காற்றொழில் தந்த காமதேனு கந்தனே
காலடிப் பற்றி கடமை செய்கிறேன்
மாற்றுதல் தந்த கற்பகத்தரு முருகா
மயிலம் முருகனே மலரடி பணிந்தேன்
பாற்பட்டார் வழியில் வழிகாட்டும் குருவே
பாக்கியம் செய்தேன் உன்பின் தொடரவே
ஏற்றம் தந்ததமிழ் முதல் கடவுளே
என்றும் பணிவேன் உன்தாழ் மலரே
விண்மீனாய் இருக்கும் கார்த்திகை முருகா
வளமான வாழ்விற்கு அச்சாணி நீதான்
கண்போல பக்தரைக் காக்கும் முருகா
கற்கண்டாய் இனிக்கும் உன்பெயர் சொன்னால்
சண்முகா சரவணா சங்கடம் தீர்ப்பவனே
சந்தனமாய் மணக்கும் உனைநினைக் கும்மனம்
திண்ணமாய் சொல்லும் தீர்க்க தரிசியே
திசையெல்லாம் பரவும் உன் புகழே

படிப்படி யாய்ஏறி உன்வாயில் வரவேண்டும்
பக்கம் நீவந்து அருளைத் தரவேண்டும்
அடிவேராய் இருந்து அகிலத்தை ஆள்பவனே
ஆயிரம் மாற்றம் தந்தே காக்கவேண்டும்
வடிவேலா வரம் நீஎனக்குத் தரவேண்டும்
வாடாமல் உலகத்தார் வளர்ச்சி பெறவேண்டும்
குடிகாக்கும் முருகா தமிழ் அமுதம்
குவலயத்து மக்கள் எல்லாம் பெறவேண்டும் .