தமிழர்களின் மகிழ்ச்சி கலந்த  வீர விளையாட்டாக ஆண்டாண்டு காலமாக  கொண்டாடப்பட்டு வந்த விளையாட்டு தான் மஞ்சு விரட்டு என்கிற ஜல்லிக்கட்டு.பல நூற்றாண்டு காலமாக இந்த விளையாட்டு குறிப்பாக மதுரை மாவட்டம் அதைச்சார்ந்த தற்போது சிவகங்கை,புதுக்கோட்டை,தேனி மாவட்டங்களில் பிரபலம்.



பண்டைய காலங்களில் இருந்து பொங்கல் பண்டிகையின் போதும்,சில இடங்களில் கோவில் திருவிழாக்களிலும்  மஞ்சு விரட்டு விழா நடத்துவது வழக்கம். இந்த விழாவில் காளைகளை அடக்கி வெற்றி பெரும் வீரர்களுக்குத் தான் பெண் கொடுப்பவர்களும் உண்டு. இதற்காக வீர காளைகள் வளர்க்கப்பட்டு வந்தன.

பெரும்பாலும் இந்த காளைகள் ஒரு கவுரவத்துக்காக வளர்க்கப்பட்டு ,குறிப்பிட்ட அந்த மஞ்சு விரட்டு விழாவில் மட்டுமே பயன்படுத்தப்படும்.இந்த காளை மாடுகளுக்கு ஆண்டு முழுக்க ராஜ உபகாரம் தான். இதில் கிராமம் முழுவதும் மஞ்சு விரட்டு விழா நடத்துவார்கள்.சமீப காலமாக அதை ஜல்லிக்கட்டு என்று அழைக்கிறார்கள்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு,அவனியாபுரம்  போன்ற இடங்களில் நடந்த  இந்த ஜல்லிக்கட்டு விழா அனைவரையும் கவர்ந்தது. விழாவில் காளைகளை அடக்கியவர்கள் பலவிதமான பரிசு பொருட்களை அள்ளிக்கொண்டு சென்ற காட்சிகள் எல்லாம் நேரில் பார்த்து மகிழ்ந்தோம்.ஆனால் இப்போது அவை கனவாகி போய்விட்டது.
இந்த ஜல்லிக்கட்டு விழாவுக்கு விலங்குகள் நல  ஆர்வலர்களின்  பல அமைப்புகள்  எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டில் வழக்குகள் தொடர்ந்தன. இதன் காரணமாக 2006 ஆம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டு கிளை ஜல்லிக்கட்டு விழாவுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
அதன் பின்னர் தமிழக அரசு,மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பலர்  ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி பல விதமான வழக்குகள் ,பதில் வழக்குகள் என்று நடந்து வருகின்றன. கோர்ட்டில் தடை விதிப்பதும் மீண்டும் வழக்கு நடப்பதுமாக உள்ளது..
இதற்கிடையில்  பல வழிகாட்டுதல் விதிமுறைகளை பின்பற்றி அதிகாரிகள் மேற்பார்வையில் ஜல்லிக்கட்டு விழாவை நடத்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2013 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இது குறுகிய நாட்களில் விலங்குகள் நலவாரியம் மீண்டும் தடை விதிக்க கோரிய வழக்கில் 2014 ஆம் ஆண்டு நிரந்தர தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவால் இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மிகவும்  வருத்தம் அடைந்தனர்.மீண்டும் தாங்கள் இந்த ஜல்லிக்கட்டு விழாவை நடத்த அனுமதிக்கும்படி கோரிக்கைகள் வைத்தனர்.இந்த நிலையில்  கடந்த 8- ந் தேதி தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி அளித்து மத்திய அரசு அறிவித்தது. ஆனால் இந்த மகிழ்ச்சி அதிக மணி நேரம் கூட நீடிக்கவில்லை.இப்போது இந்த பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு 
விழா நடக்குமா ? என்பது அனைவர் மனதில் எழுந்துள்ள மிகப்பெரிய கேள்விக்குறி  ஆகிவிட்டது.
ஒவ்வொரு மாநிலங்களிலும் பாரம்பரிய விழாக்கள் என்பது அவரவர் முன்னோர்கள் வகுத்து கொடுத்தபடி நடத்தப்படுவது வழக்கம். மிருகங்களை வதைப்பது,கொடுமைப்படுத்துவது என்பது எங்காவது ஓரிடத்தில் நடக்கலாம். ஆனால் ஒட்டுமொத்த மக்களும் போற்றி வணங்குகிற விலங்குகளை வதைப்பது  என்பது மிக அரிது.
கண்ணுக்கு தெரியாமல்  விலங்குகளை துன்பப்படுத்தும்  பல்வேறு சம்பவங்கள் நாட்டில் எங்காவது ஓரிடத்தில்  தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.அதற்காக அவற்றை விட்டு விலகி மனிதர்கள் வாழ முடிவதில்லை.இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு ஒரு நல்ல தீர்வை ஏற்படுத்தி மக்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.
Share.

Leave A Reply