல் உண்டு. அது வெறும் சொல்லென்று சொல்லிவிட முடியாது. அது மிகவும் சிறப்புடைய வன்மை மிகுந்த சொல் ஆகும்.அது மனிதனை மட்டுமல்ல இறைவனையும் ஈர்க்கும் தன்மை கொண்டது. இயற்கையையும் உருக்கம் தன்மை கொன்டது.
மகிழ்ச்சியில் நெய்யும் நூலாகவும், நெகிழ்ச்சியில் தாயாகவும் மருத்துவத்தில் மருந்தாய் இருந்தும் இன்னும் எத்தனையோ ஆற்றல்களை உள்ளடக்கியது இசை. இத்தகைய இசை இயல்புகளை சற்று ஆழ்ந்து பார்த்தால் தான் அதன் அற்புத சக்தி என்னவென்று புரியும்.
இசை என்பது மிகுந்த சிறப்புடையது என்பது நமக்குத் தெரியும். இத்தகைய இசைக்கு அடிப்படையாக இருப்பது சப்தம். சப்தம் என்பதற்கு பொருள் என்ன தெரியுமா ? ஆற்றல், சக்தி என்றும் கூறலாம். அதை அனைவரும் அனுமதித்து இருக்கிறோம்.ஆனால் அதை நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்களா ? இதை படித்து விட்டு உணருங்கள்.
எந்த ஒரு உயிருள்ள , உயிரற்ற அனைத்துக்கும் உள்ள ஒற்றுமை சப்தம் எழுப்புவதுதான் .எல்லாவற்றிலும் சப்தங்கள் நிறைந்து உள்ளன.சப்தம் எழுப்பும் போது தான் அது உயிர் பெருகுகிறது.உயிர் கண்களுக்கு தெரியாது என்பது எத்தகைய உண்மையோ ,அத்தகைய உண்மை உயிர் சப்தத்திற்குள் வசிக்கிறது என்பதாகும்.

ஒரு மனிதன் துவண்டு போய் கிடக்கும் நேரம் அவனுக்கு உற்சாகமான இசை ஆற்றலைத் தருகிறது.இதை உணர்த்த ஒரு சிறிய உதாரணம்.
ஒரு வறண்டபகுதி அங்கு வாழும் மக்கள் வெகு தூரத்திற்கு சென்று வேலை பார்க்க வேண்டும்.அவர்களை வழக்கமாக அழைத்துச் செல்ல ஒரு லாரி இருந்தது. ஒரு சமயம் மூன்று வாரங்களாக மக்களை வேலைக்கு அழைத்துச் செல்ல லாரி வரவில்லை. மக்கள் வேலைக்கு செல்லாததால் பசிக்கொடுமையால் , துவண்டு போய் கிடந்தார்கள். எங்கும் மயான அமைதி தான் நிலவியது.அப்போது வெகு தூரத்தில் லாரி வரும் ஓசை கேட்டது.
புழுவாய் சுருண்டு கிடந்த அனைவரும் துள்ளி எழுந்து லாரியை நோக்கி ஓடினர்.எழக்கூட சக்தி இல்லாமல் மயங்கிக் கிடந்தவர்கள் லாரியின் சத்தத்தை கேட்டு எப்படி துள்ளி எழுந்துஓட முடிந்தது.எப்படி அவர்களுக்கு அந்த ஆற்றல் பிறந்தது.அவர்களுக்கு அந்த ஆற்றலை வழங்கியது.’லாரியின் சப்தம்’.ஆகும்.
சப்தத்தின் ஆற்றலும்,இசையின் சிறப்பும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்..பொதுவாக சப்தம் நமக்குள் வந்து விட எந்த தடையும் நமக்கு இருப்பதில்லை.கண்களுக்கு இமை உள்ளன இரண்டு கண்களையும் மூடி விட்டால் மொத்தக் காட்சிகளும் மறைந்து விடும். வாயை நாம் மூடிக்கொண்டால் எந்த சப்தமும் நம்மிடம் இருந்து வராது.ஆனால் காதுகளை எப்படி மூடுவது ? நாம் தூங்கும் போதும் காதுகள் திறந்தே உள்ளன.
திறன்களில் மிகச் சிறந்த திறன் கேட்கும் திறன்.அது ஏன்?என்றால் காதுகள் எப்போதும் திறந்தே உள்ளன என்று பார்த்தோம். அதில் சந்தேகம் இல்லை.எந்த ஓசையும் நம் அனுமதி பெற்று நமக்குள் வருவதில்லை.ஆனால் நாம் எந்த ஓசைகளை நமக்குள் பதிவு செய்ய வேண்டும் என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.
ஒரு ஊரையே அலற வைக்கும் அளவிற்கு சப்தம் நிறைந்த ஒலிபெருக்கிகள் உள்ள அரங்கத்தில் பலர் மேடையில் பாடிக்கொண்டு இருந்தாலும் ,நிம்மதியாய் எதிரில் சிலர் உறங்கிக்கொண்டு இருப்பது உண்டு.அதற்கு மாறாக ஊரே உறங்கிக்கொண்டு இருக்கும் வேளையில் கூட எங்கோ, எதோ ஒரு சப்தம் கேட்டு எழுந்து வந்து பார்ப்பவர்களும் உண்டு.
முதலில் தூங்கிக்கொண்டு இருந்தவருக்கும், தூக்கத்தில் எழுந்து வந்தவருக்கும் என்ன நிகழ்ந்தது.இவ்வளவு சப்தத்திலும் அவரால் எப்படி தூங்க முடிந்தது.ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அவரால் எப்படி ஒரு ஓசையை கேட்க முடிந்தது.’சப்தம், இசை ‘என்பது மனதோடு சம்பந்தப்பட்ட ஒரு உன்னதமான திறன்.
மனம் ஒரு சப்தத்தை ரசிக்கும் போது அவன் எப்படிபட்ட நிலையில் இருந்தாலும் ,அந்த ஓசைகள் அவனுக்குள் பதிவாகும்.எவ்வளவு குறைந்த ஒலியிலும் அவனை அது ஈர்க்கும்.மாறாக மனம் ஒரு சப்தத்தை ரசிக்காத போது அந்த ஓசை ,எத்தனை உயர்ந்த சப்தமாக எழுந்தாலும் அது அவனை எந்த விதத்திலும் பாதிக்காது.அவன் நன்றாக தூங்கிக்கொண்டு இருப்பான்.
நான் ஏன் ஓசை, சப்தம் என்று அதிகம் குறிப்பிடுகிறேன் என்றால் இசை என்பதை தவிர பொதுவாக எல்லாவற்றிலும் பிறக்கும் சப்தத்திலும் ஆற்றல் உண்டு என்பதை உணர்த்தவே .
பேசிப்பேசியே வாழ்க்கையை வாழ்ந்து விட்டு போனவர்கள் எத்தனையோ பேர். அவர்களுள் எத்தனை பேருக்கு தெரிந்து இருக்கும் ஓசையின் ஆற்றல் அதுவென்று.
சப்தம் என்பது பொதுவான ஒரு சொல், உலகத்தின் அனைத்திற்கும் பொதுவான ஆற்றல்.இசை அசைவுகளிலும் ஓசை பிறக்கும். அதை நாம் கூர்ந்த கேட்டுக்கொண்டு இருப்பது இல்லை.இத்தகைய சப்தம் " இசை இறைச்சல்"ஆகும் .அது இரண்டாகப்பிரிக்கப்படுகிறது .
ரசிக்கும்படியான ஒழுங்கு படுத்தப்பட்ட ஓசை இசை என்றும், சகிக்க முடியாத ஒழுங்கற்ற ஓசை இறைச்சல் என்றும் பிரிக்கப்படுகிறது.இந்த இசை,
இறைச்சல் என்பது மனிதர்களின் குணத்தைப் பொருத்தும், கேட்பவரின் மனத்தைப் பொருத்தும் மாறுபடும். ஒரு பூனை எழுப்பும் குரலைக் கேட்டு முகம் சுளிப்பவனும் உண்டு.பயப்படுபவனும் உண்டு.ரசிப்பவனும் உண்டு. ஆனால் சப்தம் ஒன்றுதான்.
இதற்கு நாம் பல்வேறு உதாரணங்களை காணமுடியும்.நூறு ஆண்டுகளுக்கு முன் இருந்த இசையை இன்று யாரும் விரும்புவதில்லை.அதைப் போல் இன்றைய தலைமுறையின் இசையை இன்று எத்தனை பேர் ரசிக்கிறார்கள் ? என கணக்கிட முடிவதில்லை. அதனால் தான் இசை ,இறைச்சல் என்பது அவரவர் மனங்களைப் பொறுத்து மாறுபடுகிறது.