மதுரைக்கு அருகில்  அப்பளப்பட்டிஎன்னும் சிறிய ஊர் உள்ளது.அவ்வூருக்கு செல்லும் வழியில் நம்மை வரவேற்பது குடிதண்ணீர் குளம் .சிறிது தூரம் நடந்தால் கூரை ,ஓட்டு வீடுகள் கொண்ட சிறிய அழகிய கிராமம்.

அதுதான் அப்பளப்பட்டி. ஊரின் மையப்பகுதியில் ஒரு பிள்ளையார் கோவில் .அதன் அருகில் சங்கிலிகருப்பன் கோவிலும் உண்டு.சற்று நடந்தால் ஐந்தாம் வகுப்பு வரை படிக்க ஒருபள்ளியும் ,அதன் அருகில் ஊர் நியாயம் பேச ‘சவுக்கை’யும் அதற்கு நிழலும் இதமான காற்றும் தரும் அரசமரமும் இருக்கும்.

அந்த சவுக்கையில் தான்    ஊர் நியாயங்கள்,ஊர்கதைகள் எல்லாம், வேலை வெட்டி இல்லாதவர்களும் ,வேலை முடிந்து ஓய்வு எடுப்பவர்களும் கூடும் இடம்.இப்படி வெட்டிக்கதைகள் பேசாமல் அங்கு விளையாடும் குழந்தைகளை அழைத்து அவர்களுக்கு நீதிக்கதைகளை கூறி அவர்களை உற்சாகப்படுத்தி சிந்திக்க வைத்தார் நம் கதாநாயகன்.

கதாநாயகன் என்ற உடன் உங்களுக்கு அவர் எப்படி இருப்பார் என்று நினைக்கத் தோன்றும் .அவர் ரஜினி மாதரி இல்லை.”கமல் மாதரி,நம்ம நாகேஷ் மாதிரி’என்று கற்பனை வருகிறது இல்லையா? ..ஆம்..அவர் இதோ இப்படித்தான் இருப்பார்.

அவருக்கு 75 வயது இருக்கும் .சிரித்த முகம் .அந்த சிரிப்பில் பொக்கை வாய் தெரியும்.கண்ணில் எப்போதும் ஆனந்தம் தெரியும்.வயதானவர் என்று  அவரைப்பார்த்தால் சொல்ல முடியாது.காலையில் கண் விழித்துக்காலைக் கடன்களை எல்லாம் முடித்து விட்டு சாமிகும்பிட்டு நெற்றியில் விபூதிபட்டை போட்டுக்கொண்டு அவர் வந்தால் மணி ஆறு என கடிகாரத்தை பார்க்காமலே சொல்லி விடலாம்.அவ்வளவு சுறுசுறுப்பு.

அவரது பிளஸ் பாய்ண்டு என்ன தெரியுமா? அவரின் குடுமி.அந்தக் குடுமியை பார்த்தாலே குழந்தைகள் சிரிப்பார்கள் .அவருக்கு தாய்-தந்தை வைத்த பெயர் கருப்பணசாமி.ஆனால் இப்போது அந்த பெயரில் அவரை கேட்டால் யாருக்கும் தெரியாது.

அப்பளக்குடுமி தாத்தா ,என்று கேட்டால் சின்னக்குழந்தையும் அவரைக் காண்பிக்கும்.அவர் மூதாதைகள் அப்பளம் போட்டார்களாம்.இப்போது அவர் குடுமியும் சேர்ந்து ‘அப்பளக்குடுமி ‘ஆகிவிட்டார் .இவர் பெயரிலே பிற்காலத்தில் அந்த ‘ஊர் அப்பளப்பட்டி’ ஆகிவிட்டது.அவர் அப்படி என்னதான் செய்கிறார்?

அடடா..மணி  5 ஆகிவிட்டதே ,அவரை குழந்தைகள் மத்தியில் தான் பார்க்க முடியும்.அங்கேயே நாமும் போகலாம் .நீங்களும் வாருங்களேன்



தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் 

அப்பளக்குடுமி தாத்தாவைச் சுற்றி குழந்தைகள் அமர்ந்திருந்தார்கள் .அதில் ஒரு பெரிய பையன் விரல் சூப்பிக்கொண்டு இருந்தான்.

இதைக் கவனித்த தாத்தா,”சிறுவர்களே இங்கே வாருங்கள் கதை சொல்லப் போகிறேன் /”என்ற உடன் எல்லோரும் வந்து அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள்.தாத்தா கதை சொல்ல ஆரம்பித்தார்.

‘ஓர்ஊரில் ரவி, மணி ,குமார் என்று  மூன்று நண்பர்கள் இருந்தார்கள்.’.மூன்று பேருக்கும் தனித்தனியாக ஒரு குணம் உண்டு.

ரவிக்கு எப்போதும் கண்ணில் பீளை வந்து கொண்டே இருக்கும்.அதில் கொசுக்கள் வந்து உட்காரும் .அதை இரு கைகளிலும் அடித்துக்கொண்டே இருப்பான்.

மணியின் இரு கைகளிலும் எப்போதும் சிரங்கு இருந்து கொண்டே இருக்கும் .அரிப்பு தாங்க முடியாமல் சொறிந்து கொண்டே இருப்பான்.

குமாருக்கு எப்போதும் மூக்கில் சளி ஒழுகிக்கொண்டே இருக்கும்.அதை சிந்திக்கொண்டே இருப்பான்.இப்படி மூன்று பேரும் மாறி, மாறி அவர்கள் செய்வதை செய்து கொண்டே இருப்பார்கள் .சில நிமிடங்கள் கூட அவர்களால் சும்மா இருக்க முடியாது.

ஒரு நாள் நண்பர்கள் மூன்று பேரும் ஒரு உறுதி எடுத்துகொண்டார்கள். அதன்படி ஒரு நாள் மட்டும் நான் மூக்கை சிந்த மாட்டேன் என்று குமாரும் ,கொசுவை விரட்டமாட்டேன் என்று ரவியும்,சிரங்கை சொறியமாட்டேன் என்று மணியும் முடிவு செய்தனர்.அந்த நாள் வந்தது.

சிலமணி நேரம் சென்றது .குமாருக்கு மூக்கில் இருந்து சளி ஒழுக ஆரம்பித்தது.நண்பர்களிடம் செய்த சபதத்தையும் நிறைவேற்றவேண்டும் .மூக்கில் ஒழுகும் சளியையும் துடைக்க வேண்டும் என்ன செய்வது என்று யோசித்தான்….

எங்கள் தாத்தாவிற்கு இவ்வளவு பெரிய மீசை…இவ்வளவு பெரிய மீசை….என்று சொல்லிக்கொண்டே ,தன் மூக்கை கைகளால் சுத்தம் செய்து கொண்டான் ,குமார்.

இதைக்கேட்டு ‘அப்படியா…அப்படியா…’  என்று  சந்தோஷப் பட்டு,கைகளைக் கொட்டி சிரிக்கிற மாதிரி பாவனை செய்து தன் கண்ணுக்கு எதிரே முற்றுகையிட்டிருந்த கொசுக்களை அடித்து விரட்டினான் ரவி.

இருவரும் தங்கள் காரியத்தைச் சாமர்த்தியமாக செய்ததைக் கவனித்தான் மணி.

“இது என்ன பிரமாதம் .எங்க வீட்டுத் தோட்டத்தில் புடலங்காய் விதை போட்டிருந்தோம்.அதில் ஒவ்வொரு காயும்…

“இவ்வளவு பெரியதாக இருந்தது”/ என்று தன இரு கைகளையும் முழங்கை வரைக்காண்பித்து ….இவ்வளவு பெரியது…இவ்வளவு பெரியது…’என்று கூறிக்கொண்டே ,சிரங்கை சொறிந்து கொண்டான்.

நண்பர்கள் மூன்று பேருக்கும் தங்கள் செய்கையால் சிரிப்பு வந்தது .”நம்மால் இந்தப் பழக்கத்தில் இருந்து சில மணி நேரம் கூட செயல்படாமல் இருக்க முடியவில்லை”என்று கூறி வருந்தினர்.

நாம் சிறுவர்களாக இருக்கும் போதே இதை திருத்தியிருக்க  வேண்டும் “என மூன்று பேரும் கூறினர்.கதையை முடித்துவிட்டு குழந்தைகளை பார்த்து ,’இதில் இருந்து என்ன தெரிகிறது’ என்று  தாத்தா நிறுத்தினார்  .

தொடர்ந்து ,கூறிய தாத்தா ,”தவறான பழக்கங்களை சிறு வயதிலே விட்டு விட வேண்டும் .இல்லையேல் நம்மால் அந்தப் பழக்கத்தில் இருந்து மீள்வது கடினம் ஆகும்.

‘தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்”என்ற பழமொழி போல் நமது தீய பழக்கம் சாகும் வரை நிழல் போல் தொடரும்” என்று கூறிய தாத்தாவின் கண்கள் விரல் சூப்பிய பையனிடம் சென்றது.

“இனி நான் விரல் சூப்ப மாட்டேன் தாத்தா” என்றவன் வாயில் இருந்த விரலை எடுத்து விட்டான் .குழந்தைகள் எல்லோரும் பாராட்டி கைகைகளைத் தட்டினார்கள்.

தாத்தா துண்டை தோளில்போட்டுக்கொண்டு எழுந்தார்.குழந்தைகளும் தத்தம் வீட்டை நோக்கிச் சென்றார்கள்.

Share.

Leave A Reply