மகாபாரத போர்க்களத்தில் போருக்கு ஆயத்த நிலையில் இருந்த சிகண்டியின் பிறப்பைப் பற்றிய விவரங்களையும்,சங்கின் கீர்த்திகள் பற்றியும் மன்னர் திருதிராஷ்டிரரிடம் விளக்கிக்கொண்டிருந்தான் சஞ்ஜயன் .
”ஆமாம் ” என்ற சஞ்ஜயன் பாண்டவர் படையினர் ஒவ்வொருவரும் முழங்கிய சங்கின் ஒலி ஆகாயத்தையும் பூமியையும் எதிரொலிக்கச் செய்து, கவுரவப் படையினர் இதயங்களை பிளக்கச் செய்தது என்றான்.
பிறகு நடப்பதைக் கூறு என கேட்கிறார் திருதராஷ்டிரர்.
அரசே அதன்ன பின் ஹனுமத் கொடியை உடைய அர்ஜுனன் அணிவகுத்துப் போர் புரியத் தயாராய் நிற்கின்ற தங்கள் புதல்வர்களையும் அவர்களை சார்ந்தவர்களையும் பார்த்து , ஆயுதங்களை விடுக்க முனைகின்ற போது வில்லை நிமிர்த்திக் கொண்டு கிருஷ்ணனை நோக்கி அச்யுதா ,என்னுடைய ரதத்தை இரண்டு படைகளுக்கும் நடுவில் நிறுத்துங்கள் என்கின்றான் அர்ஜுனன்.
அர்ஜுனனை ‘சுபித்வஜன் ‘ என்று ஏன் குறிப்பிடுகிறாய் ?
மஹா வீரனான ஹனுமான் பீமசேனனுக்கு வாக்கு கொடுத்திருந்தான். அதனால் அர்ஜுனனின் கொடியில் இருந்து அவ்வப்போது கர்ஜனை புரிகிறார். அதை தங்களுக்கு நினைவூட்டுவதற்காகவே ‘கபித்வஜன்’ என்ற அடைமொழி கொடுத்தேன் என விவரிக்கிறான் சஞ்ஜயன்.
‘வில்லை நிமிர்த்தினான்’ என்று கூறுவதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா என கேட்டார் திருதராஷ்டிரர்
துரியோதனன் முதலான கவுரவப் படையினரின் யுத்தத்திற்கு தயாராக வீறு கொண்டிருக்கும் நிலையைக் கண்ட அர்ஜுனன் உள்ளத்திலும் வீர உணர்ச்சி பொங்கி எழுந்தது.உடனே ,காண்டீபத்தை நிமிர்த்தினான் என்று விளக்கினான் சஞ்ஜயன் .
‘அச்யுத’ என்று கிருஷ்ணனை அர்ஜுனன் அழைத்ததற்கு காரணம் எதுவும் உண்டா என வினாவினார் திருதிராஷ்டிரர்.
எவருக்கு எந்த நேரத்திலும் எந்த நிகழ்ச்சியிலும் தோல்வி வீழ்ச்சி என்பது கிடையாதோ, எவர் தமது சுயரூபத்தில் இருந்தும், சக்தியில் இருந்தும் பெருமையில் இருந்தும் எப்பொழுதும் வழுவாதவராக இருப்பவர் ”அச்யுதன் ” என்ற பொருளுள்ள பெயரால் அழைக்கிறார்கள்.
அச்யுதா, என்று அர்ஜுனன் அழைத்ததால் கிருஷ்ணனுடைய பெருமையையும்,சுயரூபத்தையும் பற்றிதான் அறிந்திருக்கிறேன் என்று வெளிப்படுத்துகிறான்.
மேலும் தாங்கள் ரதம் ஓட்டினால் என்ன ? உண்மையில் நீங்கள் எந்த நிலையிலும் சாட்சாத் பரமேசுவரன் தான் என்கிறான், என்றான் சஞ்ஜயன்.மேலே கூறு என்கிறார் திருதிராஷ்டிரர் .
ரதத்தை இரு படைகளுக்கும் நடுவில் ஓரிடத்தில் கொண்டு நிறுத்துங்கள்.நான் எங்கிருந்து பார்த்தால் என்னை எதிர்த்து வீறுகொண்டு நிற்கும் எல்லா வீரர்களையும் நன்கு பார்க்க முடியுமோ அதற்கு எவ்வளவு நேரமாகுமோ, அதுவரை நிறுத்துங்கள்.
இந்த யுத்தம் என்ற இக்கட்டான தருணத்தில் தானே எந்தெந்த வீரர்களுடன் போரிட நேரும் என்பதை அறிய விரும்புகிறேன் என்று கூறினான் அர்ஜுனன் என்று விளக்குகிறான் சஞ்ஜயன் .
மேலும் கூறுகிறான், தீய புத்தியுடைய துரியோதனனுக்கு யுத்தத்தில் நலனைச் செய்ய விரும்பி எந்தெந்த அரசர்கள் இந்தப் படையில் வந்து கூடியிருக்கிறார்களோ அவர்களை நான் பார்க்க வேண்டும் என்கிறான்.
துரியோதனனைத் தீயபுத்தி உள்ளவன் என்று ஏன் அர்ஜுனன் சொன்னான், என்றார் திருதிராஷ்டிரர்
பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசமும் ஓராண்டு அஞ்ஞாதவாசமும் என பதின்மூன்று வருடங்கள் கழிந்த பிறகு ராஜ்ஜியத்தைப் பாண்டவர்களுக்குத் திருப்பிக் கொடுத்துவிடுவது என்பது முன்பே முடிவான விஷயம். அவர்கள் திரும்பும் வரை கவுரவர்கள் கையில் காப்பீடாக ராஜ்ஜியம் வைக்கப்பட்டிருந்தது.
துரியோதனன் தானே வைத்துக் கொள்ளும் ஆசையில் திருப்பிக் கொடுக்க மறுத்து விட்டான். இது தவிர துரியோதனன் பாண்டவர்களுக்குப் பல அநியாயங்களும் அட்டூழியங்கலும் செய்திருக்கிறான்.அந்த கொடிய என்னத்தை நினைத்துத் தான் துரியோதனனை தீயபுத்தி உடையவன் என்று கூறினான் அர்ஜுனன் என்றான் சஞ்ஜயன் .
இந்தப் போரில் துரியோதனனுடைய நலனை விரும்பி அரசர்கள் கூடியிருக்கிறார்கள் . அப்படிப் போரிடக் கூடியவர்களை எல்லாம் நான் பார்க்கிறேன் என்று அர்ஜுனன் கூறியதற்கு காரணம் கூறு என்கிறார் திருதிராஷ்டிரர்.
தீய புத்தியுள்ள துரியோதனனுடைய அநியாயங்களையும் ,கொடிய செயல்களையும் உலகமே அறியும்.
அப்படி இருந்தும் கூட அவனுக்கு உதவி செய்ய வந்திருக்கும் அரசர்கள் புத்தியும் கெட்டுப் போய்விட்டது என்று அர்ஜுனன் நினைக்கிறான்.
துரியோதனனின் அநியாயத்தை ஆமோதிக்கும் வகையில் இங்கே கூடியுள்ளனர்.அவன் முதுகை தட்டிக் கொடுத்து தம்முடைய தற்பெருமையை காட்டிக் கொள்கிறார்கள்.
அவர்கள் துரியோதனனுக்கு தீங்கே செய்கிறார்கள்.தங்களை பெரிய வீரர்களாக நினைத்துக் கொண்டு போருக்கு உற்சாகமாக அணிவகுத்து நிற்கிறார்கள்.
அவர்களை யார்,எவர் என்று தெரிந்து கொள்கிறேன். பிறகு யுத்த களத்தில் அநியாயத்திற்கும் ,அதர்மத்திற்கும் துணை போவதனால் ஏற்படும் விளைவைச் சுவைக்க வைக்கிறேன் என்கிறான் அர்ஜுனன்.
இவ்வாறு கூறிய அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் என்ன செய்தான் என்பதை கூறுகிறான் சஞ்ஜயன் .
கிருஷ்ணன் இரண்டு படைகளுக்கும் இடையில் பீஷ்மருக்கும் துரோணருக்கும் முன்பும்,அனைத்து அரசர்களுக்கு முன்பாகவும்,உயர்ந்த ரத்தத்தைக் கொண்டு நிறுத்தி பார்த்து யுத்தத்திற்காக ஒருங்கே கூடியிருக்கும் இந்த கெளரவர்களைப் பார் என்கிறார்.
சரி ‘குடாகேசன்" என்று அர்ஜுனனை கூறியதற்கு காரணம் என்ன என்கிறார் திருதிராஷ்டிரர்.
”குடாகா” தூக்கம், தூக்கத்தை ஜெயித்தவன்.அதன் மீது தன் அதிகாரத்தை நிலை நாட்டுபவன் ”குடாகேசன்” ஆவான்.
அர்ஜுனன் ஒரு பொழுதும் சோம்பலுக்கு ஆட்படுவதில்லை .கவனமாகவும்,விழிப்புடனும் இருக்கிறான் என்று சொல்லிக் காட்டிய சஞ்ஜயன் ,உமது புத்திரர்கள் அர்ஜுனனை வெற்றி கொள்வார்களா? என்று திருதிடிராஷ்டிரருக்கு சஞ்ஜயன் உணர்த்துகிறான்.
யுத்ததிற்காகக் கூடியிருக்கும் இந்த கெளரவர்களைப் பார் என்று கிருஷ்ணன் கூறியதற்கு காரணம் இருக்கிறதா ?
ஆமாம் என்ற சஞ்ஜயன் விவரிக்க ஆரம்பிக்கிறான் .