அப்பளக்குடுமி தாத்தா கம்பீரமாக அமர்ந்திருந்தார்.அவரைச் சுற்றி சிறுவர்கள்.அதில் ஒரு சிறுமி மிட்டாய் வைத்திருந்தாள் .அதை பக்கத்தில் அமர்ந்திருந்த மற்றொரு சிறுமி பறித்து வாயில் போட்டுக்கொண்டாள்.

“மூதேவி,””மூதேவி’போடி உங்க வீட்டிற்கு ‘பேய் ‘வர,’பூதம் ‘ வர என திட்டிக்கொண்டு இருந்தாள் மிட்டாயை பறிகொடுத்த சிறுமி. சண்டை போட்ட குழந்தைகளைப் பார்த்து “இங்கே வாருங்கள்” என தாத்தா அழைத்தார்.இருவரும் ’உம்’ எனமுகத்தை வைத்துக்கொண்டு பக்கத்தில் வந்து அமர்ந்தார்கள்.

”உங்களுக்கு பேய் கதை சொல்லட்டுமா?’என தாத்தா கேட்டது தான் தாமதம்.

 ’தாத்தா, சொல்லுங்க…தாத்தா சொல்லுங்க ‘என எல்லோரும் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அமைதி..அமைதி..என்றவர் கதை சொல்ல ஆரம்பித்தார்.

ஒருகிராமத்தில் கணவனும் மனைவியும் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் வீட்டில் எப்போதுமே வறுமை தாண்டவமாடியது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.



எனவே,இருவரும் காலையில் வயல் வேலைக்குப் போனால் மாலை தான் வீடு திரும்புவார்கள்.வேலை முடிந்து கூலி பணத்தில் ஒரு கிலோ அரிசி,பருப்பு மற்றும் வீட்டிற்கு வேண்டிய சாமான்கள் எல்லாம் வாங்கி வருவார்கள்.

அதை அந்தப்பெண் இருட்டும் முன் சமையல் செய்து வைத்து விடுவாள்.அதன் பின், படுத்து தூங்கப் போவது தானே,அதற்கு எதற்கு விளக்கு என்று விளக்கு பொருத்துவதே இல்லை,அவர்கள்.இருட்டிய பின் இரு தட்டுகளை எடுத்து சமைத்த உணவு அனைத்தையும் இரு தட்டிலும் போடுவாள்.

இருவரும் சாப்பிட உட்காருவார்கள்.இரண்டு கவளம் தான் சாப்பிட்டு இருப்பார்கள்.தட்டு முழுவதும் காலியாகிவிடும்.வயிறும் நிரம்பாது.பசியுடன் கையை கழுவி விட்டு படுத்துக்கொள்வார்கள்.“ஒருகிலோ அரிசி இருவருக்கும் பத்தவில்லையே’என எண்ணியபடி தினம்,தினம் இப்படியே பசியுடனே இருந்தார்கள்.ஒருநாள் கூட திருப்தியாக சாப்பிட முடியவில்லையே என்ற வருத்தத்தில் நடை பிணம் போல வாழ்ந்து வந்தார்கள்.

அவளுக்கு கலா என்ற தங்கை ஒருத்தி இருந்தாள். அவள் நல்ல ஆச்சாரமான குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு வசதியுடன் வாழ்ந்து வந்தாள். 

ஒருநாள் ,”என் அக்கா வீட்டிற்கு போய் வருகிறேன்’ என்று தன கணவனிடம் சொல்லிவிட்டு அக்கா வீட்டிற்கு வந்தாள்.

தங்கையைப் பார்த்த அக்காவிற்கு அந்த வறுமையான நிலையிலும் சந்தோஷம் பரவியது. “வா…..வா….என அன்புடன் தங்கையை வரவேற்று அணைத்துக்கொண்டாள் . எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது,உன்னைப்பார்த்து என்று ஏக்கத்துடன் கூறினாள்.குழந்தைகள்,உன் கணவர் எல்லாம் எப்படி இருக்கிறார்கள்,ஏன் அவர்கள் வரவில்லையா/ என ஒரே மூச்சில் கேட்டு உபசரித்தாள்.

பின்னர்,கலா “நீ வீட்டில் இரு நாங்கள் வேலைக்கு போய் வருகிறோம்” என்று கூறினாள் அக்கா மாலா.”நான் தனியாக இருக்க கஷ்டமாக இருக்கும்,நானும் உங்களுடன் வருகிறேன்” என்று தங்கை அடம் பிடிக்கவே அவளையும் அழைத்துக்கொண்டு வேலைக்குச் சென்றார்கள்.மாலை திரும்பும் பொது கிடைத்த கூலியில் அரிசி,பருப்பு வாங்க கடைக்குச் சென்றாள் மாலா.இரண்டு பேருக்கேஒரு கிலோ அரிசி பத்தாது தங்கை வேறு வந்திருக்கிறாளே என எண்ணிய அக்கா இரண்டு கிலோ அரிசி மற்றும் அதற்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு நடந்தார்கள்.

இதை கவனித்த கலா,’ அக்கா இன்று சமையலுக்கா இரண்டு கிலோ அரிசி என கேட்டாள்”ஆம்’என்று மாலா கூறினாள்.வீட்டற்கு வந்தனர்.இருட்டும் முன் சமையல் வேலை எல்லாம் முடிந்து .’கலா வா சாப்பிடலாம்’என கூப்பிட்டாள் மாலா.என்னக்கா வீட்டில் விளக்கு பொருத்தவில்லையா?எனக் கேட்டாள், கலா.

“எண்ணெய் வாங்கி விளக்கில் ஊற்றி சிறிது நேரம் தான் எரிக்கனும்,பின் தூங்கப் போகையில் அணைக்கணும் இத்தனை வேலை யாரால் செய்ய முடியும்.வேலைக்குப் போனதில் உடம்பு எல்லாம் வலிக்கிறது .ம்..சரி..நீ வா சாப்பிடலாம் ‘என்றாள்.’அக்கா நான் விளக்கு இருந்தாள் தான் சாப்பிடுவேன் ,இல்லை என்றாள் சாப்பிட மாட்டேன் ‘என்று கூறி விட்டாள் தங்கை.வெகு நாள் கழித்து வந்த தங்கை சாப்பிடாமல் இருப்பதா என மாலா ஆதங்கப்படாள்.”

சரி விளக்குக்கு எண்ணெய் வாங்கி வருகிறேன்”என்று சென்றாள்மாலா.கலா இருட்டு வீட்டில் அமர்ந்து இருந்தாள்.மாலாவின் கணவனோ வெளியில் சென்று விட்டார்.இருப்பினும் எதோ பேச்சுச் சத்தம் கேட்பது போல் இருக்கவும் மிக உன்னிப்பாக கவனித்தாள் கலா.

“சொக்கா….சொக்கா…..சோறு உண்டா?”என்றது முதல் பேய்.” அதைக் கெடுக்க வந்திட்டாளே,சீதேவி ..என்றது இரண்டாம் பேய். 

அப்போது முதல் பேய்,சொல்லியது.,நாம் சுதந்திரமாக பல ஆண்டுகள்இந்த வீட்டில் வாழ்ந்து வந்தோம்.ஒரு துன்பம் கூட இல்லாமல் இருந்தோம்.அதைக் கெடுக்க வந்து விட்டாள் அவள் தங்கை”என்றது.

இரண்டாவது பேய்,”ஆமாம்..ஆமாம் நமக்கு இடஞ்சலாக அல்லவா வந்திருக்கிறாள்.வந்ததும் அல்லாமல் விளக்கு வேறு ஏற்றச் சொல்கிறாள்”என்றது. இனி இந்த வெளிச்சமான இடத்தில் எப்படி நாம் வாழ்வது , இனி அடுத்த இடத்தை தேட வேண்டியது தான்’என்று பேய்கள் கூறின.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த கலா,சில சுலோகங்களைச் சொல்லி இறைவனை வேண்டினாள்.”இங்கு இருக்கும் தீய சக்திகளே இறைவனின் மீது ஆணையிட்டு சொல்கிறேன் .இனி இந்த வீட்டில் இருக்கக் கூடாது ‘என உரத்த குரலில் கூறினாள் கலா.”வீடு அமைதியாக இருந்தது.”கலா சுலோகம் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே பேய்கள் வீட்டில் இருந்து போய்விட்டன.

அப்போது மாலா எண்ணெயுடன் வந்தவள் விளக்கில் ஊற்றி தீபம் ஏற்றினாள்.பின் தன கணவரையும் அழைத்து மூன்று பேருக்கும் சாப்பாடு போட்டாள்.கொஞ்சம் சாப்பிட்டவுடனே வயிறு நிறைந்து விட்டது.“என்ன ஆச்சரியம் மீதி இவ்வளவு சாப்பாடு இருக்கிறதே ‘என்று மாலா ஆச்சரியப்பட்டாள். 

உடனே கலா இருட்டில் நடந்தவைகளை எல்லாம் அக்காவிடம் கூறினாள்.‘அக்கா இனியும் இருட்டில் சாப்பிடாதே ,மாலை ஆனவுடன் விளக்குஏற்றி இறைவனை வணங்கிவிட்டு மற்ற வேலைகளைச் செய் .நீ நன்றாக இருப்பாய்’என்று கூறினாள்.

“கலா நீ வந்ததால் நம் வீட்டில் இருந்த பேய்கள் போனது.இன்று நாம் வயிறார உணவு உண்டோம்.இனி என் சோம்பேறித்தனத்தை இன்றுடன் விட்டு விடுவேன்.இனி நீ சொன்னது போல் செய்கிறேன்”என்று தங்கையிடம் கூறினாள்.அன்று இரவு திருப்தியாக சாப்பிட்டதால் நன்றாக நிம்மதியாக தூங்கினார்கள்.

“பார்த்தீர்களா குழந்தைகளே ஒரு பேய் வந்ததால் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பத்தை ,இனி அப்படி திட்ட மாட்டீர்கள் அல்லவா? என்று தாத்தா கேட்டார்.‘மாட்டோம்,மாட்டோம் ‘என சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.அந்த சந்தோஷத்தில் தாத்தா வீட்டிற்கு செல்ல கிளம்பினார். 

குழந்தைகளும் மகிழ்ச்சியுடன் கலைந்து சென்றனர்

Share.

Leave A Reply