தமிழ் மாதங்களில் மாசி மாதம் வருகின்ற மகா சிவராத்திரி  சிறப்பு பெற்றது. இதை விளக்குவதற்கு ஒரு சிவபுராணக்கதை சொல்வார்கள்.  
ஒரு மகா சிவராத்திரி நாளில் மான்களை வேட்டையாட வேடன் ஒருவன் காட்டிற்கு புறப்பட்டான். ஒரு பெரிய வில்வ மரத்தின் மீது ஏறி மறைந்திருந்தான்.தண்ணீர் குடிக்க வரும் மான்களை வேட்டையாட  எண்ணி காத்திருந்தான்.அப்போது ஒரு பெண் மான்  அந்தப் பக்கம் வந்தது.
வேடன் வில்லில் அம்பைப் பூட்டினான் .அந்த நேரத்தில் மரத்தின் கிளைகளில் அவன் தலை பட்டு வில்வ இலைகள் உதிர்ந்தது. உதிர்ந்த இலைகள் மரத்தின் அடியில் இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன.
வேடன் குறி பார்ப்பதை அறிந்த மான்,அவனிடம் சென்று ,"நான் இறந்தால் எனது குட்டிகள் வேதனை அடையும்.அவற்றைப் பாதுகாப்பான இடத்தில் ஒப்படைத்து விட்டு மீண்டும் இங்கு வருகிறேன்.அதற்கு அனுமதிக்க வேண்டும் "என்று கேட்டது மான்.
வேடனும் சம்மதித்தான். 



சிறிது நேரத்தில் அந்த மானைத் தேடி மற்றொரு பெண் மான் வந்தது.அதை வேட்டையாட வேடன் முற்பட்டான்.
அப்போது ஏற்பட்ட அதிர்விலும் கிளைகளில் இருந்து வில்வ இலைகள் சிவலிங்கத்தின் மீது விழுந்தது.
அப்போது இளைய பெண் மானும் "தன்னைக் கொல்ல வேண்டாம் .சில கடமைகள் உள்ளன.அதைநிறைவேற்றிய பின் நானே வருகிறேன் "என்று கூறிவிட்டு சென்றது.
பின்னர் இரு மான்களையும் தேடி ஆண் மான் ஒன்று வந்தது.அதை நோக்கி அம்பைப் பாய்ச்ச முயன்றபோதும், வில்வ இலைகள் உதிர்ந்து சிவலிங்கத்தின் மீது விழுந்தது.
அந்த மானும் தனது குட்டிகளை பாதுகாப்பான இடத்தில் விட்டுவிட்டு வர அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டது.வேடன் இந்த மானின் வேண்டுகளுக்கும் ஒப்புக் கொண்டான்.
மூன்று மான்களும் ஓரிடத்தில் கூடின. ஆண்மான், தானே அந்த வேடனிடம் செல்லப்போவதாக கூறியது. அதைப் பெண் மான்கள் ஒப்புக்கொள்ளவில்லை.ஒவ்வொரு மானும் தானே உயிர்த் தியாகம் செய்யப் போவதாக கூறின.


முடிவில் மூன்று மான்களும் வேடனிடம் சென்று உயிரை விடுவது என்று தீர்மானித்தன.

குட்டிகளை மற்ற மான்களின் பாதுகாப்பில் விட்டு விட்டு வேடனிடம் சென்றன.
வேடனுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.வில்லில் நாண் ஏற்றினான்.அப்போதும் வில்வ மரத்தில் இருந்து இலைகள் உதிர்ந்து சிவலிங்கத்தின் மீது விழுந்தது.
நான்கு முறை இவ்வாறு வில்வ இலைகள் சிவன் மேல் விழுந்தது.இறைவனுக்கு நான்கு கால பூஜைகள் செய்த பலனை வேடனுக்கு கொடுத்தது.
அன்றைய தினம் சிவராத்திரியாக இருந்ததால் அவனது பாவங்கள் முற்றிலும் அகன்றன.வேடன் மனம்மாறி அந்த மான்களைக் கொல்லாமல் காட்டுக்குள் திரும்பிச் செல்ல அனுமதித்தான்.
இதைக்கண்டு மனம் மகிழ்ந்த சிவபெருமான் அங்கு எழுந்தருளி வேடனுக்கும்,மான்களுக்கும் காட்சி தந்தார். மான்கள் முக்தி அடைந்தன.வேடன் கங்கைக் கரையில் குகனாகப் பிறந்து ராமனுடன் இணைந்து பின்னர் முக்தி அடைந்தான்.
சிவராத்திரி விரதத்தின் மகிமை தெரியாமலே முக்தி கிடைக்கிறது என்றால்…
பக்தியுடன் விரதம் இருந்து சிவராத்திரி அன்று வழிபடும் பக்தர்களுக்கு அனைத்து நலன்களையும் கொடுத்து அருள்வான்.எனவே,சிவராத்திரி அன்று நாமும் விரதம் இருந்து சிவவழிபாடு செய்து கண்விழித்து சிவனை வழிபட்டு எல்லா நலன்களையும் பெறுவோம்.
Share.

Leave A Reply