அப்பளக்குடுமி தாத்தாவைச் சுற்றி குழந்தைகள் வட்டமாக அமர்ந்திருந்தனர்.ஒரு பையன் எழுந்து ,’தாத்தா இன்று எங்கள் வீட்டிற்கு அறக்கட்டளை நிதி என்று சிலர் வந்து பணம் வாங்கிச் சென்றார்கள்.அறம் என்றால் என்ன தாத்தா?’என்று கேட்டான்.
‘குழந்தைகளே இது எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.இதை ஒரு கதை மூலம் விலக்குகிறேன்’என்று தாத்தா சொல்ல ஆரம்பித்தார்.
ஒருஊரில் மீனாட்சி என்ற பெண் இருந்தாள்.அவளுக்கு சங்கர் ஒரே மகன்.அவர் கணவர் உடல் நலம் இல்லாமல் இறந்து விட்டார்.அவளுக்கு உறவினர்கள் என்று சொல்லி கொள்ள சங்கரைத் தவிர வேறு யாரும் இல்லை.
மீனாட்சி சில வீடுகளுக்கு போய் பத்துப்பாத்திரம் துலக்கி அதில் வரும் வருமானத்தில் கொஞ்சம் அரிசி,பருப்பு எல்லாம் வாங்கி சாப்பாடு செய்வாள்.சாதம் வடிக்கும் கஞ்சியை எடுத்து அதில் சிறிது சாதத்தை போட்டு தானும் ,மகனும் சாப்பிடுவார்கள்.சாப்பாட்டை பண்டாரம்,பரதேசிகளுக்குப் போட்டுவிடுவாள்.
இப்படியே வழக்கமாக நடந்தது.சங்கர் சிறுவனாக இருந்தபடியால் கொடுப்பதை சாப்பிட்டுவிட்டு வந்தான்.அவனும் பெரியபையனாக வளர்ந்து விட்டான்.அம்மா தினமும் சாதம் வடித்து தனக்கு கொடுக்காமல் தானம் கொடுப்பதைப் பார்த்து ,ஒருநாள்.’அம்மா நானும் சிறுவயதில் இருந்தே பார்க்கிறேன்.எனக்கு கூட கொடுக்காமல் நீங்கள் பிறருக்கே சாப்பாட்டை கொடுக்கிறீர்கள்.இப்படி செய்தால் நமக்கு என்ன ஆதாயம் .நமக்கே இல்லாத போது பிறருக்கு ஏன் கொடுக்கவேண்டும்?’ என்று பலநாள் சந்தேகத்தை சங்கர் கேட்டான்.
மகனே ’நாம் செய்யும் அறம் மட்டுமே அடுத்த பிறவிக்கும் நம்முடன் கூட வரும் .ஒருவன் முற்பிறவியில் தருமம் செய்யாமல் இருந்தால் மறுபிறவியிலும் அதன் பயனை அடைய நேரும்’ என்று அம்மா விளக்கினாள்.
‘அது எப்படி இந்தப்பிறவியில் செய்வது அடுத்த பிறவிக்குச் சேரும் என்பதை எப்படி நம்புவது?’ என்று வாதிட்டான்.
“எல்லாம் கடவுளின் சித்தம்”அவர் இன்றி அணுவும் அசையாது எல்லாம் அவன் செயல்’ என்று மீனாட்சி கடவுளைப் புகழ்ந்தாள்.” அந்தக் கடவுள் எங்கு இருப்பார்? நான் அவரைப் பார்த்து என் சந்தேகத்தைப் போக்காமல் வரப்போவது இல்லை “என்று சங்கர் உறுதி பூண்டான்.
மகனின் உறுதியைக் கண்ட தாய் இதுவும் அவன் செயலே என எண்ணினாள்.சங்கர் காட்டுக்குச் சென்று அமைதியான இடத்தில் ஒற்றைக்காலில் தவம் செய்தால் சிவன் உன் முன் காட்சி அளிப்பார்.அப்போது உன் சந்தேகத்தை கேள்” எனக் கூறினாள்.
மீனாட்சி தன் மகனுக்கு புளியோதரை செய்து கொடுத்து வழி அனுப்பினாள்.சங்கர் ஊரைத்தாண்டி காட்டுக்குள் நுழைந்து சிறிது தூரம் போயிருப்பான் .அவன் செல்லும் வழியில் ஒரு நல்ல பாம்பு படுத்திருதது.
அதைக்கண்ட சங்கர் ,’ஏன் இப்படி வழியில் படுத்து கிடக்கிறாய்? உன்னைப் பார்த்தால் எனக்குப் பாவமாக இருக்கிறது.அசையக்கூட முடியாமல் ஏன் இப்படிக் கிடக்கிறாய்?”என்று கேட்டான்.
இதைக் கேட்ட பாம்பு மகிழ்ச்சி அடைந்து ,’என் நிலை கண்டு நீயாவது என்ன என்று விசாரித்தாயே, தம்பி ?எனக்கு வயதாகி விட்டது .நவரத்தினம் என் தொண்டையில் பெரிதாக வளர்ந்து இருக்கிறது .இதை காக்க முடியாமல் இப்படி அவதிப்படுகிறேன் .உணவு உட்கொள்ள முடியவில்லை”என்று துக்கத்துடன் சொன்னது.
இதைக் கேட்ட சங்கர்,’ பாம்பே கவலைப்படாதே ,நான் கடவுளைப் பார்க்கப் போகிறேன் .உன் குறையை இறைவனிடம் சொல்லி உன் கஷ்டத்தைப் போக்க வழி கேட்கிறேன்’என்றான் சங்கர்.
பாம்பும் சரி என்று கூறி வழிவிட்டது.
காட்டு வழியாக வெகுதூரம் நடந்துவிட்டான் சங்கர்.அவனுக்கு பசித்தது.ஒரு இடத்தில் உட்கார்ந்து சாப்பிடலாம் என நினைத்து சுற்றும் முற்றும் பார்த்தான்.இரண்டு மாமரங்கள் பெரிதாக வளர்ந்து நின்றது .அதன் அடியில் சென்று அமர்ந்து அவன் கொண்டு வந்த சாப்பாட்டை சாப்பிட்டான்.
சிறிது நேரம் படுத்து விட்டு போகலாம் என எண்ணியவன் தரையில் படுத்துக்கொண்டு மரத்தைப் பார்த்தான்.அவ்வளவு பெரிய மரத்தில் ஒரு காய்,பூ கூட இல்லை.அவனுக்கு ஒரே ஆச்சரியம்.”இவ்வளவு பெரிய மரத்தில் ஒரு பூ,காய் கூட இல்லையே?”என வாய்விட்டுச் சொன்னான்.
இதைக் கேட்ட மரம்,”தம்பி எங்களுக்கும் இதே கவலைதான்.இவ்வளவு பெரிய மரமாக வளர்ந்தும் ஒரு பூ கூட பூக்கவில்லை.அது தான் ஏன் என்று எங்களுக்குத் தெரியவில்லை.இவ்வளவு பெரிதாக வளர்ந்தும் அடுத்தவர்களுக்கு ஒரு கனி கூட கொடுக்க முடியவில்லையே என கவலையாக இருக்கிறது .எங்களுக்கு என்ன குறை என்று தெரியவில்லை’என கவலையுடன் மரங்கள் கூறின.
கவலைப்படாதீர்கள் ,நான் கடவுளைப் பார்க்கப்போகிறேன் .உங்கள் குறைகளை கட்டவுளிடம் சொல்லி அதற்கு என்ன செய்யவேண்டும் என கேட்டு வருகிறேன்”என்று ஆறுதல் கூறினான்.சிறிது நேரம் ஒய்வு எடுத்து விட்டு தன் பயணத்தை தொடங்கினான்.
இருட்டு நேரம் நடுக்காட்டிற்கு சென்று விட்டான்.அங்கு மிருகங்களின் கத்தலும்,பறவைகளின் கீச்,கீச் குரலும் ,மரங்களின் சலசலப்பும் அவனைப் பயமுறுத்தின.கடவுளை நினைத்துக்கொண்டு மெதுவாக நடந்து கொண்டிருந்தான்.
அதே சமயம் ஒரு வேடவனும்,வேடுவச்சியும் அவன் எதிரில் வந்து கொண்டிருந்தார்கள்.சங்கரைப் பார்த்தவுடன் ,”அடப்பொடியா/ஏன் இந்த காட்டிற்கு தனியாக வந்தாய் இங்கு புலி,சிங்கம் எல்லாம் இருக்கும்,வழி தவறி விட்டாயா?”என வினவினான்.
அவன் மனைவியோ,” யோவ்,அவன் எப்படி வந்தால் உனக்கேன் ,இருட்டி விட்டது வா போகலாம்” என இரக்கமே இல்லாத குரலில் பேசினாள்.
“ஏ ..புள்ளே/ அந்த பையனை நம்மோடு இந்த ராத்திரிப் பொழுது வைத்திருந்து விட்டு காலையில் அனுப்பி வைப்போம்.கொஞ்சம் பெரிய மனசு பண்ணு”,என்ற அவனும் கெஞ்சாத குறையாகக் கேட்டான்.
கணவனை ஒரு முறை முறைத்து விட்டு,”அவனைக் கூட்டிவந்து தொலை” என்று கூறியபடி விடுவிடு என நடந்தாள்.வேடனும் சங்கரை தன்னுடன் வருமாறு சைகை செய்து விட்டு அவளை பின்தொடர்ந்து நடந்தான்.
மரத்திற்கு மேல் உள்ள பரணியில் மூன்று பேரும் ஏறிஅமர்ந்து கொண்டார்கள்.நன்றாக இருட்டிவிட்டது.மரத்துக்கு கீழ் கரடி,புலி, சிங்கம் போன்ற மிருகங்களின் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.
வேடுவச்சி தேனும்,திணை மாவும் எடுத்து இரண்டு பாகமாகப் பிரித்து ஒன்றை வேடவனிடம் கொடுத்து விட்டு மற்றொன்றை தான் எடுத்துக் கொண்டாள் .இதைப் பார்த்த வேடன்,”அந்தப் பையனுக்கு…” என்று இழுத்தான்.
முதலில் இருக்க இடம் கொடுத்தே,இப்ப சாப்பிட வேறா?”என் பங்கை நான் தர மாட்டேன் நீ சாப்பிடுவாயோ , இல்லை அவனுக்கு கொடுப்பாயோ எனக்குக் கவலை இல்லை” என கூறி விட்டு வெடுக்கென திரும்பி சாப்பிட ஆரம்பித்தாள்.இவ்வளவு சொன்னதே போதும் என எண்ணிய வேடன் அவனுக்கு கொடுத்த உணவில் இருவரும் உண்டு உறங்கினார்கள்.
காலையில் கதிரவன் ஒளி பட்டபின்பு தான் எழுந்தார்கள் .வேடுவச்சி இன்னும் தூங்கிக் கொண்டு இருந்தாள்.வேடன் சங்கரை மரத்தில் இருந்து கிழே இறக்கினான்.சிறிது தூரம் வரை வழித்துணையாக வந்து,”பத்திரமாக போதம்பி’என வழி அனுப்பி வைத்தான்.எந்த எதிர்பார்ப்பும் இல்லாத ஒரு நல்ல உள்ளம் என நினைத்தபடி விடை பெற்றான் சங்கர்.
ஒரு அமைதியான இடத்தைத் தேர்ந்து எடுத்து அங்கு ஒற்றைக்காலில் நின்றபடி சிவனை நினைத்து தவம் செய்தான் சங்கர்.பல ஆண்டுகள் நிறுத்தாமல் தவம் செய்தான் சங்கர்.”ஓம் நமச்சிவாயா “என்ற ஒலி கைலாயத்தில் கேட்டது.
‘சிவனைப் பார்த்து பார்வதி கேட்டாள்,’இந்த ஒலிபல ஆண்டுகளாகக் கேட்கிறது .நீங்கள் செவி மடுக்காமல் இருக்கிறீர்களே சுவாமி, சிறுவனாக இருந்தாலும் தான் வந்த காரியத்தை சாதிக்க வீண்டும் என்ற நோக்கோடு விடாது உங்களை வணங்குகிறான் .இன்னும் சோதிக்க வேண்டாம்.வாருங்கள் அவனுக்கு தரிசனம் கொடுப்போம் ‘என்று பார்வதி கூறினாள்.
சிவனும் பார்வதியும் பூலோகம்வந்து சங்கர் முன் தோன்றினார்கள்.’பக்தா நீ ஏன் உன்னை வருத்தி தவம் செய்கிறாய்?’என்று சிவன் கேட்டார்.
”இறைவா ,தர்மம் செய்வதால் யாது பயன் என்று அறியவே நான் உங்களைக் காண விரும்பினேன் ”என்றவன் வழியில் பாம்பு,மரம்,வேடன் இவர்களைக் கண்டதையும் அவர்களின் குறைகளையும் கூறினான்.
“ஐந்து அறிவு படைத்த பாம்பு தன வாயில் வைரத்தை அடக்கி வைத்திருப்பதே அதன் துன்பத்திற்கு காரணம்,நல்லவன் ஒருவனுக்கு அதைக் கக்கி கொடுத்து விட்டால்அதன் துன்பம் தீரும்.”மரத்திற்கு கீழ் இரண்டு அண்டாவில் புதையல் இருக்கிறது.அதை ஒரு நல்லவனிடம் ஒப்படைத்தால் மறு நிமிடமே மரம் பூத்து காய்க்கும்.
”ஆறு அறிவு உள்ள வேடன், வேடுவச்சி இருவருக்கும் உள்ள குணம் உனக்கு நன்கு தெரியும் .இருவரும் இப்போது இறந்து விட்டார்கள்.அவர்கள் முற்பிறவியில் செய்த பாவ,புண்ணியத்தால் வேடன் இளவரசனாகப் பிறந்திருக்கிறான் .வேடுவச்சி பன்றியாக பிறந்து இருக்கிறாள்.
“நீ மன்னர் அரண்மனைக்குச் சென்று தங்கத் தாம்பாளத்தில்,பிறந்த அக்குழந்தையைக் எடுத்து வரும் படி கூறு.அந்தக் குழந்தை உன் பெயர் சொல்லி வேடன் குரலில் பேசும்.நேரில் போய் பார்.அறம் சிறந்தது என்று நீ எண்ணினாள் உன் தாயாருடன் சேர்ந்து தருமம் செய்து வாழ் ” என வாழ்த்தி சிவனும்,பார்வதியும் மறைந்தார்கள்.
அவர்கள் சொன்னபடி அரண்மனைக்குச் சென்றான் சங்கர்.அரசனைப் பார்த்து தான் வந்த விவரத்தை கூறினான்.மன்னரும் மனம் மகிழ்ந்து வரவேற்று தன் மகனை எடுத்து வர கட்டளையிட்டார்.பணிப்பெண்கள் குழந்தயை எடுத்து வந்தனர்.
சங்கரைப் பார்த்த அக்குழந்தை சிரித்தது.பின், ‘சங்கர் நீ போன காரியம் முடிந்ததா?’எனக் கேட்ட அக்குழந்தை யைப் பார்த்து எல்லோரும் வியந்தனர். பின் அக்குழந்தை பேசவில்லை.சங்கர் மன்னரைப்பார்த்து இக்குழந்தை ஆண்டவன் அருள் பெற்ற குழந்தை என்று கூறினான்.
அதற்கு,மன்னர் ஆண்டவனைப் பார்த்து பார்த்து வந்த நீங்கள் புண்ணியவான் என்று அரசனும் ,அரசியும் மற்றவர்களும் சங்கரிடம் ஆசி பெற்றனர்.பின்னர் மன்னர் பொன்,பொருள்கள் வழங்கி சங்கரை பல்லக்கில் அனுப்பிவைத்தார்.
வரும் வழியில் மாமரத்திடம் இறைவன் கூறியதை சொன்னவுடன்,’உன்னை விட நல்ல மனிதரை நான் எங்குதேடப்போகிறேன் ,நீயே இரண்டு அண்டாவில் உள்ள புதையலையும் எடுத்துக்கொள்’என்று சங்கருக்கு புதையலைக் கொடுத்தது.அடுத்த நிமிடமே மரம்பூவும் ,பிஞ்சுமாக காட்சி அளித்தது.
மரத்திடம் விடை பெற்று, நல்ல பாம்பிடம் வந்தான்.பாம்பிடம் இறைவன் கூறியதைச் சொன்னவுடன் ,’உன்னை விட நல்லவனை எங்கு தேடப்போகிறேன் நீயே எடுத்துக்கொள்’ என்று நவரத்தினத்தை கக்கி கொடுத்து விட்டு நிம்மதியாக மூச்சுவிட்டது.பாம்பிடமும் விடை பெற்றுக்கொண்டு தன் ஊருக்கு வந்து சேர்ந்தான் சங்கர்.
அவனைக்கண்ட மீனாட்சிஆனந்தக் கண்ணீர் வடித்தாள்.சங்கர் தன் தாயிடம் நடந்தவைகளை எல்லாம் எடுத்து கூறினான்.தான் கொண்டு வந்துள்ள பொன்,பொருள்,புதையல் எல்லாவற்றையும் தர்மம் செய்வதிலேயே செலவு செய்யவேண்டும் என்று அம்மாவிடம் கூறினான்.தாயும் உள்ளம் மகிழ்ந்தாள் .தாயுடன் சேர்ந்து தர்ம காரியங்களில் ஈடுபட்டான் சங்கர்.ஊரே அவர்களை புகழ்ந்தது.
கேட்டீர்களா குழந்தைகளே அறம் செய்வது எவ்வளவு புண்ணியம் என்று அப்பளக்குடுமி தாத்தா கூறியவுடன் தாத்தா நாங்களும் எங்களால் முடிந்த உதவிகளைப் மற்றவர்களுக்குச் செய்வோம்’என்றார்கள்.
இன்று வெகு நேரம் ஆகிவிட்டது குழந்தைகளே நாளை சந்திப்போம் என்றபடி தாத்தா கிளம்பினர்.