தமிழகத்தில் புதிய ஆட்சி மலர்ந்தது
————————————————
பரபரப்பும்,சலசலப்பும் நிலவிய தமிழக சட்டசபை தேர்தல் முடிந்தது . ஆட்சிக்கட்டிலில் அமர்வதற்கான பெரும்பான்மை பெற்று மீண்டும் தமிழ்நாட்டில் ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. வை ஆட்சி செய்ய மக்கள் அனுமதி அளித்து விட்டனர். கடந்த காலங்களில் ஜெயலலிதா அவர்கள் மக்கள் எண்ணங்களில் இழையோடிய உணர்வுகளுக்கு மதிப்பளித்ததற்காகவும் ,பண்பட்ட வாழ்க்கைக்கு மலர் தூவியதால் கிடைத்த வெற்றியாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.
அதோடு எப்போதும் இல்லாத அளவுக்கு மிகச்சிறந்த வலிமை மிகுந்த எதிர்க்கட்சியாக செயல்படும்படி தி.மு. கழகத்துக்கு நற்சான்றிதழ் வழங்கி மக்கள் வாக்களித்துள்ளனர். எதிர்க்கட்சி என்பது எதிரிகட்சியாக இல்லாமல் இணைந்து செயல்படும் கட்சியாக இருந்து மக்களுக்கு தன் பணிகளை செவ்வனே செய்ய வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. எதிர்க் கட்சி என்பது மக்களுக்கான பணியை செவ்வனே செய்யாமல்பொறுப்புகளை த ட்டிக்கழிக்காமல் நல்ல செயல்களுக்கு ஆக்கமும்,தவறான செயல்களுக்கு வலிமையான முட்டுக்கட்டையாகவும் இருந்து செயல்படவேண்டும் என்றே மக்கள் எண்ணுகிறார்கள். அதை இரு கட்சிகளும் செவ்வனே செய்ய வேண்டும்.
தமிழக முதல்வராக ஜெயலலிதா அவர்கள் ஆறாவது முறையாக ஆட்சியை ஏற்று இருக்கிறார்கள்.அவர்களிடம் முன்பை விட இன்னும் அதிகமான பயன்களை இந்த மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.
இந்த எதிர்பார்ப்புக்களை அவர் நிறைவேற்ற வேண்டிய கடமைக்குத் தள்ளப்பட்டு உள்ளார். எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த வாழ்க்கை பயணத்தில் அவர் நிறைய பாடங்களை கற்றுக்கொண்டு உள்ளார்.பெரும்பாலான தமிழக குடும்பங்களில் ஒருவராக அவர் அங்கீகரிக்கப்பட்டு உள்ளார்.

மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் பதவி ஏற்புவிழா நடந்துள்ளதும், அதைத் தொடர்ந்து பதவி ஏற்றவுடன் கோட்டைக்கு சென்ற ஜெயலலிதா அவர்கள் , முதல் கடமையாக தேர்தல் அறிக்கையில் கூறிய முக்கிய வாக்குறுதிகளுக்கு அரசு உத்தரவுகளை வெளியிட்டுள்ளார்.கூட்டுறவு வங்கிகளிடமிருந்து சிறு குறு விவசாயிகளால் பெறப்பட்ட பயிர்க்கடன், நடுத்தரகால கடன், நீண்டகால கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்துள்ளார்.
அனைத்து குடும்பத்தினருக்கும் 100 யூனிட் மின்சாரம் கட்டணம் எதுவும் இல்லாமல் வீடுகளுக்கு வழங்கவும், அனைத்து திருமண நிதிஉதவி திட்டங்களின் கீழ் வழங்கப்படும் நிதிஉதவியுடன், திருமாங்கல்யத்துக்காக வழங்கப்படும் தங்கத்தை 4 கிராமிலிருந்து , 8 கிராமாக உயர்த்தி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் என்றும், விசைத்தறிக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் என்றும் வழங்க உத்தரவிட்டுள்ளார். 5–வது உத்தரவாக பூரண மதுவிலக்கிற்கான முதல் அடியை எடுத்து வைத்துள்ளார் .இந்த உத்தரவு கையெழுத்தான இன்றுமுதல்(23-5-2016) டாஸ்மாக் கடைகள், பார்கள் திறக்கும் நேரத்தை குறைத்தும், 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் உத்தரவிட்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மிகுந்த கவனத்துடனும்,ஏழை,எளிய மக்கள் வாழ்க்கை நிலைகளை கருத்தில் கொண்டும் தனது ஆட்சி தொடக்கத்தை தொடங்கி வைத்துள்ளார்கள்.இந்த ஆரம்ப உத்தரவுகளை பெரும்பாலானவர்கள் வரவேற்கும் விதமாகத்தான் இருக்கும் .அதில் சந்தேகமில்லை.
ஆனால் சில காரியங்களை செய்யும் போது சில பாதககங்களும் ஏற்படும்.அவ்வாறு ஏற்படும் பாதகங்களை மற்றவர்கள் வியக்கும்படி களைய வேண்டும். ஏழை -எளிய மக்கள் என்பவர்கள் தங்களுக்கு உறுதுணையாக இருந்தவர்களும் ,தங்களைப் புறக்கணித்தவர்களும் இருக்கலாம்.அவர்கள் அனைவரையும் சம நோக்கோடு தங்கள் அரசு வழங்கும் நல்ல திட்டங்கள் அனைவருக்கும் சென்று சேரும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
நாம் எதையும் கொண்டு வரவில்லை ,எதையும் கொண்டு போகப்போவதும் இல்லை .இங்கிருந்து தான் அனைத்தையும் எடுத்தோம் இங்கே தான் அதை விட்டுவிட்டு செல்லப்போகிறோம்.எனவே தங்கள் பெயர் சொல்லும்படி என்றும் நிலையான செயல்கள் மூலம் தங்கள் பெயரை நிலை நாட்டி சரித்திரம் பேசும்,சாதனை பெண்ணாகமக்கள் மனதில் என்றும் நிலை பெற வேண்டும்.
தமிழக மக்கள் அனைவரும் நன்கு வாழ சொன்னதையும், சொல்லாததையும் நீங்கள் செய்து முடிப்பீர்கள் என்று நினைக்கிறார்கள். அவர்கள் நினைப்பு உயிர் பெறட்டும்.வாழ்வு வளம் பெறட்டும்.தங்கள் பணிகள் சிறப்புப்பெற ”ஸ்ரீ ஐசுவரியம் ‘இதழ் தனது வாழ்த்தையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.
=======================================