ஒரு ஊரில் மாரியப்பன் என்கிற விவசாயி இருந்தான்.அவனுக்கு என்று இருந்த வயலில் நெல் பயிர் செய்து அதில் இருந்து வரும் வருமானத்தில் தன மகன் கந்தனைப் படிக்க வைத்துக் கொண்டு இருந்தான்.


தந்தையின் கடின உழைப்பையும், அந்த ஏழ்மையிலும் தன்னையும் படிக்க வைக்கும் தந்தைக்கு நற்பெயர் வாங்கித் தர வேண்டும் என்ற உறுதியோடு படித்து வந்தான் கந்தன். உறுதியும், நம்பிக்கையும் கந்தனிடம் இருந்ததால் முதல் மாணவனாகவே வந்தான். அவன் முதல் மாணவனாக வருவது அந்த ஊர் பண்ணையார் மகன் மோகனுக்குப் பிடிக்கவில்லை.


ஊரில் உள்ள நிலங்களில் பாதிக்கும் மேல் தங்களுக்குச் சொந்தம் என்ற கர்வமும், தான் பண்ணையார் மகன் என்ற ஆணவமும் அவனைப் பொறாமை கொள்ளச் செய்தது.தன்னைச் சுற்றி இருந்த சால்ரா மாணவர்கள் அவனுக்குத் தூபம் போட்டு அவனை மற்றவர்களிடம் வெறுப்பு ஏற்படச் செய்தார்கள்.படிக்க ஊக்கப்படுத்தவில்லை


பண்ணையார் கட்டிய பள்ளிக்கூடம் என்பதால் எந்த வகுப்பிலும் அவன் பெயில் ஆகவில்லை.பள்ளிக் கல்வி முடிந்தது .பக்கத்து ஊரில் உள்ள கல்லூரியில் மோகன் சேர்ந்தான் அதே கல்லூரியில் கந்தனும் சேர்ந்தான். பேராசிரியர் நடத்தும் பாடங்கள் புரியாமல் மோகன் மிகவும் கஷ்டப்பட்டான் .அவன் பின்னால் சுற்றும் மாணவர்கள் சரியாக படிக்காததால் தேர்வில் தோல்வி அடைந்திருந்தனர்.மோகனுக்கு தனிமையும்,புதிய சூழ்நிலையும் அவனுக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது.


அந்த சமயம் அங்கு வந்த கந்தன் மோகனை நட்புடன் அணுகினான், தயக்க்கத்துடன்.’கந்தா என்ற மோகன் இன்று காலையில்பேராசிரியர் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியவில்லை. ஆனால் நீ உடனுக்குடன் சொல்லி பாராட்டையும் பெற்றாய் ….
‘….அந்த சம்பவம் எனக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த் விட்டது. நீ ஆழமாக படித்து உன் அறிவை பெருக்கிக் கொண்டாய், நான் அகங்காரத்தால் எதையும் பணத்தால் சாதிக்கலாம் என நினைத்திருந்தேன் . அது எவ்வளவு பெரிய தவறு என்பதை நான் இன்று உணர்ந்து விட்டேன்.இனி நீ என்னுடைய நண்பன்’ என்றான் தெளிவுடன்.


“அகல உழுதாலும் ஆழ உழு” என்பார்கள்.அது விவசாயத்திற்கு மட்டும் அல்ல கல்விக்கும் தான். ஆழமாகப் படித்தால் தான் அறிவு வளரும் என்பதை உணர்ந்து விட்டேன்,என்றான் மோகன்.


கந்தன்,மோகன் கரங்களைப் பிடித்துக்கொண்டான். மோகனும் அழுத்திப் பிடித்துக் கொண்டான்.அதில் பொறாமை இல்லை. அன்பு இருந்தது.

Share.

Leave A Reply