மணி சீருடையை தேடினான் காணவில்லை."அம்மா பள்ளி சீருடை எங்கே காணோம்.எடுத்துக் கொடுங்கள் " எனக் கத்தினான் மணி.
அடுப்படியில் பரபரப்பாக சமையல் செய்து கொண்டு இருந்த சீதா, மகன் கூப்பிட்ட சத்தம் கேட்டு சாம்பார் பாத்திரத்தை  இறக்க முற்பட்டதால் கைதடுமாறி சாம்பார் சிறிது கையில் கொட்டிவிட்டது.
"அம்மா" என அலறியவள் ,தண்ணீரில் கையைக் கழுவிவிட்டு மகன் இருந்த இடத்திற்கு வலியைப்  பொறுத்துக் கொண்டு வந்தவள்….
‘என்ன, மணி ”என்றாள்.
‘அம்மா சீருடையை எடுத்துத் தாருங்கள் ‘ என்றான் மணி.
நான்கு நாட்கள் உடுத்திய துணிகள் அழுக்காக இருந்தது.அழுக்கு கூடையில் போட்டு இருந்த சீருடையில் கொஞ்சம் வெள்ளையாக இருந்ததை எடுத்து கைகளால் அழுத்தி உதறி தன் மகனிடம் நீட்டினாள் சீதா. 
”என்னம்மா , அழுக்குத் துணியை எடுத்துக் கொடுக்குறீர்கள் ” என்றான் மணி.
”நாலு நாட்களாய் இந்த வேலைக்காரி கோமதி வராமல் துணி துவைக்கவில்லைடா ,என் செல்லமில்ல…  இன்னைக்கு மட்டும் இதை போட்டுக்க ” என்றாள் கெஞ்சலாக சீதா.

”சரி கொடுங்க நீங்களாவது துவைத்து போட்டு இருக்கக் கூடாதா ? நான் ஒழுங்கீனமாக போய் நிற்கவேண்டும். ஆசிரியர் என்னைத் திட்டவேண்டும். அதைப் பார்த்து மற்ற மாணவர்கள் சிரிக்க வேண்டும்.எல்லாம்….. ‘ எனக் கூறியவன் முடிக்காமல் வாங்கிப் போட்டுக் கொண்டான்.
சீதா  எப்படியோ சீருடை பிரச்சினை முடிந்தது என்று எண்ணியபடி  சமையல் அறைக்கு நழுவினாள்.
சாப்பாடு எடுத்து வைக்கப் பாத்திரத்தைப் பார்த்தாள், கழுவாத பாத்திரங்கள் நிறைந்து கிடந்தது. அதில் தேடி கழுவி எடுத்தவள் ,அரக்கப் பரக்க சாதத்தைக் கொடுத்து மணியை கிளப்பிக் கொண்டு இருக்கும் போதே,,,பள்ளிப் பேருந்து வந்து விட்டது,
மணி எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு ஓடினான்.
அதற்குள் அலுவலகத்துக்கு நேரமாகிவிட்டது என கோபி வந்து விட்டான். அவனுக்கும் தோசை சுட்டு எடுத்து வைத்தவள் வியர்த்து விறுவிறுத்து இருந்தாள்.
தோசை வைக்கும் போது கைகளில் கொப்பளித்து இருப்பதைப் பார்த்த கோபி ‘என்ன காயம்’ என்றான்.
”சாம்பார் கொட்டி விட்டது” என்றாள் சீதா.
‘இன்றைக்கும் வேலைக்காரி வரவில்லையா? சொல்லாமல் கொள்ளாமல் நின்று விடுகிறாள் .நீ கிடந்து அல்லல் படுகிறாய்’  என்ற கோபி…..
…தொட்டதற்கு எல்லாம் வேலைக்காரி உதவியே தேவை என்று பழகிக் கொண்டால் அவள் வரவில்லை என்றால் இப்படித்தான் வீடு தலைகீழாக மாறிவிடும் ‘.
”தன்  கையே தனக்கு உதவி” ,பிறர் கையை எதற்கு எடுத்தாலும் எதிர் பார்த்தால் இப்படி 
தொல்லைகளும், மனகஷ்டங்களும் வரத்தான் செய்யும் ” என்றவன் அலுவலகம் கிளம்பினான்.
அவர் சொல்வதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.வேலைக்காரி இருக்கிறாள் என்ற எந்த வேலையும் தான் செய்வதில்லை. அதனால் , அவள் வராத நாட்கள் எல்லாமே போராட்டம் தான் என நினைத்தாள் சீதா, தன் கொப்பளித்த கையைப் பார்த்துக் கொண்டு.

Share.

Leave A Reply