அப்பளக்குடுமி தாத்தா உட்கார்ந்திருந்தார்.அவரைச் சுற்றி சிறுவரும் ,சிறுமிகளும் கூடியிருந்தார்கள்.

ராமு கையில் கெடிகாரம் கட்டியிருந்தான்.

அதை கவனித்த கோபு,’ஏய் ராமு கெடிகாரம் நல்லா இருக்குடா எப்ப வாங்கினாய்’ என்றான்?
"தீபாவளிக்கு எங்க அப்பா வாங்கித் தந்தார்கள் "என்றான் ராமு.

‘டேய், கொஞ்ச நேரம் கொடுடா கட்டி பார்த்து விட்டு தருகிறேன் ‘ என்றான் கோபு.

‘கொடுப்பதா ?வேண்டாமா ?’ என யோசித்துக் கொண்டிருந்தான் ராமு. இதை கவனித்த தாத்தா ‘கோபு இங்கே வா’ என்றார்.

‘அடுத்தவர் பொருளை கேட்பதே தவறு.அதற்கு ஒரு கதை சொல்லப் போகிறேன்’என்றார் தாத்தா.



ஹாய்…தாத்தா கதை சொல்லப் போகிறார் என குழந்தைகள் எல்லோரும் அமைதியாக கேட்க ஆரம்பித்தார்கள்.

‘ஒரு ஊரில் மாலாவும்,விமலாவும் பக்கத்து ,பக்கத்து வீட்டில் வசித்து வந்தார்கள். இருவரும் நல்ல தோழிகளாக இருந்தார்கள்.

ஒருவர் செய்வதை மற்றவளுக்கு கொடுத்து உண்பது முதல் ஒருவருக்கு இல்லாததை மற்றவளுக்கு கொடுத்து உதவுவது வரை அவ்வளவு நட்பு.  இப்படி இருக்கும் சமயத்தில் ஒரு நாள் இரவு மாலா வீட்டிற்கு விமலா வந்தாள். 

‘வா….விமலா ‘ என வரவேற்றாள் மாலா.

"எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டுமே " என பீடிகை போட்டாள் விமலா.

‘என்ன உதவி செய்ய வேண்டும் ‘எனக் கேட்டாள் மாலா.

எனது கணவரின் நண்பர் வீட்டு திருமணத்திற்கு நாளை செல்ல வேண்டும்.உனது ‘தங்க சங்கிலியை தருகிறாயா ?’ எனக் கேட்டாள் விமலா.அப்போது இரவு நேரம்.
‘எனது கணவர் ஊருக்குப் போயிருக்கிறார் .நாளை தான் வருவார் கேட்காமல்..’என இழுத்தாள்..மாலா.

‘அதனால் என்ன ?காலையில் அண்ணன் வந்ததும் கொடுத்தால் போதும் ‘ என சொல்லி விட்டுப்போய் விட்டாள் விமலா.

இருவரும் பேசியதை ஒரு ‘பேய்’ கேட்டுக்கொண்டு இருந்தது. காலை நான்கு மணிக்கு விமலா மாதிரி மாறிய ‘பேய்’மாலா வீட்டு கதவை தட்டியது. தூக்க கலக்கத்தில் வந்த மாலா,கதவைத் திறந்தாள்.

வாசலில் விமலா நின்றிருந்தாள். "என்ன விமலா இந்நேரத்தில் வந்திருக்கிறாய்..என கொட்டாவி போட்டுக்கொண்டே கேட்டாள்….மாலா.

‘சங்கிலியை கொடு சீக்கிரம் ஊருக்கு போக வேண்டும்’ என்றது விமலா உருவில் இருந்த ‘பேய்.’
‘ஏன் இவ்வளவு அதிகாலையில் கிளம்பி விட்டீர்கள்’ என்றாள் மாலா.

‘ஆமாம் சீக்கிரம் போகலாம் என்றார்’ என் கணவர் என்றது ‘பேய் ‘உருவில் வந்த விமலா.

‘என் கணவர் இன்னும் வரவில்லை.’சரி’தருகிறேன் .பத்திரமாக கொண்டு வந்து கொடுத்து விடு என்ற மாலா ,உள்ளே போய் ‘சங்கிலி’யை எடுத்து வந்து கொடுத்தாள்.

சங்கிலியை வாங்கிக் கொண்ட விமலா உருவில் வந்த பேய் ‘வாரேன்’ என்று கூறியபடி போனது.
மாலாவும் கதவை தாழ் போட்டுக்கொண்டு படுக்க சென்று விட்டாள்.சங்கிலியை கொண்டு சென்ற ‘பேய்’ தனது கழுத்தில் போட்டுக்கொண்டது.

அதைப் பார்த்த மற்றொரு ‘பேய்’ எனக்கு ஒருமுறை போட்டு விடு என்றது. இப்படியே பல பேய்கள் கூடிவிட்டன. எல்லா பேய்களும் மாற்றி மாற்றி சங்கிலியைப்போட்டுப் பார்த்துக் கொண்டு இருந்தன.

அந்த அதிகாலை நேரத்தில் மாலாவின் கணவர் மகேஷ் அந்த வழியாக பஸ்ஸில் இருந்து இறங்கி நடந்து வந்து கொண்டிருந்தார்.

காலைக் கருக்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடியாத இருள்.மகேஷ் தனியாக நடந்து வந்தார்.

பறவைகள் அங்கும்,இங்கும் சிறகடித்து சலசலக்கும் சத்தம். ஆந்தை அலறும் சத்தமும் கேட்டது. ‘நாய்’விடாது குரைத்துக் கொண்டே இருந்தது.தூரத்தில் நரி ஊளையிட்டது.

இந்த சத்தங்களையும் தாண்டி…எனக்கு ….எனக்கு என ‘பேய்கள்’ கூச்சல் போட்டதும் கேட்டது மகேஷுக்கு, மனதிற்குள் பயம் கவ்விக்கொண்டது.இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ,’ என்ன கூச்சல்’ என சத்தம் வந்த பக்கம் சென்றார் மகேஷ்.

பேய்கள் ஒரு சங்கிலியை வைத்துக் கொண்டு மாற்றி… மாற்றி போட்டுக் கொண்டு இருப்பதை பார்த்தார் மகேஷ். இது என்ன நம்ம வீட்டு ‘சங்கிலி’ போல் அல்லவா தெரிகிறது என யோசித்தார்.
தனது வேட்டியை உடல் முழுவதும் போர்த்திக் கொண்டார். கையில் நெருப்புப் பெட்டியை எடுத்து வைத்துக் கொண்டார்.

மகேசும் குதித்துக் கொண்டே எனக்கு…எனக்கு…என தலையை நீட்டினார். ஒவ்வொருத்தருக்கா சங்கிலியை போட்ட பேய்கள் மகேஷ் கழுத்திலும் சங்கிலியை போட்டது. உடனே கையில் வைத்திருந்த தீப்பெட்டியை எடுத்து கொளுத்தினார் மகேஷ்.

நெருப்பைப் பார்த்த பேய்கள் மறைந்து விட்டன. வேட்டியை இடுப்பில் கட்டிக்கொண்ட மகேஷ் கழுத்தில் சங்கிலியுடன் வீட்டை நோக்கி வந்தார்.

பேய்களிடம் இருந்து பிழைத்தது இறைவனின் செயல்தான் என நினைத்து இறைவனுக்கு நன்றி சொல்லிக்கொண்டு வந்தார் மகேஷ்.

காலை விடிந்தவுடன் வந்த விமலா ,’ அண்ணன் வந்து விட்டார்களா?’ மாலா, N’சங்கிலியை’ தருகிறாயா ?என்றாள் விமலா.

"நீ இன்னும் ஊருக்கு போகவில்லையா ?” என்றாள் மாலா.

இப்பதான் புறப்பட்டுக்கிட்டு இருக்கிறோம். ‘சங்கிலி தருவதாக சொன்னாயே தருகிறாயா ?’என கேட்டாள் விமலா. 

‘என்ன சங்கிலியா ?’நான் காலையிலேயே கொடுத்தேனே ‘ என்றாள் மாலா.

‘என்ன மாலா இப்படி சொல்கிறாய்.என்ன ஆச்சு உனக்கு” என்றாள் விமலா.

‘எனக்கு ஒன்றும் ஆகவில்லை,உனக்குத் தான் எதோ ஆகிப் போச்சு ‘என்றாள் மாலா.

‘என்ன ?மாலா வந்ததில் இருந்தே பார்க்கிறேன்.ஏதேதோ சொல்கிறாய் ‘என்ன?விபரமாகச் சொல் ? என்றால் விமலா.

இதைக் கேட்ட மாலாவிற்கு கோபம் வந்தது.

”என்ன விமலா ” காலையில் நான்கு மணி அளவில் வந்து சங்கிலியை வாங்கிச் சென்ற நீ இப்போது திரும்பவும் வந்து கேட்டால் என்ன அர்த்தம்” என்றாள்.

‘மாலா… என்ன சொல்கிறாய் நீ. நான் வந்து வாங்கிச் சென்றேனா/’ அதிர்ச்சியுடன் கேட்டாள்.

‘தர விருப்பம் இல்லை என்றால் தரமாட்டேன் என்று சொல்.அதை விடுத்துஅபாண்டமாய் பெய்பேசாதே ”என்றால் விமலா கோபத்துடன்.

”நகையை வாங்கிச் சென்றதும் இல்லாமல் என்னுடனே சண்டைக்கு வருகிறாயா? என மாலா காத்த.

அக்கம் ..பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் ஓடி வந்தார்கள்.

என்ன…..?மாலா ,..
என்ன …..விமலா. …..என விசாரிக்கத் தொடங்கினார்கள்.

"ஒரு தட்டில் சாப்பிட்டவளுக சண்டைப் போடுவதைப் பாரு" என சில பேர் ஆச்சரியப் பட அந்த வீதியே சலசலத்தது.

அந்த நேரம் அங்கு வந்து கொண்டிருந்த மகேஷ்,என்ன எனது வீட்டின் முன் இவ்வளவு கூட்டம்,என்ன நடக்கிறது என வர…

மகேஷைக் கண்ட மாலா ஓ..என அழ ….

"அண்ணே..நீங்களே நியாயம் சொல்லுங்க அண்ணே’ என விமலா கூற..

”இப்ப ..என்ன ? என்ன நடந்தது என அமைதியாக கூறுங்கள்” என மகேஷ் கேட்டார்.
மாலா நடந்தவற்றை கூறினாள்.

”விமலா நான் நகையை வாங்கவே இல்லை ” என மறுத்தாள்.

”இந்தா …இந்த நகையா பாரு மாலா ” என தன் கழுத்தில் இருந்த நகையை கழற்றி காண்பித்தார் மகேஷ்.

அதைக் கண்ட மாலா, N”என்னுடைய நகை தான் ..அது எப்படி உங்கள் கழுத்தில் என ஆச்சரியப்பட்டாள் மாலா.

கொஞ்சம் பொறுங்கள் என்ற மகேஷ்,பஸ்ஸை விட்டு இறங்கி வரும் வழியில் காட்டுப் பகுதியில் நடந்தவற்றை கூறி முடித்தார்.

விமலா மாதிரி வந்தது ”பேயா” என மாலா பயந்தாள்.

”நகைக்காக உங்கள் நட்பையே குழி தோண்டி புதைத்து விட்டீர்களே ?” சிறிது நேரத்தில்.
”பணமும் நகையும் நட்பை கெடுக்கும்” என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்,இனியாவது உங்கள் நட்பை காப்பாற்றிக் கொள்ளுங்கள் என அறிவுரை கூறினார் மகேஷ்.

இனிமேல் இவ்வாறு நடந்து கொள்ள மாட்டோம் என உறுதி கூறினார்கள். பின் அவர்..அவர் வீட்டிற்கு சென்றார்கள்.

தனக்கென்று உள்ளதை வைத்து திருப்திப்பட்டால் இந்த நிலை வராது அல்லவா? என பலவேறு பேசினார்கள் அன்று முழுவதும் ஊர் மக்கள்.

”பார்த்தீர்களா சிறுவர்களே..அடுத்தவர் பொருளை கேட்டதற்கே விமலாவிற்கு எவ்வளவு கெட்ட பெயர் என்று .

”கோபு இனி யார் பொருளையும் கேட்க மாட்டாயே ?” என்று தாத்தா கேட்டதும், N”மாட்டேன் தாத்தா” என்றுகோபு கூற..,

”நாங்களும் யார் பொருளுக்கும் ஆசைப்பட மாட்டோம் தாத்தா ” என்று சிறுவர்கள் எல்லோரும் கூறிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டார்கள்.

தாத்தாவும் எழுந்து நடக்க ஆரம்பித்தார்.

Share.

Leave A Reply