தமிழ் நாட்டில் கடந்தமே மாதம் 2016 இல் நடந்த பொதுத் தேர்தல் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பல புதிய பரிமாணங்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்றால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
பொதுவாக ஒன்றைத் தெரிந்து கொள்ள முடியும் .வெற்றிபெற்றுள்ள அ.தி.மு. க.வும், தி.மு.க.வும் சம பலம்மிகுந்தவர்களாகத் தான் இருக்கிறார்கள். பல சிறிய கட்சித் தலைவர்கள் தங்கள் நிலை என்ன என்பதை உணர்ந்து கொண்டுள்ளார்கள்.
ஒவ்வொரு தேர்தலிளும் பல சிறிய கட்சிகள் பெரிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன், பெரிய கட்சிகள் தங்களது ஆதரவினால் தான் வெற்றிபெற்றன என்ற மாயத்தோற்றம் ஏற்படும்படி பேசியும், அதன் பின்னர் தாங்கள் ஆதரவு கொடுக்கவில்லை என்றால் அவர்கள் வென்றிருக்க முடியுமா ?என்ற கேள்வியையும் எழுப்பி வந்தார்கள் .
வெற்றி பெற வைத்த பெரிய கட்சியை துச்சமென நினைத்ததும், அவர்களை அலட்சியப்படுத்தியதும் மக்களுக்கு என்ன காரியங்கள் செய்யவேண்டுமோ அதை செய்யாமல்இருந்ததும் இன்றைய தோல்விக்கு ஒரு ஆணித்தரமான காரணம் ஆகும்.
திரைப்படங்களில் வேகமும் விவேகமும்,வெற்றியும் காட்டிய விஜயகாந்த்,,சில படங்களின் வெற்றி தோல்விகளில் பல பாடங்களை அவர் கற்றிருக்க வேண்டும்.ஆனால் அவர் கற்கவில்லை என்றே தெரிகிறது.
இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு அரசியல் களத்தில் கவனமாக கால் பதித்திருக்க வேண்டும்,ஆனால் அவர் செய்யவில்லை அரசியலில்.குதித்த நேரமும், இலக்கும் சரியாக இருந்தது.ஆனால் வசனங்கள் எடுபடவில்லை. காட்சி அமைப்பும் சரியாக அமையவில்லை. தொடக்கம் மிகவும் அமர்க்களமாக இருந்தது.ஆனால் தொடர்ச்சி சரியில்லை,இயக்கமும் தேவையில்லாத சேர்க்கையும் ஒன்றுமில்லாமல் செய்துவிட்டது.
வளர்ச்சியில் வேகம் காட்டிய விஜயகாந்த் கட்சி இப்போது வீழ்ச்சியிலும் அதை விட வேகத்தை காட்டியது, வருங்காலத்தில் கண்களை நன்றாக திறக்க வைக்கவே.
கம்யூனிஸ்டு கட்சிகள் எப்போதும் தமிழ்நாட்டில் தனித்து நின்று வெற்றி பெற்றதில்லை.ஏதாவது பெரிய கட்சியுடன் இணைந்தே வெற்றியை பெற்று வந்திருக்கின்றன. கம்யூனிஸ்டு கட்சிகள் எதையும் போராடி பெற்றுவிடமுடியும் என்று எண்ணுபவர்கள். பாட்டாளி மக்களுக்கு துணையாகஉள்ள அவர்களை பற்றி அவர்கள் அல்லாதவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியம் அல்லவா?
மேற்குவங்காளத்தில் பல்லாண்டுகளாக கோலோச்சிய அவர்கள் சமீபகாலங்களில் அதையும் கைநழுவ விட்டுவிட்டார்கள், கேரளாவிலும் தற்சமயம் அதே நிலை தான் ஏற்பட்டுள்ளது.
அதே போல அய்யா ராமதாஸ் அவர்களின் பாட்டாளி மக்கள் கட்சியும் கடந்த பல தேர்தல்களில் வெற்றிபெற்ற கட்சிகளின் கரங்களை பிடித்தபடி வந்தது. அதன் பலனை மாநிலத்திலும் மத்தியிலும் அறுவடை செய்துகொண்டது. அந்த அறுவடையின் போது உதிர்ந்த நெல்மணிகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளமுயன்றது. அதனால் தனியாக நின்று அவர்கள் எழுப்பிய ,உரத்த குரல் ஒருவர் காதிலும் விழவில்லை.
அதேபோல் மிகச் சிறந்த பேச்சாற்றல் மிக்க வைக்கோ, தனக்கென்று ஒரு கட்சி அதனை தாங்கிப் பிடிக்கும் தூணாக விளங்கிவரும் தொல்.திருமாவளவன், காங்கிரசில் இருந்து என்ன காரணத்துக்காக விலகினரோ அதை தமது தொண்டர்களே புரிந்து கொள்ளமுடியாத நிலையில் தவிக்கும் தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்,எல்லாம் நானே என்ற நிலையில் டாக்டர் கிருஷ்ணசாமி , இன்னும் தமக்கு தாமே பெயர் சூட்டிக்கொண்ட புதிய கட்சித் தலைவர்கள் அனைவரும் இந்த தேர்தல் ஆரவாரத்தில் அடங்கிப் போய் விட்டார்கள்.
தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு அங்கீகாரம் கிடைத்தது என்றால் அது எம்.ஜி.ஆர் அவர்களால்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதே போல் இப்போது தோல்வியை தழுவியுள்ள பல சிறு கட்சித் தலைவர்களுக்கு இப்போதுள்ள அந்தஸ்தும் மரியாதையும் உள்ளது என்றால் அது ஒன்று அ.தி.மு.க. அல்லது தி.மு. க வினால் மட்டும் தான் கிடைத்தது என்பதையும் யாரும் மறுக்க முடியாது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. தனியாக களத்தில் நின்றது. அதற்கு சில சிறு அமைப்புகள் தங்கள் ஆதரவை தெரிவித்துக் கொண்டன. ஆனால் வேறு சில சிறு கட்சிகள் தனியாக களத்தில் இறங்கியது.தி.மு. க. வுடன் .காங்கிரஸ் கட்சி கைகோர்த்துக் கொண்டது.
தேர்தலில் அ.தி.மு. க.வின் ஜெயலலிதா அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்று முழுமூச்சுடன் அனைவரும் ஒன்று சேர்ந்து நின்றார்கள்.இத்தனை அணியையும் ஒரே ஆளாக ஜெயலலிதா நின்று வென்றுள்ளார்கள்.அதற்கு காரணம் தளராத தன்னம்பிக்கையும்,எதையும் சாதிக்க வேண்டும் என்ற அவர்களின் மனோ தைரியமும் தான்.
ஒன்றாக இருந்தவர்கள் எல்லாம் ஒன்றைத்தான் சொன்னார்கள். ஜெயலலிதா செய்வது எதுவும் சரியில்லை அவரை தேர்தலில் தேற்கடிக்க வேண்டும் என்று, அனைவருக்கும் இந்த ஒரே கோரிக்கையை தவிர வேறு ஒன்றிலும் ஒற்றுமையில்லை.அதுவும் தோல்விக்கு ஒரு காரணம்.
பொதுவாக வாக்காளர்களை ஏமாளிகள் என்று வேட்பாளர்கள் நினைப்பது எவ்வளவு பெரியதவறு என்பது தேர்தல் முடிவு சுட்டிக்காட்டியுள்ளது.அனைத்து சிறிய கட்சி தலைவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் அவரவர்களுக்கு பாதுகாப்பான தொகுதிகளில் நின்று தான் தோல்வியை தழுவி உள்ளனர்.
ஒரு தொகுதி என்றால் அனைத்து பிரிவினரும் தான் வசிப்பார்கள். அங்கே நம்ம ஜாதிக்காரன், நம்ம இனத்தவன் இருக்கிறானா அவர்கள் அனைவரும் நமக்கு ஓட்டளிப்பார்களா என்று பார்த்து பாதுகாப்பான தொகுதிகள் என்று கருதிய இடங்களில் நின்று தான் தோல்வியை தழுவி உள்ளனர்.
ஜாதி,மதம் என்று பிரித்து பார்த்து மொத்த வாக்காளர்களிடம் போய் ஓட்டு கேட்டால் மற்றவர்கள் எப்படி அவர்களை ஆதரிப்பார்கள். உங்கள் இனத்துக்கு மட்டும் நீங்கள் பாதுகாப்பு அளிப்பதாக கூறினால் மற்றவர்கள் உங்களுக்கு எப்படி தங்கள் ஆதரவை தெரிவிப்பார்கள் ?தோல்விக்கு இது ஒரு முக்கிய காரணம் ஆகும்.தேர்தல் தோல்வி தமிழகத்தின் பல தலைவர்களை தளர்ந்து போகச் செய்துவிட்டது.
அ.தி.மு.க., தி.மு.க. போன்ற பெரிய கட்சிகளில் ஜாதி ,இனம் என்று தேர்ந்து எடுத்து நின்றாலும், மற்றவர்களுக்கும் அவர்கள் தங்கள் ஆதரவை செயல்களை காட்டுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுவிடும். ஏனென்றால் வெற்றிபெறும் பெரியகட்சிகளின் செயல்பாடுகளை அவர்கள் சார்ந்த கட்சித் தலைவர்கள் (ஜெயலலிதா அவர்களோ, கருணாநிதி அவர்களோ) கடிவாளம் போன்று கையில் வைத்து இருப்பதால் தான்.
எனவே தவறு செய்யும் பிரதிநிதிகளை அவர்கள் கண்டித்து விடுவார்கள் என்ற பரந்த எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டு விடுவதால் அவர்களை அனைவரும் சேர்ந்து வெற்றி பெற வைத்துள்ளார்கள்.
மற்ற சிறுகட்சித் தலைவர்களிடம் அந்த கட்டுப்பாடு இல்லை. ஒரேதலைவன், ஒரே தொண்டன் என்பவர்களுக்கு தட்டிக்கேட்க ஆளில்லை என்ற நிலை உள்ளதால் அவர்களை அவர்கள் சார்ந்தவர்கள் தவிர யாரும் நம்புவதற்கு தயார் நிலையில் இல்லை.
இன்னும் எத்தனை தேர்தல்கள் வந்தாலும் தமிழ்நாட்டில் இந்த நிலை தான் நீடிக்கும். இதை தோல்வியடைந்த தலைவர்கள் உணரவேண்டும். கட்சித் தலைவர்கள் என்றால் அவர்கள் எல்லோரையும் அரவணைத்து செல்பவர்களாக இருக்க வேண்டும்.ஒருசாரர் இல்லாமல் எல்லோருக்கும் நன்மை தரும் செயல்களை செய்ய வேண்டும்.
இவர் நம்மை காப்பார்,நமக்கு நன்மைகள் செய்வார் என்ற இந்த எண்ணம் மக்கள் மனதில் உருவாக வேண்டும் அப்போது அரசியலில் மாற்றங்கள் உருவாகும். ஆனால் இப்போது உருவாகும் தலைவர்கள் அனைவரும் ஒரு சாதியையோ, மதத்தையோ, முன்வைத்து உருவாகுகிறார்கள். குறிப்பிட்ட வர்களுக்கு மட்டுமே பயன் கிடைக்கச் செய்பவர்களாக காட்சியளிக்கிறார்கள்.
எனவே அவர்கள் தலைவர்களாக ,ஆளுபவர்களாக இந்த நாட்டிற்கு வந்தால் மற்றவர்களின் கதி என்ன என்பதை சிந்திக்க வேண்டாமா ? அவர்கள் சிந்திக்கிறார்களோ இல்லையே வாக்காளர்கள்(மக்கள்) சிந்திக்கிறார்கள் அதனால் இந்த தோல்வியை பரிசாக கொடுக்கிறார்கள்.அதனால் தான் பல தலைவர்கள் முளையிலே கிள்ளிஏறியப்பட்டுவிடுகிறார்கள்.
‘எல்லோரும் ஓர் இனம் எல்லோரும் ஓர் குலம்’ என்ற பழமொழிக்கேற்ப
தமிழ்நாட்டு மக்கள் நன்மைபெறவும். நாடுமுன்னேறவும் சுயநலமில்லாத தலைவர்கள் கண்ணில் பட்டு, கருத்தில் பதியும் போது தான் மாற்றங்களும் தானாகவே ஏற்படும். அந்நாளுக்காக காத்திருப்போம்.