இதழ் கிருஷ்ணரின் கீதை
பகுதி -25
கவிஞர் ச.மல்லிகா


இவன் தான் ”ஆத்மாவிடமே திருப்தியும், ஆத்மாவிடமே சந்தோசமும் உள்ளவன்” என விளக்குகிறார் கிருஷ்ணன் .
மேலும் கூறுகிறார், அர்ஜுனா, எவனுடைய மனம் துன்பங்கள் வரும்போது மனம் கலங்குவது இல்லையோ, சுகங்களை அடையும் போது அவற்றில் சிறிது கூட ஆசை கொள்வதில்லையோ ,எவனுக்கு விருப்பு, பயம், கோபம் இவை முற்றும் அற்றுப் போயினவோ அத்தகைய முனிவன் சமாதி நிலையை அடைந்தவன் ஆவான் என்று கூறுகிறார் கிருஷ்ணன்.
நல்லவை என்பது அவரவருக்குப் பிரியமானது .கெட்டவை என்பது அவரவருக்குப் பிடிக்காதது.
நல்லவை, கெட்டவை என்பது பொருட்களைச் சார்ந்தது அன்று அவரவரின் மனோபாவத்தைப் பொறுத்தது.
உலகியலில் மனதிற்குப் பிடித்த பொருள் கிடைத்தால் சாதாரண மனிதனுக்குப் பெருமகிழ்ச்சி ஏற்படும் அந்த மகிழ்ச்சியில் மூழ்கிச் சொற்களால் தன் திருப்தியை வெளிப்படுத்துவான் .
பிடிக்காத பொருள் கிடைத்தால் சாதாரண மனிதன் மிகுந்த வருத்தம் அடைவான் .
சித்தயோகி எந்தப் பொருளையும் , மகிழ்ச்சி பொங்க கொண்டாடமாட்டான் ,வெறுக்கவும் மாட்டான்.
மன அமைதியுடன் விகாரமற்ற தன்மையும், பெற்றிருப்பான்.ஒருவரை பாராட்டுகிறான் என்றால், உலகின் நன்மைக்காகவாகும்.எதையாவது யாரையாவது பாராட்டினால் தனது மகிழ்ச்சியின் வெளிப்பாடு அன்று என விளக்கிய கிருஷ்ணன் மேலும் கூறுகிறார்.
பேச்சு சாதாரண மனிதனுடைய பேச்சைப் போல் இருக்காது திமிர் பிடித்தவன், பாசாங்குக்காரன் இவர்கள் கூட மனப்பாடம் செய்து மிகவும் நல்ல பேச்சுப் பேச முடியும்.
இங்கு உண்மையில்; மனப்பாங்குக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.யோகி நிலையில் உள்ளவனுக்கு அதை ஒட்டியே பேச்சு வெளிப்படும் .
எனவே தான் இங்கு பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மனப்பாங்கை மட்டுமே எடுத்து கூறுகிறார், கிருஷ்ணன் .
மேலும், புலன் அவனுக்கு வசப்பட்டிருக்கும் உலகியல் பொருட்களில் பற்றற்ற அவற்றிலிருந்து விலகியிருக்கும் என்பதை இவ்வாறு குறிப்பிடுகிறார் கிருஷ்ணன்.
ஆமை எல்லாப் பக்கங்களிலிருந்தும் தனது உறுப்புக்களை உள்ளிழுத்துக் கொள்வது போல எப்போது மனிதன் புலன்னுகர் பொருட்களிலிருந்து புலன்களை முற்றிலும் இழுத்துக் கொள்கிறானோ ,அப்போது அவனுடைய புத்தி திடமானதுஎன்று புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.
ஆமை போல புலன்களை இழுத்துக் கொள்வது என்கிறீர்கள்.அதை விவரித்துக் கூறுங்கள் என கேட்கிறான் அர்ஜுனன் .
சாதாரண மனிதர்கள் கனவிலும் கற்பனையிலும் புலன்களால் அனுபவிக்க வேண்டியதை அனுபவித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.
சமாதிநிலையில் இருப்பவர்கள் ஆமை, தனது உடல் உறுப்புக்கள் அனைத்தையும் எல்லாப் பக்கங்களிலிருந்தும் ஒடுக்கிவிடும் அதுபோல,….

‘
சமாதிநிலையில் தன் வசப்பட்ட எல்லாப் புலன்களையும், பார்ப்பது, போகப் பொருட்களில் ஈடுபடாமல் விலக்கிக் கொள்ளுதல், எந்தப் புலனும் எந்தப் போகப் பொருளாலும் ஈர்க்கப்படாமல் கவனமாகக் கண்காணித்தல் ,புத்தியையும் மனதையும் தடுமாறச் செய்யும் சக்தி நிலைக்காமல் பார்த்துக் கொள்ளுதல், இவற்றைத்தான் ஆமைபோல் புலன்களை இழுத்துக் கொள்வதாகும் ,என்கிறார் கிருஷ்ணன் .
”ஆமைபோல் உறுப்புகளை அடக்கி விட்டால் பற்று விலகிவிடுமா ?” என கேட்கிறான் அர்ஜுனன்
”இல்லை அர்ஜுனா” என்ற கிருஷ்ணன் மேலே கூறுகிறார்.
”புலன்களின் மூலம் போகப் பொருட்களை ஏற்றுக் கொள்ளாத மனிதனுடைய புலன் நுகர் பொருட்கள் தான் விலகுகின்றன. ஆனால் அவற்றில் தங்கியுள்ள பற்று விலகுவதில்லை.பரமாத்மாவை தரிசித்த பின்பு அப்பற்றும் விலகிவிடும்” என்கிறார்.
”ஞான யோகி பரமானந்தக் கடலில் பரமாத்மாவை நேரிலேயே கண்டு அனுபவிப்பதால் ,அவனுக்கு உலகியல் பொருள் ஒன்றிலுமே சிறிது கூடப் பற்று இருக்காது .
” நள்ளிரவில் பளிச்சென்று தெரியும் நகரங்களின் ஒளி சூரியனின் ஒளியின் ஒரு துளி தானே, சூரியன் உதயமாகிவிட்டால் நட்சத்திரங்கள் மறைந்து விடுகிறது.
அதுபோல உலகியல் பொருட்களால் ஏற்படும் இன்பம் கூட ஆனந்தமயமான பரமாத்மாவின் ஆனந்தத்தின் ஒரு திவாலை தான்.
பரமாத்மாவின் தரிசனத்தில் ஆனந்தத்தைப் பெற்றுவிட்டவனுக்கு உலகியல் இன்பங்களில் இன்பம் என்ற தோற்றம் கூட ஏற்படாது அவற்றில் பற்றும் சிறிது கூட ஏற்படாது .
பரமாத்மா என்பது உலகியலைக் கடந்தது.தெய்வீகத் தன்மை நிறைந்தது .தெய்வீக நிறைவு ஏற்பட்டு விட்டால் அதில் ஒன்றி மோகித்து அதாகவே ஆகிவிடுகிறான்.
தான் என்ற நினைவையே இழந்து விடுகிறான்.பிறகு மற்றப் பொருளைப்பற்றி நினைவு வருவதில்லை.
பரமாத்மாவினுடைய நேரிடை அனுபவத்தினால் பற்று அறவே ஒழிந்துவிடுகிறது. இப்படிப் பற்று அற்ற நிலையில் வெளிப்படையாகப் புலன்களை மட்டும் அடக்கவில்லை .அடியோடு அவனது பற்றும் அழிந்து விடுகிறது.இதுவே சித்தயோகியின் தனித்தன்மை என விவரிக்கிறார் கிருஷ்ணன் .

Share.

Leave A Reply