அமைதியும் சக்தியும் ஒருங்கே அமையப்பெற்றுள்ள சித்தலிங்கேஸ்வரர் ஆலயம் சிங்கா நல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து தென் திசையில் 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஆலயத்தின் வரவேற்பாக வடக்கு நோக்கி ஸ்ரீ சொர்ணாம்பிகா அம்மன் காட்சி தர அம்பாளைப் போன்றே பிணி தீர்க்கும் விநாயகப் பெருமானும் வெளிக்காற்றில் வெள்ளிப்பிள்ளயாய் நம்மை வரவேற்கிறார்.
மேற்கு நோக்கிய நந்தி தேவரைப் பார்த்த முகமாய் சித்தர் ஆகம படி நவபாஷாணங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டு சித்தலிங்கேஸ்வரராக உலகில் முதன் முதலில் உருவான ஒரே "நவபாஷாண சிவலிங்கம்" மூலவராக கிழக்கு நோக்கி எம்பெருமானாகிய சிவபெருமான் சீரும் சிறப்புமாய் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.
மூலவரின் வலப்புறமாகத் தொடர்ந்து குருதட்சிணாமூர்த்தியும் ,வாயு புத்திரனாகிய ஸ்ரீ ஆஞ்சநேயர் திருவுருவச் சிலையும் ,ஸ்ரீ அலமேலு பதமாவதி ஸ்ரீ வெங்கடாசலபதி சன்னதியும், அரசர ,வேம்புமர நிழலில் ராகு, கேது, இருபுறமும் இருக்க மையப்பிள்ளையாராகவிநாயகர் மேடைதளமும் அமைந்துள்ளது.
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருக்கும் இடமாக மலைக்கோயில் அமைப்பில் தமிழ்க் கடவுளாம்முருகப்பெருமான் சுப்ரமணியர் ஸ்ரீ வள்ளி தெய்வானையுடன் வீற்றிருக்க வலப்புறமாக முருகனின் அருந்தமிழ் கற்ற அகத்தியமாமுனி அவர்கள் மழலை உருவில் திருவருள் நிரம்பப்பெற்று வீற்றிருப்பதும், மூலவரைச் சுற்றி லிங்கோத்பவர், சண்டிகேஸ்வரர் ,துர்கை என சகல தெய்வங்களுக்கு தனிதனி சந்நிதிகள் அமைந்துள்ளது.
சரபேஸ்வரர் ,பிரித்தியங்கராதேவி வழிபாட்டிற்கென பஞ்ச பூத தத்துவத்தில் அகிலம் போற்றும் சரபேஸ்வரருக்கு தனி சந்நிதி பிரமிடு வடிவில் அமையப்பெற்றுள்ளது .இதன் வெளிப்புறச் சுற்றின் நான்கு மூலைகளிலும்,சரபேஸ்வரரின் வலது புறப்பக்கம் முதலா க ஏகாம்பர நாதரும் ,அடுத்து காளத்திநா தரும், அடுத்ததாக ஜம்புகேஸ்வரர் திருவுருவமும், இவரை அடுத்து திரு அண்ணாமலையார் திருவுருவமும் அமையப்பெற்று இருப்பது இத்தலத்திற்குரிய சிறப்பம்சமாகும் .இங்குள்ள சரபேஷ் வரர் ஐம்பொன் சிலையால் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்தலத்தில் நவகோள்கள் ஒன்பதும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது இத்தலத்திற்குரிய சிறப்பம்சம் ஆகும்.பைரவருக்கென தனி சன்னதியும் இவரை நோக்கியே யாக வழிபாட்டிற்கென தனி மேடையும் அமைப்பெற்றுள்ளது ,தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவர் அபிஷேக பூஜையில் பங்கேற்றால் ‘பாவவினை பல தீர்ந்து பல மோட்சந்தனை’ பெறலாம் என்பது உண்மை.

அகத்தியர் நாடி கூறியதன் வழியாக தொழுநோயால் பாதிக்கப் பட்ட ஒருவர் நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் சித்தலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மாலை நான்கு மணி ராகுகால பூஜையில் பங்கேற்று நோய் நீங்கப் பெறுவாய் என்றதன் கூற்று மெய்ப்பிக்கப்பட்டதுடன்அதற்குரிய சான்றும் உள்ளது.
சிறப்பு-பலன்கள்
பஞ்ச பூத தத்துவத்தில் சித்தர் ஆகமப்படி அமைந்திருக்கும் நவபாஷாண சித்தலிங்கேஸ்வர லிங்கத்திருமேனிக்கு தினமும் மூலிகை தீர்த்தத்தால்அபிஷேகம் செய்யப்படுகிறது.ஒவ்வொரு இரவுப் பொழுதும் ‘சிவா சக்தி யாக "நடைபெறுவதுடன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலைப் பொழுதில் வேள்வி பூஜை நடைபெறுகிறது.
இத்தலத்து அம்மன் வடக்கு நோக்கி அமர்ந்து இருப்பதுடன் , காலையில்–பாலாம்பிகையாகவும்,மதியம்—-சொர்ணாம்பிகையாகவும், இரவு—ராஜராஜேஸ்வரியாகவும் வீற்றிருந்து முக்காலங்களிலும் முழு சக்தியாக அமர்ந்து அருள்பாலிக்கிறார்.
வாயு திசையில் உள்ள காளத்திநாதருக்கு ருத்ராபிஷேகம் செய்து பரிகார பூஜை முடித்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கும், குழந்தை செல்வம் இல்லார்க்கு மழலை கிடைக்கும் என்பது பக்தர் தம் நம்பிக்கையாகும். இச்சிறப்பு பூஜையானது திருமணஞ்சேரிக்குப் பிறகு இங்குதான் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சாதக ரீதியான தோஷங்களுக்கு பரிகார பூஜை, என மனவேதனையில் உள்ளவர்கள் வாயுதிசையிலுள்ள காளத்தி நாதருக்கு அவர்கள் கைகளாலே ருத்ராபிஷேகம் செய்து பரிகார பூஜையுடன் சரபேஸ்வரரை வழிபட்டால் குறையில்லா பெருவாழ்வும், தோஷம் நீங்கிய நிறைவாழ்வும் நிரம்பப் பெறலாம் என்பது இத்தல வழிபாட்டின் சிறப்பு பலன்கள் ஆகும்.
உலகில் உள்ள ஒரே "நவபாஷாண சிவலிங்கம்" சித்தலிங்கேஸ்வரர் சுவாமி திருக்கோவில் கோவை-வெள்ளலூர் கிராம வெள்ளிங்கிரி மலைத் தோட்டம் பகுதியில் நொய்யல் ஆற்றின் தென்கரையில் அமைதி நிறைந்த சூழலில் சித்தர் பெருமான் ஸ்ரீ பிரம்மானந்த சுவாமிகளால் நிறுவப்பட்டது.’நவபாஷாண சிவலிங்கம்" அமைந்திருக்கும் அருள்மிகு சொர்ணாம்பிகை உடனுவர் சித்தலிங்கேஸ்வரர் திருகோவிலில் சுபஸ்ரீ விஜயவருடம் மாசித்திங்கள் நன்னாளில் பதினெண்சித்தர்களின் அருளார்ந்த ஆசியுடன் திருக்கோயில் ஸ்தாபகர் சித்தர் பெருமான் சந்நிதானம் ஸ்ரீ பிரம்மானந்த சுவாமிகளின் குருபூஜை விழாவானது ஒவ்வொரு ஆண்டும் மகாவேள்வியுடன் நடைபெற்று வருகிறது.
பக்தர்கள் இம்முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு எல்லாம் வல்ல இறைவன் சித்தலிங்கேஸ் வரர் இறையருளும், குருமகா சந்நிதானம் சித்தர் பெருமான் குருவருளும் பெற்று வாழ்வில் ,’
பல வளமும்
பல நலமும் பெற்று
மண்ணில் பிறந்தார் பெரும்
பயன் பெற வேண்டுகிறோம்…"
"எக்கணமும் என்னூடே என்னப்பன்
சிவனிருக்க வரும் வல் வினையும்
நல்வினையே யென –மெய்
அகமகிழ்ந்துதிப்போரை என்றும் கைவிடேன் " — ஓம்சிவாயநம