அதிகாலை நேரம் சரியாக விடிந்தும் விடியாத பொழுது.ஜில் என்று குளிர்ந்த காற்று .காலை 6.05 மணி இன்னும் 10 நிமிடங்கள் தான் இருக்கிறது, ரெயில்கிளம்புவதற்கு.. 

வேகவேகமாக பஸ்சில் இருந்து இறங்கிய ரமேஷ் ,கோவை எக்ஸ்பிரசை பிடிக்க ஓடி வந்தான். 

பிளாட்பார்ம் 2 ஆ…. இ ல்லை !!! 3 ஆ… என்பதில் குழப்பம்.

படிக்கட்டுகளின் அருகில் நின்று கொண்டிருந்த ஊழியர் ஒருவரிடம் ‘சார் , சென்னை டிரெயின் எந்த பிளாட்பார்ம்’ என கேட்க, N’3 ம் நம்பர்’ என தகவல் வந்தது தான் பாக்கி. 

படிக்கட்டுகளில் இரண்டுகால் பாய்ச்சலில் ஓடினான். 

டிரையினை பார்த்தாச்சு.

அப்பாடா என்ற ஒரு பெரு மூச்சு. 

எந்த பெட்டியில் ஏறினாலும் நம் பெட்டிக்கு நடந்து சென்று விடலாம் என்று எண்ணிக்கொண்டான்.

ஏனென்றால்…. 



அப்போதே மணி 6.15யை தொட்டு விட்டது.

ரெயிலில் இடம் பிடிக்க நடை பாதையில் பயணிகள் முண்டியடித்து கொண்டு ஓடிக்கொண்டிருந்தார்கள்.

ரெயிலில் ஏறுபவர்களை விட வழியனுப்ப வந்தவர்கள் வழிமறித்தல் மே அதிகம் இருந்தது. 

ஒருவழியாக ரெயிலில் ஏறிய, 

ரமேஷ் தனது இடத்தில் சென்று அமர்ந்தான்.

பெட்டியை மேலே வைத்து விட்டு தன்னுடன் சேர்ந்து பயணம் செய்ய உள்ளவர்கள் யாரென ஒரு முறை சுற்றிப் பார்த்தான்.

அதே நேரம் நீண்ட விசில் சத்தத்துடன் ரெயில் மெல்ல கிளம்பியது. 

அருகில் ஒருவர் வாங்கி வைத்திருந்த செய்தித்தாளை எடுத்து புரட்டினான். 

காலை பனிக்காற்றில் ரமேஷுக்கு தூக்கம் சொக்கி வந்தது . ஆனால் தூக்கத்தில் கூட ஒவ்வொரு முறையும் இன்டர்வியூக்கு சென்று அதில் வெற்றி கிடைக்காததால் ஏற்படும் பய உணர்வு அவனுக்கு இம்சையான வலியை கொடுத்தது.

இந்த பயணத்திலாவது திருப்பம் கிடைக்குமா? என கண்ணை மூடிய நிலையில் யோசனை ஓடியது. 

அப்போது ரெயிலில் வாசனை, ஜவ்வாது என கண் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க நபர் பொருட்களை விற்று கொண்டு நகர்ந்து கொண்டிருந்தார்.

‘இவரிடம் யார் பொருட்களை வாங்க போகிறார் ‘என்றவாறு அருகில் இருந்தவர் முகம்சுளித்தார்.

அப்போது மணி 9. டிரையினில் இருந்தவர்கள் சிலர் தூங்கி கொண்டும்,சிலர் இடம் கிடைக்காமல் நின்று கொண்டும் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். 

ரெயிலின் வேகத்தை விட கடிகாரத்தில் மணி வேகமாக ஓடி கொண்டே இருந்தது. 

இதை எதையும் பார்க்க முடியாத கண் தெரியாத பலர் சுறுசுறுப்பாக ஓடும் ரயிலில் அவர்கள் பல கிலோ மீட்டர் நடந்தே , நம்பிக்கையுடன் பயணம் செய்து கொண்டே இருந்தனர் .

அவர்கள் வாழ்க்கை போராட்டத்திற்காக. 

கண் தெரியாமல் இருந்தாலும் நம்பிக்கையுடன் போராடிக்கொண்டிருப்பவர்களை பார்க்கையில் ரமேசுக்கு மனது புது உத்வேகத்தை கொடுத்தது.

ரமேசுக்கு இந்த பயணம் ஒரு புதிய பயணமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

புதிய நம்பிக்கையுடன் அவனது ரெயில் பயணம் முன்னேறிக்கொண்டிருந்தது வெற்றியின் இலக்கை நோக்கி.

Share.

Leave A Reply