கேசவா ,” அவையெல்லாம் நீ அறிய மாட்டாய், நான் அறிவேன் ” என்று கூறியதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ஜுனன் .

அர்ஜுனா, நான் பரமாத்மா எல்லாம் அறிந்தவன். நீ ஜீவாத்மா சிற்றறிவு படைத்தவன் என்பதை கோடிட்டுக் காட்டவே அவ்வாறு கூறினேன் . நான் ஒவ்வொரு கால கட்டங்களிலும் என்னென்ன லீலைகள் புரிந்திருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும்.
உனக்கு உன்னுடையவும், என்னுடையவுமான , முற்பிறவிகளின் நினைவு தெரியாது அதனால் தான் இப்படி கேள்வி கேட்கிறாய் . எனக்கு உலகில் நடப்பது எதுவும் தெரியாமல் போகாது .நடந்தது , நடப்பது, நடக்கப் போவது எல்லாமே எனக்குத் தற்போது நடப்பது போலக் கண்கூடு .
நான் எல்லா ஜீவன்கள் பற்றியும் அவர்களுடைய எல்லாச் செய்திகளைப் பற்றியும் நன்றாக அறிவேன் . ஏனெனில் நான் எல்லாம் அறிந்தவன்.நான் கர்பத்தின் ஆரம்பத்தில் சூரியனுக்கு இந்த யோகத்தை உபதேசித்தேன் ,என்று கூறுவதில் நீ சிறிதும் சந்தேகப்பட வேண்டியதில்லை என்று பகவான் கிருஷ்ணன் கூறுகிறார் .

கேசவா, எனக்கும் உங்களுக்கும் பிறவிகள் ஏற்பட்டுவிட்டன .ஏனெனில் உங்கள் பிறவி எப்படிப்பட்டது என்னுடையவும் , மற்றவர்கள் உடைய பிறப்பு எவ்விதம் எனச் சிந்திக்கிறான் அர்ஜுனன் .
அர்ஜுன் சிந்திக்கிறான் என்று நினைத்து அதை விளக்குவதற்காக பகவான் தம் அவதார தத்துவத்தைக் கூறுகிறார் .

நான் பிறப்பற்றவன் ,அழிவற்றவன் அதாவது எனக்குப் பிறப்பும், அழிவும் எப்பொழுதுமே கிடையாது . ஆயினும் , நான் சாதாரண மனிதன் போலப் பிறப்பற்றவனாகவும் இறப்பவனாகவும் தோன்றுகிறேன் . நான் எல்லா உயிரினங்களுக்கும் ஈசுவரன் ஆயினும் கூட ஒரு சாதாரண மனிதன் போலத் தோற்றமளிக்கிறேன். என்னுடைய அவதார ரகசியத்தை அறியாத மாந்தர் , மச்சம், கூர்மம் ,வராகம் , மனிதம் முதலிய உருவகங்களில் நான் அவதாரம் செய்யும் போது பிறந்ததாகவும் ,நான்மறையும் போது அவை அழிந்ததாகவும் நினைக்கிறார்கள் .

அந்த அந்த அவதாரங்களில் என் திவ்ய லீலைகளைக் காட்டும் போது தம்மைப் போன்ற சாதாரணப் பிறவியாக நினைத்து என்னை அவமதிக்கிறார்கள் . மக்களுக்காக எல்லா வல்லமைகளும் படைத்த சாட்சாத் பூர்ண பிரம்ம பரமாத்மாவே உலகின் நன்மைக்காக இவ்விதம் அவதாரம் செய்த லீலைகள் புரிகிறார் என்பது தெரியாது . ஏனெனில் நான் அப்போது யோக மாயை என்ற நிலையில் ஒளிந்து கொள்வேன் அதனால் உலகம் என்னை கண்டு கொள்வதில்லை .

கேசவா , சாதாரண ஜீவராசிகள் பிறந்து இறப்பதற்கும், தாங்கள் அவதரித்து மறைவதற்கும் என்ன வித்யாசம் எனக் கேட்கிறான் அர்ஜுனன் .

அர்ஜுனா, ஜீவராசிகளின் பிறப்பு தங்கள் வினைப்பயனுக்கு ஏற்றபடி விளையும் . எனது பிறப்பு எனது இச்சைப்படி தெய்வீகமாக தேவைக்கு ஏற்றபடி பிறக்கிறேன் . மனிதர்களின் கர்மவினைப்பயனால் மறுபிறவி தோன்றுகிறது . எனது அவதாரத்தில் நான் விரும்பும் இடத்தில் விரும்பிய உருவத்தில் அவதாரம் எடுப்பேன், மறையவும் செய்வேன். எனது விருப்பப்படி உருவத்தை பெரிதாகவும் ,சிறிதாகவும் செய்து கொள்ள என்னால் முடியும். இது பிறப்பு, இறப்புகள் அடங்காது .இது எனது அவதார லீலைகள் என விவரிக்கிறார் கிருஷ்ணன் .

கேசவா , தாயார் தேவகியின் கர்பத்தில் இருந்து சாதாரண மனிதப்பிறவிபோலத்தானே தாங்கள் பிறந்திருக்க வேண்டும். பின் சாதாரண மனிதப் பிறவிக்கும் பகவானின் அவதாரத்திற்கும் என்ன வேற்றுமை என விவரியுங்கள் எனக் கேட்கிறான் அர்ஜுனன் .

அர்ஜுனா, அன்னை தேவகி தன் முன்னால் சங்கும், சக்கரம்,கதாயுதம், தாமரை இவற்றைத் தாங்கி கிரீட குண்டலதாரியாக நான்கு கரங்களோடு தெய்வீக வடிவத்தைப் பார்த்தாள் தேவகி . பின் பகவானைப் பார்த்து பிரார்த்தித்தாள்.”அகில உலகமானவனே , உன்னுடைய சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை முதலியவற்றுடன் விளங்கும் உலகியலுக்கு அப்பாற்பட்ட இத்தெய்வீகமான உருவத்தை மறைத்துக் கொள் ” என்று வேண்டினாள். இதைக் கேட்டு தன் அவதார ரகசியத்தை அன்னை தேவகிக்குக் கூறினார் . பின் தேவகி வசுதேவர் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே தம் யோகமாயா சக்தியினால் குழந்தையானேன் . சாதாரண மனித சிசுக்களைப் போல தாயாரான தேவகியின் கர்பத்தில் இருந்து வெளிவரவில்லை .தாமாகவே தோன்றி பிறப்பு எடுப்பது என்ற லீலையை புரிய வைப்பதற்காக சாதாரண மனிதக் குழந்தையைப் போலப் பத்து மாதங்கள் தேவகியின் கர்பத்தில் இருந்தது போலவும் பிறந்தது போலவும் காட்டினேன் என்கிறார் கிருஷ்ணன் .

கேசவா, நீங்கள் எவ்வெப்பொழுது எந்தெந்தக் காரணங்களுக்காக இவ்விதம் அவதாரம் செய்தீர்கள் எனக் கேட்க அர்ஜுனன் நினைக்கும் போதே …

அர்ஜுனா , தர்மத்திற்குக் குறைவும் அதர்மத்தின் ஓங்குதலும் எப்போதெல்லாம் ஏற்படுகின்றனவோ அப்போதெல்லாம் நான் என்னைத் தோற்றுவிக்கிறேன்.

அதாவது, மக்கள் முன்னே காணக்கூடிய உருவத்துடன் வெளிப்படுகிறேன் அவதாரத்திற்குஒரு குறிப்பிட்ட காலம் கிடையாது . இந்த யுகத்தில் இந்த வருஷத்தில் இந்த மாதத்தில் இந்த நாளில் இப்படி அவதரிக்க வேண்டும் என்ற நியதியோ , ஒரு யுகத்தில் இத்தனை முறைதான் அவதரிக்க வேண்டும் என்ற நியதியோ கிடையாது . அதைத்தான் ‘எப்பொழுதெல்லாம் என்ற சொல் குறிக்கிறது .தர்மம் சீரழிந்து அதர்மம் ஓங்கும்போது அவதரிக்க வேண்டியதை உணர்ந்து அப்பொழுது அவதரிக்கிறேன் .
கேசவா , தர்மம் குறைந்து அதர்மம் ஓங்குவதை எவ்வாறு தெரிந்துகொள்வது எனக் கேட்கிறான் அர்ஜுனன் .

அர்ஜுனா, தர்மத்திற்கு எவ்விதமான கேடு விளைந்தால் பிறக்கலாம் என்பதும், எவ்விதமான பாவம் மிகுந்தால் பிறக்கலாம் என்பது தேவ ரகசியமாகும் .
ஊகிக்கலாமே தவிரத் தீர்மானிக்க முடியாது. ரிஷிகள், தர்மசீலர், பக்தர், நல்ல நடத்தை உள்ளவர்கள் மீதும் தவறு செய்யாத பலகீனமான பிராணிகளிடமும் கொடுமைகள் செய்தால் அதன் காரணமாக மனிதர்களுடைய நற்பண்புகள் அழிந்து அதர்மம் தலை தூக்கிவிட்டது என அறிந்து கொள்ளலாம்.

எடுத்துக் காட்டாக கிருகயுகத்தில் , கிரண்யகசிபுவின் ஆட்சியில் தீய குணங்களும், தீய நடத்தைகளும் மலிந்து வளர்ந்தன . சாதுக்கள், தியானம், ஜபம், தவம், பூஜை , பாராயணம், யாகம் ,தானம் முதலிய நற்செயல்கள் செய்ய தடை செய்யப்பட்டது . தேவர்கள் ,குற்றமற்ற மக்கள் கொடுமை செய்யப்பட்டார்கள் ஹரிபக்தன் என்பதால் பிரகலாதனுக்கு பலவிதமான கொடுமைகள் இழைக்கப்பட்டன .

அப்போதுதான் நரசிம்ம ரூபத்தில் அவதரித்தேன்.பக்தனான பிரகலாதனைக் காப்பற்றி தர்மத்தை நிலை நாட்டினேன் .இப்படித்தான் மற்ற அவதாரங்களும் நடந்தது என்றார் கிருஷ்ணன்

Share.

Leave A Reply