தாத்தாவைச் சுற்றி குழந்தைகள் அமர்ந்திருந்தார்கள்.
அதில் ஒரு சிறுவன் மற்றொருவனைப் பார்த்து,"போடா தண்டச் சோறு ""ஊரு சுத்தி " என்று திட்டிக்கொண்டு இருந்தான்.
இதைக் கேட்டா தாத்தா,"என்ன குழந்தை இப்படி எல்லாம் பேசுகிறாய் ?”.’யாரிடம் இருந்து கற்றுக்கொண்டாய் "என்று மெதுவாக கேட்டார்.
"தாத்தா,இவன் அம்மா வீட்டு வேலை செய்கிறார்கள்.இவன் ஊர்சுத்திக்கிட்டு இருக்கிறான்.இவனை எல்லோரும் இப்படித்தான் தண்டச் சோறு,ஊரு சுத்தி என்று அழைக்கிறார்கள் அது தான் "நானும் என்று இழுத்தான் ….
"அவன் தன் பொறுப்பை உணரும் வயது வரவில்லை,விளையாட்டுப் பிள்ளையாய் இருக்கிறான்.இதற்குள் இவ்வாறு திட்டுவதால் அவன் மனம் எவ்வளவு கஷ்டப்படும்.யாரையும் திட்டக்கூடாது",அதற்கு தான் ஒரு கதை சொல்கிறேன் கவனமாகக் கேளுங்கள் என்று சொல்ல ஆரம்பித்தார்.
ஒரு ஊரில் கண்ணம்மா என்றொரு பெண் இருந்தாள்,அவளுக்கு பக்கிரி என்றொரு மகன் இருந்தான்.அவளது கணவன் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நோய்வாய்ப்பட்டு இறந்து போனான்.தன் மகன் பக்கிரியை கூலி வேலை செய்து காப்பாற்றி வந்தாள். அவனும் எந்த வருத்தமும் இல்லாமல் வளர்ந்து வந்தான்.
ஒரு நாள் "சாப்பாடு போடு அம்மா.." என்று அமர்ந்தான்.அவன் தாய் கஞ்சி ஊற்றி வைத்தாள்.அதை சாப்பிட்டவன்,"அம்மா உப்பு இல்லை, உப்பு போடுங்கள்"என்றான்.
"அப்பா..உப்பு இல்லை.வாங்க காசும் இல்லை.சும்மா சாப்பிடு ‘என்றாள்.
அப்போது தான் வீட்டு நிலைமை அவனுக்கு புரிந்தது.
அம்மா,"நான் எப்படியாவது பணம் சம்பாதித்து விட்டுத்தான் வீட்டுக்கு வருவேன்.அது வரை நீங்கள் என்னப்பற்றி கவலைப்படாமல் இருங்கள்" என்று சொன்னவன் வீட்டை விட்டு வெளியேறி பக்கத்து ஊருக்குச் சென்றான்.
"எட்டு ஆளு வேலை செய்வேன்.ஒரு ஆளு சாப்பாடு சாப்பிடுவேன்.வேலைக்காரன் வெட்டியாக போறேனே "என்று சொல்லியபடி பாதையில் நடந்து சென்றான்.
அவன் சொன்னதைக் கேட்ட ஒரு வாழைத் தோட்டத்துக் காரர் கூப்பிட்டு ,"தம்பி எட்டு ஆள் வேலை செய்வாயா ?" என வியப்புடன் கேட்டார்.
"ஆமாம்"என்றான் பக்கிரி.
"அப்படி என்றால் என் வாழைத் தோட்டத்தில் வேலைசெய் "என்றார்.
"சரி"என்றவன்.

"ஐயா, நான் வெகு தூரத்தில் இருந்து வந்ததால் மிகவும் பசியாக இருக்கிறது.சாப்பிட ஏதாவது கொடுங்கள் பின் வேலைசெய்கிறேன் ‘என்றான்.
"தோட்டத்தைப் பார்த்துக்கொள் பக்கத்தில் தான் என் வீடு இருக்கிறது.சாப்பாடு எடுத்து வருகிறேன் "என்றபடி தோட்டத்துக்காரர் வீட்டிற்கு செல்லலானார்.
அவர் தலை மறையும் வரை சும்மா இருந்த பக்கிரி.வாழை மரத்து குலையில் இருந்து பழத்தை அப்படியே உரித்து சாப்பிட்டுவிட்டு அதன் நடுவில் பாத்தி ஓரம் இருந்த களி மண்ணை எடுத்து வைத்து தோலியை மூடி விட்டான்.
இப்படியே தோட்டத்தைச் சுற்றி நிறைய பழங்களைத் தின்று களிமண்ணை வைத்து மூடி விட்டான். பின் எதுவும் தெரியாத அப்பாவி போல் உட்கார்ந்து விட்டான்.சாப்பாடு எடுத்து வந்த தோட்டக்காரன் பக்கிரியை சாப்பிடச் சொன்னார்.
அதையும் ஒரு பிடி பிடித்து விட்டு "ஏய்"என ஏப்பம் விட்டான்.
சரி "இனி என்னுடன் வா தோட்டத்தைச் சுற்றி காண்பிக்கிறேன் பார் "என்று அழைத்துச் சென்றார் தோட்டக்காரர்.அப்போது வாழைப்பழம் உரித்து இருப்பது போல் தெரியவும் பக்கத்தில் சென்று பார்த்தார்.,தோட்டக்காரர்.பழம் இல்லாமல் களிமண் இருப்பதைப் பார்த்து பதறியபடி என்ன இது என்று எல்லா குலைகளையும் பார்த்தார்.
"பழம் எல்லாம் களிமண் ஆனது எப்படி "என ஆச்சரியமாய் பக்கிரியைப் பார்த்தார் தோட்டக்காரர்.
"எனக்கு பசித்தது.சாப்பிட்டேன்"என்றான் அப்பாவியாய்.தோட்டத்தில் நிறையப் பகுதியில் இப்படி இருப்பது கண்டு சிறிது நேரத்திலே இப்படி என்றால் நாள் முழுவதும் இருந்தால் என்ன செய்வான் கற்பனை செய்யவே முடியவில்லை தோட்டக்காரருக்கு ,முதலில் இடத்தை காலி செய்தால் போதும் என்று அனுப்பிவிட்டார்.
ஊருக்கு வெளியே எண்ணெய் ஆட்டும் இடம் இருந்தது.அதன் அருகே வரும்போது பக்கிரி பலத்த குரலில் "எட்டு ஆள் வேலை செய்வேன் ஒரு ஆள் சாப்பாடு சாப்பிடுவேன் ,வேலைக்காரன் வெட்டியா போறேனே " என்று கூறிக்கொண்டே சென்றான்.செக்குக்கு சொந்தக்காரர் பக்கிரியை கூப்பிட்டு "எட்டு ஆள் வேலை செய்வாயா "என்று கேட்டார்.
"ஆமாம் ஐயா " என்றான் பக்கிரி.
"சரி இங்கே வேலை செய் என்றார்.அவரும் இவன் செய்வான் என்ற நம்பிக்கையில் வெளியில் சென்று விட்டார்.
சிறிது நேரம் கழித்து வந்தார்.எண்ணெய் வடியும் இடத்தில் மிக கம்மியாக எண்ணெய் வடிந்து இருந்தது.கடலை குறைந்திருந்தது."இதில் இருந்த கடலை எல்லாம் எங்கே "என்றார்.
"சிந்தியது சாப்பிட்டு விட்டேன்" என்றான் அப்பாவியாய்.
"அடப்பாவி சில மணி நேரத்தில் இவ்வளவு கடலையை சாப்பிட்டு விட்டாயா ?’ என ஆச்சரியப்பட்டு "அப்பா சாமி உனக்கு தீனி போடா என்னால் முடியாது.இங்கு வேலை இல்லை போ" என அனுப்பி விட்டார்.
பக்கிரி நடந்து ஊருக்குள் வந்தான்.அங்கு ஒரு கிழவி இட்லி ,தோசை சுட்டுக்கொண்டு இருந்தாள்.அதைப் பார்த்த பக்கிரி ,"எட்டு ஆள் வேலை செய்வேன்.ஒரு ஆள் சாப்பாடு சாப்பிடுவேன்,வேலைக்காரன் வெட்டியா போறேனே "என்று கூவிக்கொண்டு சென்றான்.
அவனைக் கூப்பிட்டு ‘தம்பி எனக்கோ வயது ஆகிவிட்டது .இந்த இட்லி,தோசையை நாலு இடங்களுக்குச் சென்று விற்று வர முடியவில்லை.நீ விற்றுக் கொடு நான் உனக்கு சாப்பாடு போட்டுஏதாவது என்னால் முடிந்த பணமும் தருகிறேன்"என்றாள். அவனும் ‘சரி" என சொல்லி எல்லாவற்றையும் வாங்கிச் சென்றான்.
ஒரு மர நிழலில் அமர்ந்து இட்லி,தோசையை வயிறார சாப்பிட்டான்.அங்கேயே சிறிது நேரம் தூங்கினான்.கண் விழித்துப் பார்த்தான்.நேரமாகி விட்டதை உணர்ந்து பாட்டி வீட்டிற்கு சென்றான்.
"பாட்டி.. எல்லாம் விற்று விட்டேன்.ஆனால் பணம்தரவில்லை.கடனுக்கு கொடுத்து விட்டேன்"என்று பயந்தவன் போல் நின்றான்.
"பரவாயில்லை நாளைக்கு வசூல் செய்து வா என "பாட்டி சொன்னாள்.
"சரி பாட்டி" என்று பவ்வியமாகச் சொன்னான் பக்கிரி.
இப்படியே இரண்டு ,மூன்று நாட்கள் செய்தான்.பாட்டியிடம் இருந்த பணம் எல்லாம் தீர்ந்து போயிற்று.
"அப்பா பக்கிரி இனி கடன் கொடுத்தால் என்னால் வியாபாரம் செய்ய முடியாது.இன்று கண்டிப்பாக பணத்தை வசூல் செய்து விடு ‘ என கண்டிப்பான குரலில் கூறினான்.
"சரி பாட்டி "என்று கிளம்பியவன் அந்த ஊரை விட்டே கிளம்பி விட்டான்.
ஊரின் கடைசியில் குளம் ஒன்று இருந்தது.அதில் சலவைத் தொழிலாளி துவைத்துக்கொண்டு இருந்தான்.அவனைப் பார்த்ததும் பக்கிரி ,"எட்டு ஆள் வேலை செய்வேன்.ஒரு ஆள் சாப்பாடு சாப்பிடுவேன்,வேலைக்காரன் வெட்டியா போறேனே "என்று கூவிக்கொண்டே போனான்.
"தம்பி இங்கே வா" என ஆச்சரியத்துடன் கூப்பிட்டார்.
"எட்டு ஆள் வேலை செய்வாயா ?’என ஆச்சரியத்துடன் கேட்டார்.
"ஆமாம்"என்றான் பக்கிரி.
"சரி நீ என்னுடன் வேலைசெய் "என்றார்.அவனும் துணிகளை துவைத்தான்.காயப்போட்டுவிட்டு," நீ பார்த்துக் கொள் வெளியே போய்விட்டு வருகிறேன்" என்று சென்றார்.அவர் தலை மறையும் வரை உட்கார்ந்து இருந்தான் பக்கிரி.
அதன் பின்பு, பட்டுச் சேலை,பட்டுப்பாவாடை, வேஷ்டி என பட்டுத்துணிகளை மட்டும் எடுத்து மூட்டையாக கட்டிக்கொண்டு கிளம்பிவிட்டான்.வெகுதூரம் சென்ற பின் ஒருகாட்டுப்பாதை வந்தது.அதன் அருகில் ஒரு பெரியமரம் ஒன்று இருந்தது.அந்த மரத்தில் ஏறி துணிகளை காயவைத்து விட்டு உட்கார்ந்து இருந்தான்.
அப்போது அந்த வழியாக ஒரு வியாபாரி வந்து கொண்டு இருந்தான்.இவனையும் அந்த பட்டுத்துணிகளையும் பார்த்து விட்டுத் ,’தம்பி இங்கு என்ன செய்கிறாய் ‘என கேட்டார்.
"அதை ஏன் கேட்கிறீர்கள். இது ஒரு பட்டுத்துணி காய்க்கும் மரம். இதில் காய்க்கும்பட்டுத் துணிகளை எடுக்க உட்கார்ந்து இருக்கிறேன்"என்றான்."அப்படியா ‘என ஆச்சரியப்பட்ட வியாபாரி,அப்படி என்றால் ,"இந்த மரத்தை எனக்கு விற்று விடு" என்றார்.
"சரி,ஆனால் ஒரு கண்டிஷன்" என்றான் பக்கிரி.
"என்ன" என்று வியாபாரி கேட்டார்.
"இப்போது காய்த்த பட்டுத்துணி களை நான் எடுத்துக் கொள்கிறேன்.இனி காய்க்கும் பட்டுத் துணிகளை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்" என்றான்.
"சரி" என்ற வியாபாரி தங்க காசுகளைக் கொடுத்தார்.
அதை வாங்கிக் கொண்ட பக்கிரி பட்டுத் துணிகளை மடித்து எடுத்துக் கொண்டான்.
"ஐயா ?"என்றன்.
"என்ன ? "என்றார் வியாபாரி.
"நான் வெகுதூரம் போக வேண்டும்.உங்கள் குதிரையை கொடுத்தால் எனக் கூறியபடித் தலையை சொறிந்தான்" பக்கிரி.
பட்டுத்துணி காய்க்கும் மரம் கிடைத்த சந்தோஷத்தில் இருந்த வியாபாரி குதிரையையும் கொடுத்து விட்டார்.
பக்கிரி குதிரையில் ஏறி நீண்ட தூரம் சென்று விட்டான்.களைப்பாக இருக்கவே ஓரிடத்தில் இறங்கி உட்கார்ந்து இருந்தான்.
அப்போது அவன் வைத்திருந்த தங்க காசுகளில் சிலவற்றை குதிரைக்கு கொடுத்தான்,களைத்து இருந்த குதிரையும் காசுகளை விழுங்கி விட்டது.
சிறுது நேரம் கழித்து குதிரை சாணம் போட்டது அதில் தங்க காசுகள் ஒட்டிக்கொண்டு வந்தன.
இதைப் பார்த்த ஒரு வழிப்போக்கன்,"என்ன ?குதிரை தங்க காசு போடுகிறதே" என்றான்.
"அதை ஏன் கேட்கிறீர்கள்.இந்த குதிரை சாதாரண குதிரை இல்லை ."தங்க காசு போடும்குதிரை ‘ என்று கூறினான்.
இதைக் கேட்ட வழிப் போக்கனுக்கு ஆசை வந்து விட்டது .
"இந்தக் குதிரையை எனக்கு விலைக்கு தருகிறாயா" எனக் கேட்டார்,
பக்கிரியும் ‘சரி என்றவன் ஒரு கண்டிஷன் என்றான்.
"என்ன கண்டிஷன் "என்றான் வழிப்போக்கன்.
"இப்போது போட்டிருக்கும் தங்க காசுகளை நான் எடுத்துக் கொள்வேன். இனி போடும் காசுகளை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்"என்றான்.
அவனும் ‘சரி’ என்றவன்.குதிரையை வாங்கிக்கொண்டு பணம் கொடுத்தான்.பணத்தை வாங்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான் பக்கிரி.
அம்மாவிடம் வந்து அம்மா…நான் என்னுடைய சாமர்த்தியத்தால் பணம் சம்பாதித்தேன்.இந்தாருங்கள் ‘ என்று அம்மாவிடம் கொடுத்தான்.
மகனுக்கு இந்த அளவுக்கு புத்திசாலித்தனமும்,பொறுப்பும் வந்ததை நினைத்த அவன் அம்மா மிகவும் சந்தோசம் அடைந்து "உச்சி முகர்ந்தாள்’.
நடந்த அனைத்தையும் சொன்னான் பக்கிரி.
மகனைக் கண்ட சந்தோசம் உடனே மறைந்து போயிற்று அவனது தாய்க்கு.
"மகனே நீ உழைத்து சம்பாதித்து கொண்டு வந்த பணம் என சந்தோசப்பட்டு விட்டேன் என்றாள்.
"சம்பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளில் பிறரை ஏமாற்றி பணம் கொண்டு வந்திருக்கிறாய்.
‘மகாபாரதத்தில் துரியோதனன் பாண்டவர்களை ஏமாற்றி நெடுநாள் வாழவில்லை.
‘புராண காலங்களிலே மட்டும் அல்ல.இன்றைய கால கட்டத்தில் கூட பிறரை ஏமாற்றி இன்பத்தில் மகிழ்ந்திருக்கலாம்.அவை எல்லாம் தற்காலிகமானதே.
‘பிறரை ஏமாற்றுபவன் அதற்கு பலனை அனுபவித்தே ஆக வேண்டும்.
"நீ தவறு செய்து விட்டாய், மகனே , தவறு செய்து விட்டாய் ‘
உன்னிடத்தில் ஏமாற்றப்பட்டவர்கள் மனம் என்ன பாடுபடும் அதை நீ சிந்தித்திருந்தால் இவ்வாறு செய்திருக்க மாட்டாய்.
"எனக்கு கஷ்டம் புதியது அல்ல.அதை நிறைவுடன் ஏற்றுக்கொள்வேன்."
"இப்படி செய்து விட்டாயே அது தான் எனக்கு வருத்தமாக இருக்கிறது."என கண்ணில் நீருடன் அப்படியே உட்கார்ந்து விட்டாள்.
‘அம்மா’ என்னை மன்னித்து விடுங்கள் அம்மா
‘நமது வறுமையை போக்க வேண்டும் என்ற நோக்கத்தில்,பிறர் நலம் கருதாமல் நடந்து கொண்டேன்.
‘இனி அவ்வாறு செய்ய மாட்டேன்.நான் என்ன செய்ய வேண்டும் ? என நீங்கள் சொல்லுங்கள் அம்மா " என்றான் பக்கிரி.
"உங்கள் கண்ணில் நீர் வர இனியும் சம்மதிக்க மாட்டேன் ..
..மனிதனாகப் பிறந்தால் தவறு செய்வது இயல்பு தானே.அதை திருத்திக் கொள்ள என்ன வழி என்று கூறுங்கள் "அம்மா என்ற பக்கிரி.
அம்மாவின் கைகளில் முகத்தை வைத்து விம்மி ..விம்மி அழுதான்.
மகனின் தெளிவான வார்த்தைகளையும் தவறை உணர்ந்த மனோபாவத்தையும் அறிந்த கண்ணம்மா ஒரு முடிவுக்கு வந்தாள்.
‘மகனே பக்கிரி /தவறு செய்வது மனித இயல்பு தான் .ஆனால்..அதை திருத்தி கொள்பவர்கள் மிகக் குறைவே ..’
‘நீ திருந்தி விட்டாய்.உன்னை கடவுள் நிச்சயமாக மன்னிப்பார்.
‘நான் சொல்வது போல் நடந்து கொள்"என்றாள் கண்ணம்மாள்.
அந்தக் கிராமத்தில் ஏழை-எளியவர் உறங்க உணவு அருந்த சத்திரம் கட்டி அதற்கு எல்லா பணத்தையும் எழுதிக் கொடுத்து விட்டான் பக்கிரி,.
‘தங்களுக்கு என்று இருந்த சிறு நிலத்தில் இரவு,பகலாக பாடு பட்டான் பக்கிரி.
கடின உழைப்பு பக்கிரியை உயர்த்தியது. வீடு,தோட்டம் என வாங்கினான். இவற்றைக் கண்டு மகிழ்ந்த கண்ணம்மா நல்ல பெண்ணாகப் பார்த்து மகனுக்கு திருமணம் செய்து வைத்ததாள்.
உழைப்பை உணர்ந்தவன் ஒரு நாளும் தவறு செய்ய மாட்டான் என்று நிறைந்த மனதுடன் நிம்மதி மூச்சு விட்டாள் கண்ணம்மா.
"கேட்டீர்களா" சிறுவர்களே யாரையும் சிறுவனாக இருந்து செய்யும்குறும்பு ,சோம்பல் தவறு இவற்றை வைத்து எடை போடக் கூடாது என்பதை
தெரிந்து கொண்டீர்கள் அல்லவா ?
"ஆமாம்..என பல குரல்கள் கோரசாக வந்தது.
சிறுவர்களே,’இனி நாளை சிந்திப்போம்’நேரமாகிவிட்டது" என்றபடி குடுமி தாத்தா எழுந்து நடையைக் கட்டினார்.அவருக்கு முன்னும் பின்னும் சிறுவர்கள் ஓட ஆரம்பித்தார்கள்.