ஒரு ஊரில் ரங்கநாயகி என்ற பெண் வாழ்ந்து வந்தார்.மிகுந்த ஆன்மிக சிந்தனைகள் மிகுந்தவர்.அவருக்கு ஒரே ஒரு மகள் தேவி ஒருநாள் ரங்கநாயகி , கவுரி பூஜை செய்யவேண்டும் என்பதற்காக ஏற்பாடுகள் செய்து கொண்டு இருந்தார்.

அவரிடம் தேவி சென்று," அம்மா கவுரி பூஜை என்றால் என்ன ? அதன் பயன் என்ன ?என்று கேள்வி எழுப்பினாள்,கவுரி பூஜை குறித்து ரங்கநாயகி மகளுக்கு விளக்கினார்.
ஒரு சமயம் பரமசிவனும்,பார்வதியும் ஆகாய மார்க்கமாக உலகைச் சுற்றிப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். அப்போது ‘பிரபுவே நான் கவுரி பூஜை செய்ய வேண்டும்.ஆகவே என்னை பூலோகத்தில் விட்டு விடுங்கள்" என்று பார்வதி பரமசிவனிடம் ஒரு கோரிக்கை வைத்தாள்.
பரமசிவனும் ‘அப்படியே ஆகட்டும் ‘ என்று சம்மதித்தார்.தேவியானவள் மனித உருக்கொண்டு அழகாபுரி என்ற ஊருக்குச் சென்று பூஜை செய்வதற்காக முதலில் ஒரு வீட்டைப் பார்த்தாள்.
அந்த வீட்டுப்பெண்மணியோ வாசல் தெளிக்காமலும்,கோலம் போடாமலும் வைத்திருந்தாள்.’ இந்த வீடு எனக்கு ஏற்றது அல்ல என நினைத்த உமையவள் அடுத்த வீட்டிற்குப் போனாள்.அந்த வீட்டுப் பெண்மணியோ தலை வாசலில் அமர்ந்து கொண்டு தனது மகள் தலையில் பேன் பார்த்துக் கொண்டிருந்தாள்.இதுவும் சரிப்பட்டு வராது என்று முடிவெடுத்த பார்வதி அடுத்த வீட்டுக்குப் போனாள்.
அதிகாலையிலேயே அந்தப் பெண் கிழிந்த துணிகளை பொட்டலமாக கட்டிக்கொண்டு இருந்தாள். என்ன இந்தப்பெண்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள்.எந்தப் பெண்மணியும் அதிகாலையில் மங்களகரமாக வீட்டை வைத்துக் கொள்ளவில்லையே "பிறகு எப்படி நான் அவர்கள் வீட்டுக்குப் போவது " என்று வருத்தமுற்ற பார்வதிக்கு அடுத்த வீடு ஆச்சரியத்தை அளித்தது.
வாசல் நன்றாக தெளிக்கப்பட்டு, கோலமிட்டு வீட்டினுள் தீபம் ஏற்றி மிக மனோரம்யமாக இருந்தது.அந்த வீடு .மிக்க மகிழ்ச்சி கொண்டவளாய் அந்த வீட்டுக்குள் நுழைந்தாள் பார்வதி.
கோமதி என்ற அந்தக் குடும்பப் பெண் பார்வதியை வரவேற்றாள்..’அம்மா, நான் கவுரி பூஜை செய்ய வேண்டும் எனக்கு அனுமதி தருவாயா "என்று தாழ்மையாகக் கேட்டு அனுமதி பெற்றுக் கொண்டாள் பார்வதி.
கோமதியும் பார்வதியின் பூஜைக்கு உதவிகள் செய்தாள். கோலம் போட்டு ,தீபம் ஏற்றி நுனிவாழை இலையில் அரிசி பரப்பி, அதன் மீது வெற்றிலை பாக்கு வைத்து இரண்டு மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து பூஜையை செய்தாள் பார்வதி.
பகவானுக்கு தூப,தீப நெய்வேத்யம் செய்த பார்வதி,கோமதியை அழைத்து இந்த’ அட்சதயை ‘ எடுத்து உன் வீட்டின் மீதும் உன் தலை மீதும் போட்டுக் கொள்’ என்றாள்.
கோமதியும் அப்படியே செய்ய…. ஆச்சரியமான அற்புதம் நடந்தது. குடிசையாக இருந்த அந்த வீடு மாட- மாளிகையாக ஆகிவிட்டது.அவள் உடல் முழுவதும் தங்க-வைர நகைகள் ஜொலித்து கண்களை பறித்தன.
ஆச்சரியத்தில் வாயடைத்துப் போன கோமதி அந்த சந்தோசத்திலும் தனது கணவர் வரும் நேரமாச்சே .வீடு அடையாளம் தெரியாமல் போய்விடக் கூடாதே என்று கருதி தலை வாசலுக்கு ஓடினாள் கோமதி.
வியந்தபடியே வந்த கணவன் அதிசயித்துப் போய் ‘இது யார் வீடு? தவறிப் போய் வேறு எங்காவது வந்து விட்டேனா’ என்று கேட்டான் .கோமதி நடந்த விபரங்களை ஒன்று விடாமல் சொன்னாள்,
"கோமதி ,வந்திருப்பது பராசக்தி தான்,அவளுக்கு நீ உணவு கொடுத்தாயா ?"தாம்பூலம் கொடுத்தாயா" என்று கேட்க, அப்போது தான் கோமதிக்கு அந்தப் பெண்மணியின் நினைவு வந்தது.உடனே ,உள்ளே ஓடிச் சென்றாள் கோமதி.
அங்கே ,உமையவள் இல்லை."தாயே அறியாமல் செய்து விட்டேன்.தங்களை உபசரிக்க மறந்து எனது கணவரை எதிர் பார்த்து ஓடியது தவறு தான் மன்னித்துவிடு தாயே’ என்று கோமதி கெஞ்சினாள்.
பார்வதியின் குரல் "அசரீரியாக "ஒலித்தது. ‘பெண்ணே , என்னை மறந்து கணவரைத் தேடியது தவறல்ல.அது பெண்களின் இயல்பு தான்.வருந்தாதே", N’நீ எப்போதும் வீட்டை சுத்தமாக வைத்திருந்து என்னுடன் பூஜை செய்தாயோ அப்போதே என் மனம் குளிர்ந்து விட்டது ……
"ஒவ்வொரு ஆண்டும் கவுரி பூஜையை செய்து ஐந்து சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம் தரவேண்டும்.அவ்வாறு நீ செய்தால் நினைப்பதெல்லாம் நடக்கும்" என்று சொல்லி மறைந்தது அசரீர குரல்.
எனவே,பெண்கள் கவுரி பூஜை செய்து வாழ்க்கையில் எல்லா நலன்களையும் பெற வேண்டும் என்பது இப்புராண காலத்து கதையின் மூலம் நாம் அறியலாம். அதை உணர்ந்து வீட்டையும்,மனத்தையும் சுத்தமாக வைத்திருந்து அன்னை பார்வதியின் அருள் பெறுவோம்.
கவுரி பூஜையின் மகத்துவம் பற்றி புரிந்து கொண்ட தேவி தாயுடன் பூஜைக்கு வேண்டிய உதவிகளை செய்ய தயாரானாள்.