தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் பதின்மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதுகிறார்கள்.இதில் இப்போது எல்லாம் எண்பது சதவீதத்துக்கும் அதிகமாக மாணவர்கள் வெற்றி இலக்கை எட்டிப்பிடிக்கிறார்கள்.அதிலும் சில குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் குறிப்பிட்ட இலக்கை நோக்கி நகரமுடிகிறது.
மற்றமாணவர்களின் நிலை என்ன ? கேள்விக்குறியே மிஞ்சுகிறது.
படிக்கும் பள்ளி பருவ காலத்தில் மாணவர்கள் தங்கள் மனதில் உறுதி எடுத்துக்கொள்ளவேண்டும். சிலர் பரீட்சை எழுதும் காலத்திலேயும், முடிவுகள் வரும் நேரங்களிலேயும் தவறான முடிவுகளை எடுத்து விடுகிறார்கள்.அதற்கு காரணம் அவர்கள் மனதில் உறுதியான நிலைப்பாடு இல்லாததே.
படித்தோம் மனனம் செய்தோம் ,மார்க்கு எடுத்தோம் என்ற நிலையில் இருந்து மாணவர்கள் மாறுபட்டு கல்வியை அறிவுப் பூர்வமாக ,புதிய தகவல்களை தெரிந்து கொள்ளும் வகையில் கற்றுத் தேற வேண்டும். மாணவர்கள் இப்போது எல்லாம் போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார் படுத்திக்கொள்ள முன் வருவதில்லை.
பல பள்ளிகளில் தங்கள் பள்ளியின் அதிக சதவீதம் முதலிடம் என்ற நிலையில் தான் மாணவர்களை ஒரு கருவியாக பயன்படுத்தி கொள்கிறார்கள்.ஒரு காலத்தில் மாணவர்கள் எண்பது,தொண்ணூறு சதவீதம் மார்க்கு எடுப்பது பெரிய சாதனையாக கருதப்பட்டது. ஆனால் இப்போது எல்லாம் நூற்றுக்கு நூறு சதவீதம் என்பது சாதாரணமாகி விட்டது. இது ஆரோக்கியமான வளர்ச்சியா என்பது கேள்விக்குறி தான் ?
பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுக்கு இப்போது பல தனியார் பள்ளிகளில் இரண்டாண்டு பாடமாக்கிவிட்டார்கள், ஒன்பதாம் வகுப்பிலே பத்தாம் வகுப்பு பாடங்களையும், பதினொன்றாம் வகுப்பில் பன்னிரெண்டாம் வகு-ப்பு பாடங்களையும் கற்பிக்கும் நிலை ஏற்பட்டு விட்டது.இதுவும் ஆரோக்கியமான நிலையா என்பதை ஆராயவேண்டும்.
இப்போது அறிவுபூர்வமான (மனப்பாடம் தவிர )சிந்தனையை வளர்க்கிற கேள்விகளும் கேட்கப்படுவதில்லை, மானவர்கள அதற்காக தங்களை தயார் செய்து கொள்வதும் இல்லை, இது ஆசிரியர்கள் குற்றமா ?மாணவர்கள் குற்றமா என்பதை யோசிக்க வேண்டும்.
இந்தியாவில் நடைபெறும் போது தேர்வுகளில் கூட தமிழக மாணவர்கள் மிக குறைவாகவே கலந்து கொள்கிறார்கள்.அதிலும் குறைவாக தேர்வு பெறுகிறார்கள்.அதனால் உயர் படிப்பு, ஆராய்ச்சி, போன்ற துறைகளில் அவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது வருந்ததக்கது.
தற்போது பொது நுழைவுத்தேர்வுகளை , சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் மட்டுமே தைரியமாக எதிர் கொள்ள முடிகிறது..
திறமையானவர்கள் வரவேண்டும் என்றால் அவர்களுக்குள் போட்டி வேண்டும். அது படிப்பு என்றாலும், விளையாட்டு என்றாலும், எந்த நிலையில் வேலையாக இருந்தாலும் கூட போட்டி இருந்தால் தான் வேகமும், விறுவிறுப்பும், ஏற்படும். அதற்கெல்லாம் மாணவர்களை பள்ளிகள் தயார் படுத்தும் நிலையை பள்ளிகள் உருவாக்கவேண்டும்.
முதல் மார்க்கு எடுத்தால் போதும் என்ற நிலையில் மட்டும் மாணவர்கள் உருவானால் அவர்களுக்கு சுய சிந்தனைகள் ஏற்பட வாய்ப்பு குறைவு. எதைக்கண்டும் பயம் கொள்ளும் நிலையே ஏற்படும். ஏன் என்றால் படித்த பாடத்தில் இருந்து கேள்விகேட்டால் மட்டும் எழுதத் தெரியும் மாணவருக்கு புதிதாக ஒரு கேள்வியை கேட்டால் எப்படி பதில் எழுதமுடியும்.
அதனால் தான் அகில இந்திய தேர்வுகளை கண்டு பயம் கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது.. உயர உயர பறக்கவேண்டும் என்ற நிலை வரும் போது அதற்கான கடுமையான முயற்சிகள் இருந்தால் தான் வெற்றி பெற முடியும்.
முக்கியமாக மாணவர்கள் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். மார்க்கு குறைந்துவிடும், தேர்வு நன்றாக எழுதவில்லை,கேலி பேச்சு போன்றவற்றுக்கு எல்லாம் பயந்து தவறான முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவேண்டும். இதற்கு காரணம் தன்னம்பிக்கை குறைவே.
எனவே பள்ளிக்கூடங்களில் பாடம் தவிர மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ,எதையும் எதிர்கொள்ளும் மனத்திடம் ,போராடும் குணம் ,புதிதாக அறிந்து கொள்ளும் ஆர்வத்தை வளர்க்கும் காலமாக இருக்க வேண்டும்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் வெறும் பயனற்ற பொழுதுபோக்கு நிறைந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கும் பழக்கத்தை தவிர்த்து, நூலகங்களுக்கு சென்று தேவையான தகவல்களை குறிப்பெடுத்து பழகவேண்டும்.
நுழைவுத் தேர்வு என்பது மாணவர்களின் திறமைக்கு ஒரு சவாலான முறை.அதை வேண்டாம் என்று மாணவர்கள் சொல்லும் நிலையை மாற்றி எதையும் எதிர்கொண்டு வெற்றிபெற முடியும் என்ற உணர்வை அவர்களுக்கு வளரும்படி செய்ய வேண்டும்.இந்த தமிழ்ச் சமுதாயம் உயர இதை செய்யவேண்டும்.
எங்கு வளர்ந்தாலும், எந்த சூழ்நிலையில் வாழ்ந்தாலும் எங்கு படித்தாலும் மாணவர்களை ஒரே இனமாகத்தான் கருதவேண்டும். ஆயிரம் பேர் சேர்ந்து மராத்தான் ஓட்டம் ஓடும்போது ஒருவர் முதலிடத்திலும் குறைந்தது நூறு பேராவது வெற்றி இலக்கின் தூரத்தையும் குறிப்பிட்ட நேரத்திலும் அடைந்து விடுகிறார்கள்..அதற்காக கடைசியில் வருகிறவருக்கு பரிசு கொடுக்கவேண்டும் என்று கேட்க முடியுமா?
இதைத்தான் செய்ய வேண்டும்,இப்படித்தான் செய்யவேண்டும், என்ற எண்ணத்தை ஏற்படுத்திக் கொண்டேமானால் நாம் எதிலும் எளிதாக வெற்றி பெற முடியும். மாணவர்கள் வாழ்க்கையில் வளம் பெறமுடியும்.