திருமணமாகி பத்து வருடங்களாகியும் வனிதாவிற்கு இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. திருமணமான சில வருடங்கள் கடந்தன ,அவளுக்கு இது ஒன்றும் பெரிதாக படவில்லை. நாட்கள் வேகமாக நகர அவள் மனம் ஒரு குழந்தைக்காக ஏங்கி துடித்தது.

பார்ப்பவர் கள் அனைவரும் துக்கம் விசாரிப்பது போல் , ‘ என்னம்மா இன்னும் விசேஷம் ஏதும் இல்லையா ?’ என்ற கேள்வி அவள் மனதை மேலும் ரணமாக்கியது. எல்லோரும் சொல்லும் கோவில்களுக்கும் சென்று பார்த்து விட்டாள் .மருத்துவத்தில் உள்ள அனைத்து பரிசோதனைகளும் செய்து பார்த்து விட்டனர். உடலில் எந்த குறையும் இல்லை.என்று கூறிவிட்டனர்.

எதை தின்னால் பித்தம் தெளியும் “என்ற நிலையில் தெரிந்தவர், தெரியாதவர் என்ற முறையில் எல்லாவற்றையும் பின்பற்றினாள் .நேரமும் ,பணமும் விரயமானது தான் மிச்சம். பலன் ஒன்றும் இல்லாமல் இருந்தது.


மனம் வெறுத்துப் போன அவள் வீட்டு அருகே உள்ள ஒரு கோவிலுக்குள் சென்று அமர்ந்தாள். ‘ இனி அடுத்து என்ன? என்ற கேள்வி அவள் மனதில் பலமாக எழுத்தது.அவளையும் அறியாமல் கண்ணீர் வழிந்தது.


இதனைப் பார்த்துக்கொண்டு இருந்த ஓர் வயதான பெண் அவள் அருகே சென்று அமர்ந்து அவளது தலையை ஆதரவாக தடவியபடி ,”என்னம்மா நீ மட்டும் தனியாகவா வந்திருக்கே , கூட யாரும் வரவில்லையா ? ,ஏதாவது பிரச்சினையா ?”என ஆதரவாக கேட்டாள்.


உடனே கோபமுற்ற வனிதா,’ நான் யார் கூட வந்தால் என்ன ,எனக்கு பிரச்சினை இருந்தால் என்ன ? இல்லை என்றால் என்ன ?பாட்டியம்மா நீங்க போய் முதல்லே சாமி கும்பிட்டுவிட்டு பத்திரமா வீட்டுக்கு போங்க “என தன் கோபத்தை பாட்டி மீது வார்த்தைகளில் வெளிப்படுத்தினாள் .
அவளது கோபத்தை புரிந்து கொண்ட பாட்டியம்மா ,அவளது கையை , ஆறுதலாக பிடித்து தடவி கொடுத்து அவளது மனக் கொதிப்பை அடங்கச் செய்து,” 

என்ன பிரச்சினையம்மா உனக்கு “என்று கேட்க ,வனிதாவும் அமைதி கொண்டு அனைத்தையும் சொல்லித் தீர்த்தாள்.
எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுத் தெரிந்து கொண்ட பாட்டி ,”ஏம்மா அவர் சொன்னார் அந்தக்கோவிலுக்கு சென்றேன்,இவர் சொன்னார் , இந்தப் பரிகாரம் செய்தேன் என்கிறாயே .

நீயாக மனதில் ஒரு நம்பிக்கை வைத்து இதுவரை உன் குழந்தைக்காக என்ன செய்தாய் ‘என்று கேட்டாள்.


வனிதா வுக்கோ பாட்டி கேட்பது ஒன்றும் புரியவில்லை ,’என்ன பாட்டி சொல்றீங்க ‘என்றாள்.


“சொல்கிறேன் ,கேள் ,ஒரு ஊர்லே ஓர் ஆசாமி ஒருத்தன் வசித்து வந்தான்.அவன் பெரிய மலை அருகே ஒரு சிறிய வீடு கட்டி வாழ்ந்து வந்தான். ஓர் நாள் அவன் வீட்டின் முன் பகுதியில் மலையிலிருந்து பாறை ஒன்று உருண்டோடி வந்து விழுந்தது .வீட்டின் முன்பு பாறை இருப்பதால் அவனுக்கு வெளியே சென்று வர சிரமமாக இருந்தது.


அப்போது அவனுக்கு ஓர் யோசனை வந்தது,’நாம் சென்று கடவுளை வேண்டிக்கொள்வோம்.அவர் இந்த பாறை அந்த இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்து செல்ல வழி கிடைக்கட்டும் ,என்று எண்ணியபடி அங்குள்ள சாமி படத்திற்கு முன்பு உட்கார்ந்து மணிக்கணக்காக வேண்டிக்கொண்டான். பின் வாசலுக்கு வந்து பார்த்தான் பாறை இம்மி அளவும் அசையாமல் அப்படியே இருந்தது.இதனைப் பார்த்த அவன்,’எனக்கு முன்னதாகவே தெரியும்,இந்தப்பாறை நகராது என்று ,

இவ்வளவு நேரமும் சாமி கும்பிட்டது வீணாகி விட்டது என்று வருந்தினான்.

‘அப்படிப்பட்ட நம்பிக்கை தாம்மா நீயும் வச்சிருக்கிறே , நாம் எதுமேலே நம்பிக்கை வைத்து வச்சிருக்கிறோம் என்பது முக்கியமில்லை.எப்படிப்பட்ட நம்பிக்கை வைத்து இருக்கிறோம் என்பது தான் முக்கியம். குழந்தை இல்லையே ,குழந்தை இல்லையே என்று சர்வகாலமும் யோசித்துக்கொண்டு இருந்தாள் குழந்தை இல்லாமல் தான் போகும் மாறாக குழந்தை உனக்கு இருப்பதாகவே நினை.உன் நினைப்பை முழு மனதாக நம்பு.

நம் மனதிற்கு ஓர் சக்தி உண்டு.நாம் எதை நம்புகிறோமோ அதுவாகவே நாம் ஆகிறோம். 


தாயாகிவிட்டேன் என்று நம்பிக்கையோடு வாழ்ந்தால் நிச்சயம் ஓர் நாள் நீ தாயாவாய் என்று கூறி விட்டு பாட்டி அங்கு இருந்து சென்று விட்டாள் .
வனிதாவிற்கு நம்பிக்கையின் உண்மை என்னவென்று விளங்கியது.பாட்டி சொன்னது போலவே நடந்து கொண்டாள் .பார்க்கும் மற்றவர்களுக்கு அவளது செயல் பைத்தியகாரத்தனமாக தெரிந்தது.ஆனால் வனிதா அதைப்பற்றி கவலைப் படவில்லை.அவள் நம்பிக்கையை தொடர்ந்தாள்.


அவளது முழு நம்பிக்கைக்கு பரிசும் கிடைத்தது.வனிதா கருவுற்றாள்.பத்து மாதம் கழித்து அழகான பெண் குழந்தையை ஈன்றெடுத்தாள் .குழந்தையின் முகத்தில் அந்த பாட்டியின் முகத்தை கண்டாள்.


“நம்பிக்கை இதை மட்டுமல்ல எதையும் வெல்லும்”,’தன்னை நம்பியவர்கள் தரணியை வெல்வார்கள்” என்று எண்ணிக்கொண்டாள் .

Share.

Leave A Reply